போலீஸ் தாக்குதலில் இறந்த தந்தை, மகன் நினைவு தினம் 22ம் தேதி மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்த முடிவு

சாத்தான்குளம்: சாத்தான்குளத்தில் போலீஸ் தாக்குதலில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் முதலாம் ஆண்டு நினைவுதினத்தை யொட்டி பொதுமக்கள் சார்பில் 22ம் தேதி மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் 20ம் தேதி ஊரடங்கை மீறியதாக வியாபாரிகள் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸை போலீசார் அழைத்துச் சென்று தாக்கி கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்தனர். அங்கு பென்னிக்ஸ் 21ம்தேதி இரவும், ஜெயராஜ் 22ம் தேதி காலையும் உயிரிழந்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டம் நடத்தியதையடுத்து சிபிசிஐடி மற்றும் சிபிஐ போலீசார் விசாரித்து இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.க்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், பால்துரை உள்ளிட்ட 10 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அதில் பால்துரை கொரோனா தாக்குதலில் உயிரிழந்தார். இதையடுத்து இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் வரும் 22ம் தேதி அவர்கள் இறந்து ஓராண்டாகிறது. இதையொட்டி சாத்தான்குளத்தில் ஊர் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் ஜெயராஜ் -பென்னிக்ஸ் ஓராண்டு நினைவேந்தல் நடத்துவது தொடர்பாக ஆலோசனை கூட்டம்  நேற்று நடந்தது. கூட்டத்தில் வரும் 22ம் தேதி மாலை 6 மணியில் இருந்து இரவு 8 மணி வரை ஜெயராஜ் - பென்னிக்ஸ் உருவ படத்துக்கு மாலையணிவித்து மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்துவது என முடிவு செய்யப்பட்டது.

Related Stories: