புதுகை நெடுவாசல் அருகே ஹைட்ரோகார்பன் திட்ட ஏல அறிவிப்பு கிராம மக்கள் அரை நிர்வாண போராட்டம்: ஒன்றிய அரசுக்கு எதிராக எண்ணெய் கிணற்றில் திரண்டனர்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் அருகே உள்ள கருக்காகுறிச்சி வடத்தெரு ஊராட்சிக்கு உட்பட்ட வடத்தெருவில் 463 சதுர கிலோ மீட்டருக்கு ஹைட்ரோ கார்பன் திட்ட மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் ஏல அறிவிப்பை கடந்த 10ம் தேதி  வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த அறிவிப்பு கருக்காகுறிச்சி வடத்தெரு மற்றும் சுற்றுவட்டார கிராம மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த பிறகும், அந்த பகுதியில் விளைநிலங்களை பாழ்படுத்தும் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்த ஒன்றிய அரசு முயற்சிக்கிறது.

இந்த திட்டத்தை ஒருபோதும் செயல்படுத்த விடமாட்டோம். இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் விவசாயம் முற்றிலுமாக அழிந்துவிடும் என்று ஒன்றிய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக புதுக்கோட்டை வடத்தெரு அருகே உள்ள கோட்டைக்காடு பகுதியில் ஓஎன்ஜிசி நிறுவனத்தால் 20 ஆண்டுகளுக்கு முன் சோதனைக்காக போடப்பட்டுள்ள எண்ணெய் கிணறு பிளான்ட் மீது ஏறி அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நேற்று சட்டை அணியாமல் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஒன்றிய அரசின் இந்த திட்டத்தை ஒருபோதும்  தமிழக அரசு அனுமதிக்க கூடாது. தமிழக அரசு இந்த திட்டத்தை தடுத்து நிறுத்த உடனடியாக அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென அப்பகுதி  விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>