×

உத்தர பிரதேசத்தில் மீண்டும் வெற்றி பெற பாஜ இரட்டை வியூகம்: மாநிலத்தை 2 ஆக பிரிக்க திட்டம்; ஜாதி கட்சிகள் கூட்டணி சேர்ப்பு

புதுடெல்லி: உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் வெற்றி பெறுவதற்காக பாஜ இரட்டை வியூக்ததை வகுத்துள்ளது. உத்தர பிரதேசத்தில் தற்போது பாஜ ஆட்சி நடக்கிறது. இதன் முதல்வராக யோகி ஆதித்யநாத் இருக்கிறார். சமீப காலமாக, இவரின் செயல்பாடு மீது கட்சி மேலிடமும், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் உள்ளிட்ட மூத்த தலைவர்களும் கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியானது. இதனால், அடுத்த தேர்தலில் இவர் மீண்டும் முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை எனப்படுகிறது.

இந்நிலையில், சில நாட்களுக்கு முன் 2 நாள் பயணமாக டெல்லி சென்ற யோகி, பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங், பாஜ தலைவர் ஜேபி.நட்டா உள்ளிட்டோரை சந்தித்து பேசினார். இதன்மூலம், தன் மீதான அதிருப்தியை நேரில் அளித்த விளக்கத்தின் மூலம் யோகி நீக்கி விட்டதாக கூறப்படுகிறது. ஆனால், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தையும் அவர் சந்தித்தார். இது, எதற்காக என்பது புதிராக இருந்தது. இந்நிலையில், யோகியின் இந்த சந்திப்புகளின் பின்னணியில், உபி தேர்தலில் பாஜ.வை மீண்டும் வெற்றி பெறச் செய்தற்கான வியூகங்கள் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

நாட்டின் மிகப்பெரிய மாநிலமாக உபி உள்ளது. இப்போது, அங்கு பாஜ அரசு மீது மக்களிடம் கடும் அதிருப்தி நிலவகிறது. எனவே, மாநிலத்தை இரண்டாக பிரித்து தேர்தலை சந்திக்க பாஜ திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. உத்தர பிரதேசத்தை இரண்டாக பிரித்து புதியதாக பூர்வாஞ்சல் என்ற புதிய மாநிலத்தை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக நிலுவையில் இருக்கிறது. தேர்தலுக்கு முன்பாக இதை செய்து விட்டால், தேர்தலை சந்திப்பது சுலபம் என்று பாஜ மேலிடம் கணக்கு போட்டுள்ளது. இதை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது.

தேர்தலில் வெற்றி பெறுவதற்கான பாஜ.வின் அடுத்த வியூகமாக, ஜாதி அரசியல் உள்ளது. சமீபத்தில் உயர் வகுப்பை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஜிதின் பிரசாத்தை அக்கட்சி வளைத்து தனது கட்சியில் சேர்த்தது. உத்தர பிரதேசத்தில்  இவருக்கு இப்பிரிவு மக்களிடம் மிகப்பெரிய ஆதரவு உள்ளது. இதேபோல், ஜாதி ரீதியிலான சிறிய கட்சிகளை கூட்டணி சேர்த்து, வெற்றியை வசமாக்க பாஜ திட்டமிட்டுள்ளது. இதற்காக, அப்னா தளம், நிஷாத் கட்சி போன்றவற்றுடன் ஏற்கனவே அமித்ஷா பேச்சுவார்த்தையை தொடங்கி விட்டார். இது தவிர, வேறு ஜாதி கட்சிகளுக்கும் வலை விரிக்கப்பட்டுள்ளது.

* பூர்வாஞ்சலுக்கு யோகி முதல்வர்?
தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில் உத்தர பிரதேசம் பிரிக்கப்பட்டால், உத்தர பிரதேச சட்டப்பேரவை தேர்தலுடன் பூர்வாஞ்சல் மாநிலத்துக்கும் தேர்தல் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த புதிய மாநிலம் அமைந்தால், அதில் 125 சட்டப்பேரவை தொகுதிகளும், 25 மக்களவை தொகுதிகளும்  இடம்பெற வாய்ப்புகள் உள்ளன. பூர்வாஞ்சல் மாநிலம் உருவாக்கப்பட்டால் பாஜ.வுக்கு தான் அதிக எம்எல்ஏ.க்கள் இருக்கின்றனர். முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் பூர்வாஞ்சலை சேர்ந்தவர்தான். அதனால், அவர் புதிய மாநிலத்தின் முதல்வராக முடியும். இதனால், உத்தர பிரதேசத்தின் முதல்வர் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.


Tags : Baja ,Uttar Pradesh , BJP's dual strategy to win back Uttar Pradesh: plan to split state into 2; Coalition of caste parties
× RELATED உதவியாளர்களிடம் ரூ.4 கோடி பறிமுதல்...