உயர் கல்வி மாணவர்கள் சேர்க்கை ஒரு வாரத்தில் முடிவு தெரியும்: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

கரூர்: உயர் கல்வி மாணவர்கள் சேர்க்கை ஒரு வாரத்தில் முடிவு தெரியும் என கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார். தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கரூர் மாவட்ட மைய நூலகம் மற்றும் பல்வேறு பள்ளிகளில் நேற்று காலை ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தனியார் பள்ளிகளை பொறுத்தவரை கட்டண வசூல் விஷயத்தில் கட்டாயப்படுத்த கூடாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, கொரோனா சமயத்தில் 75 சதவீதம், அதாவது,  30 சதவீதம் ஒரு தவணை, 45 சதவீதம் ஒரு தவணை என கூறப்பட்டுள்ளது. அதன்படி, நடந்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. உயர்கல்வியில் மாணவர்கள் சேர்க்கை குறித்து  கமிட்டி அமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த வாரம் அதற்கான முடிவுகள்  தெரியும்.

பள்ளிக் கல்வித்துறையை பொறுத்தவரை எங்களின் பணி என்பது, எங்காவது தவறு நடந்தாலோ, கவனத்துக்கு வந்தாலோ, அடுத்த நிமிடமே, அந்தந்த பகுதி முதன்மை கல்வி அலுவலர்கள் விளக்கம் கேட்கின்றனர். விளக்கம் தரும்போது, உண்மை தன்மை இருக்கும்பட்சத்தில் அங்கேயே நிர்வாகம் மூலம் ஆசிரியர்களாக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதில், எந்தவொரு பாராபட்சமும் பார்ப்பதில்லை. நீட் தேர்வை பொறுத்தவரை ஏற்கனவே ஒரு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. அந்த கமிட்டி  என்ன அறிக்கை தருகிறதோ? அதை வைத்து நடவடிக்கை எடுக்கப்படும். நாளை முதல்வரை சந்திக்க உள்ளோம். அவரை சந்தித்துவிட்டு, மாணவர் சேர்க்கை, பாடப்புத்தகங்கள் வழங்கப்படுவது  குறித்து அறிவிக்கப்படும். பள்ளி திறப்பது சம்பந்தமாக இந்த ஆய்வுகள்  மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எங்களைப் பொறுத்தவரை தயார் நிலையில்  இருக்கிறோம். இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.

Related Stories:

>