யூரோ கோப்பை கால்பந்து ரஷ்யாவை வீழ்த்தியது பெல்ஜியம்: லூகாகு அசத்தல்

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்: யூரோ கோப்பை கால்பந்து போட்டித் தொடரின் பி பிரிவு லீக் ஆட்டத்தில் பெல்ஜியம் அணி 3-0 என்ற கோல் கணக்கில் ரஷ்யாவை வீழ்த்தியது. பீட்டர்ஸ்பர்கில் நடந்த இப்போட்டியில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய பெல்ஜியம் அணி, இடைவேளையின்போது 2-0 என முன்னிலை வகித்தது. அந்த அணியின் ரோமெலு லூகாகு 8வது நிமிடத்திலும், மியூனியர் 34வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இரண்டாவது பாதியிலும் பெல்ஜியம் அணியின் கையே ஓங்கியிருந்தது. ஆட்டத்தின் 88வது நிமிடத்தில் லூகாகு மேலும் ஒரு கோல் போட்டு அசத்தினார். பெல்ஜியம் அணி 3-0 என்ற கோல் கணக்கில் முதல் வெற்றியை பதிவு செய்து 3 புள்ளிகளை பெற்றது. லூகாகு ஆட்ட நாயகன் விருது பெற்றார். பி பிரிவில் பெல்ஜியம் (3 புள்ளி), பின்லாந்து (3 புள்ளி) முதல் 2 இடங்களில் உள்ளன. டென்மார்க் (0), ரஷ்யா (0) பின்தங்கியுள்ளன.

* மாரடைப்பால் மயங்கினார் எரிக்சன்

முன்னதாக, கோபன்ஹேகனில் பின்லாந்து - டென்மார்க் அணிகள் மோதிய பி பிரிவு லீக் ஆட்டத்தின்போது டென்மார்க் வீரர் கிறிஸ்டியன் எரிக்சன் (29 வயது) திடீரென களத்திலேயே மயங்கி விழுந்தார். பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்த அவருக்கு, சமயோஜிதமாக செயல்பட்ட சக வீரர் சைமன் ஜேயர் மார்பை அழுத்தியும் வாய் வழியாக ஊதியும் சுவாசம் மற்றும் இதயத்துடிப்பை மீட்பதற்கான ‘சிபிஆர்’ அவசர சிகிச்சையை அளித்தார். அதே சமயம் களத்துக்குள் வந்த மருத்துவர்களின் உதவியுடன் எரிக்சன் ஸ்ட்ரெச்சரில் வைத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதனால் ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. சக வீரர்கள் கண்ணீர் வடித்தபடி சோகமே உருவாக நின்றிருந்தனர். எரிக்சன் கண் விழித்தார் என்ற தகவல் மைதானத்தில் இருந்த ஒலிபெருக்கி மூலமாக அறிவிக்கப்பட்ட பின்னர் தான் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பினர். பின்னர் தொடர்ந்த ஆட்டத்தில் பின்லாந்து 1-0 என்ற கோல் கணக்கில் வென்றது. ரஷ்ய அணிக்கு எதிராக 2 கோல் அடித்த லூகாகு, அவற்றை தனது நண்பர் எரிக்சனுக்கு அர்ப்பணித்தார். ‘கிறிஸ், கிறிஸ்... ஐ லவ் யூ’ என அவர் கேமரா முன்பாக கதறியது அனைவரையும் கலங்க வைத்தது. இருவரும் இன்டர் மிலன் கிளப் அணிக்காக இணைந்து விளையாடி உள்ளது குறிப்பிடத்தக்கது. எரிக்சனின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories: