கர்நாடகாவில் புதிய சர்ச்சை தாமரை வடிவில் விமான நிலையம்: எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

ஷிவமொக்கா: கர்நாடகாவில் புதிதாக கட்டப்பட்டு வரும் விமான நிலையம், தாமரை வடிவில் கட்டப்படுவது சர்ச்சையாகி இருக்கிறது. கர்நாடகா மாநிலம், ஷிவமொக்கா தாலுகாவின் சோகானேயில் பிரமாண்டமான புதிய விமான நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இதன் வரைபடத்தை முதல்வர் எடியூரப்பா பார்வையிட்டு நேற்று வௌியிட்டார். இதில், இந்த கட்டிடம் தாமரை வடிவில் உள்ளது. இதனால், இதற்கு காவி வண்ணம் பூசப்பட்டுள்ளதா என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளது. ஷிவமொக்கா மாவட்டம் ஷிகாரிபுராவை சேர்ந்தவர் எடியூரப்பா, அதேபோல், சொரபாவை சேர்ந்தவர் ஆர்எஸ்எஸ் செயலாளர் தத்தாத்ரேயா ஹொசபெலே, அமைச்சர் கே.எஸ்.ஈஸ்வரப்பா, முன்னாள் மேலவை தலைவர் சங்கரமூர்த்தி ஆகியோர் உட்பட பாஜ தலைவர்கள் பலர் இதே மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதால் தாமரை வடிவில் விமான நிலையம் கட்டுவதாக பேச்சு எழுந்துள்ளது. இதற்கிடையே, மாநிலத்தின் 2வது பெரிய விமான நிலையமாக ஷிவமொக்கா விமான நிலையம் இருக்கும் என்று எடியூரப்பா கூறியுள்ளார்.  இந்த கட்டிடம் ரூ.384 கோடி செலவில் கட்டப்படுகிறது என்றார்.

Related Stories: