ஆழ்கடல் மீன் பிடிப்பை ஊக்கப்படுத்த புதிய படகுகள் கட்ட 90% மானியம்: அமைச்சரிடம் மீனவ சங்கம் வலியுறுத்தல்

சென்னை: ஆழ்கடல் மீன் பிடிப்பை ஊக்கப்படுத்த மீனவர்கள் புதிய படகுகள் கட்டும் போது 90% விகிதம்  மானியம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர் சங்கத்தினர் அமைச்சரிடம் நேரில் வலியுறுத்தினர். சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். அப்போது அகில இந்திய மீனவர் சங்கத்தின் சார்பில் தேசிய செயல் தலைவரும், தேசிய செய்தி தொடர்பாளருமான நாஞ்சில் பி.ரவி கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: காசிமேடு மீன்பிடி துறைமுகத்தை மீன்வள பூங்காவாக அறிவிக்க வேண்டும். மீனவர்கள் தற்போது பயன்படுத்தும் டீசல் அளவை உயர்த்தி வழங்க வேண்டும்.

மீனவர்கள் உயிர்காக்க புதிய படகுகள் தமிழகத்தில் 10 இடங்களில் நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர்கள் கடலில் காணாமல் போனால் கண்டுபிடிக்க தமிழகத்திற்கு 2 ஹெலிகாப்டர், சென்னையில் ஒன்றும் தூத்துக்குடியில் ஒன்றுமாக நிறுத்த வேண்டும். ஆழ்கடல் மீன் பிடிப்பை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள 14 கடலோர மாவட்டத்தில் உள்ள  மீனவர்கள் புதிய படகுகள் கட்டும் போது 90% விகிதம் மானியம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  மதிப்புக் கூட்டப்பட்ட மாசி கருவாடுகள், தளப்பத்து கருவாடுகள், கரடி,கொப்பரா கருவாடுகள், வண்ணாத்தி கருவாடுகள், சென்னாக்கூனி, நெத்திலிக் கருவாடு உள்ளிட்ட பல மீன்கள் மீன் கருவாடு வகைகளை உலக நாடுகள் முழுவதும் ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: