டெஸ்ட் போட்டிகளில் வெஸ்ட் இண்டீசுக்கு 200வது தோல்வி

செயின்ட் லூசியா: வெஸ்ட் இண்டீஸ் அணி டெஸ்ட் போட்டிகளில் தனது 200வது தோல்வியை சந்தித்துள்ளது. தென் ஆப்ரிக்க அணியுடன் டேரன் சம்மி தேசிய ஸ்டேடியத்தில் நடந்த முதல் டெஸ்டில், வெஸ்ட் இண்டீஸ் அணி இன்னிங்ஸ் மற்றும் 63 ரன் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. முதல் இன்னிங்சில் அந்த அணி 97 ரன்னில் சுருண்ட நிலையில், தென் ஆப்ரிக்கா 322 ரன் குவித்தது. டி காக் ஆட்டமிழக்காமல் 141 ரன் விளாசினார். இதைத் தொடர்ந்து, 225 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 162 ரன்னுக்கு சுருண்டது. ரோஸ்டன் சேஸ் அதிகபட்சமாக 62 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் வெளியேறினர்.

தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் காகிசோ ரபாடா 5, அன்ரிச் நோர்ட்ஜ் 3, மகராஜ் 2 விக்கெட் வீழ்த்தினர். டி காக் ஆட்ட நாயகன் விருது பெற்றார். டெஸ்ட் போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் சந்தித்த 200வது தோல்வியாக இது அமைந்தது. இந்த வரிசையில் இங்கிலாந்து (308 தோல்வி), ஆஸ்திரேலியா (226 தோல்வி) அணிகளுக்கு அடுத்து 3வது இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் உள்ளது. வெளிநாட்டு மைதானங்களில் தொடர்ச்சியாக 9 டெஸ்டில் தோற்றிருந்த தென் ஆப்ரிக்க அணி, மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளது. தென் ஆப்ரிக்கா 1-0 என முன்னிலை வகிக்க, 2வது மற்றும் கடைசி டெஸ்ட் இதே மைதானத்தில் 18ம் தேதி தொடங்குகிறது.

Related Stories: