அரசு வேலையில் சேர்க்கும் முன் பின்னணியை பற்றி விசாரிக்க வேண்டும்: பாஜ மாநிலங்களுக்கு மேலிடம் உத்தரவு

போபால்: உத்தர பிரதேசம், கர்நாடகா, மத்திய பிரதேசம், குஜராத் உட்பட பல்வேறு மாநிலங்களில் தற்போது பாஜ தனித்து ஆட்சி செய்கிறது, மேலும் பல மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் கூட்டணி ஆட்சியிலும் இடம் பெற்றுள்ளது. சமீபத்தில், மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சவுகானின் சிறப்பு ஆலோசகராக துஷார் பன்சால் நியமிக்கப்பட்டார். இந்த நியமனம் நடந்த மறுநாளே, ‘மத்தியப் பிரதேச முதல்வரின் குழுவில் இணைந்து செயல்பட போவதில்லை’ என்று பன்சால் அறிவித்தார். இது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், பாஜ ஆளும் மாநிலங்களுக்கு கட்சி மேலிடம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில், ‘அரசு பதவிகளில் தனி நபர்களை நியமிப்பதற்கு முன்பாக, அவர்களின் கொள்கை பின்னணி குறித்து ஆராய வேண்டும். அவர்களின் அரசியல் கருத்துக்கள், அரசு தொடர்பான அவர்களின் எண்ணம், கட்சி நடவடிக்கைகள், சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள கருத்துகள் போன்றவற்றை தீவிரமாக ஆராய வேண்டும். பிரதமர் மோடி தலைமையிலான அரசு, பாஜ, ஆர்எஸ்எஸ் குறித்த அவர்களின் கருத்துகள், கொள்கைகளையும் பார்க்க வேண்டும். அதன் பிறகு பணி நியமனம் அளிக்க வேண்டும்,’ என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Related Stories:

>