ஏரியில் விஷம் கலப்பா? செத்து மடிந்த மீன்கள், வெளிநாட்டு பறவைகள்: பேரணாம்பட்டு அருகே பரபரப்பு

ஆம்பூர்: வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு தாலுகா ராஜக்கல் ஊராட்சி ரெட்டிமாங்குப்பம் அருகே 30 ஏக்கர் பரப்பளவில் பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரி கடந்த 2019ம் ஆண்டு பல லட்சம் செலவில் தூர் வாரி குடிமராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தற்போது இந்த ஏரி சமீபத்தில் பெய்த மழையால் நிரம்பியுள்ளது. இங்குள்ள சீதோஷ்ண நிலை காரணமாக ஏராளமான வெளிநாட்டு பறவைகள் இங்க வந்துள்ளன. இந்நிலையில், நேற்று காலை அவ்வழியாக சென்ற சிலர், ஏரியில் ஏராளமான மீன்கள், பாம்பு மற்றும் வெளிநாட்டு பறவைகள் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து ஆம்பூர் வனச்சரகருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து வந்த வனத்துறையினர் மீன்கள், பறவை இறப்பிற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும் ஏரி தண்ணீரை கால்நடைகள் குடிக்காத வகையில் அப்பகுதி மக்களுக்கு வனத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். தொடர்ந்து ஏரியில் யாராவது விஷம் கலந்தார்களா? அல்லது வேறு ஏதாவது காரணமாக மீன்கள், பறவைகள் செத்து மிதந்ததா? என்பது குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஏரியில் உள்ள தண்ணீர் மாதிரி மற்றும் செத்து மடிந்த மீன்கள், பறவைகளை சேகரித்து ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

Related Stories: