வேதாரண்யம் பகுதியில் பலத்த மழை 6 லட்சம் டன் உப்பு உற்பத்தி பாதிப்பு: பனை ஒலைகள் கட்டி பாதுகாக்கும் பணி தீவிரம்

வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடியக்காடு, கடினல்வயல் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் தூத்துக்குடிக்கு அடுத்தப் படியாக உப்பு உற்பத்தியில் இரண்டாவது இடம் வகிக்கும் வேதாரண்யத்தில் ஆண்டொன்றுக்கு 6 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படும். வழக்கமாக ஜனவரி மாதத்தில்  துவங்கும் உப்பு உற்பத்தி, இந்தாண்டு தாமதமாக பிப்ரவரியில் துவங்கி  நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நிலையில் நேற்று முன்தினம் இரவு ஒரு மணி நேரம் மழை வெளுத்து வாங்கியது. ஒரு மணி நேரத்தில் 3 சென்டிமீட்டர் பெய்த மழையால் உப்பள பாத்திகளில் மழைநீர் குளம்போல் தேங்கியது. இதனால் உப்பு வாரும் பணி பாதிக்கப்பட்டது.

கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், உப்பு உற்பத்தி செய்யப்பட்ட நிலையில், நேற்று முந்தினம் இரவு மழை பெய்ததால் பாத்திகளில் மழைநீர் தேங்கி முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பணி  நடைபெற்று வருகிறது. மழைநீர் வடிந்து மீண்டும் உற்பத்தி செய்ய ஒரு வாரகாலம் ஆகும் என உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். சேமித்து வைக்கப்பட்டுள்ள உப்பை தார்பாய் மற்றும் பனை ஓலைகளைக் கொண்டு மூடி பாதுகாக்கும் பணியில்  தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆண்டு உற்பத்திக்கான 6 லட்சம் டன் இந்த ஆண்டு எட்ட முடியாது என்றும், உப்பு உற்பத்தி கணிசமான அளவு, அவ்வப்போது பெய்த மழையினால் பாதிக்கப்படுவதால் விலை ஏறும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் உப்பு உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.

Related Stories: