வங்கி கணக்கு விவரங்களை பெற்று வயதான தம்பதியிடம் ரூ.24 லட்சம் மோசடி: வேலைக்காரர் கைது

பல்லாவரம்: கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (71). இவர், பம்மல் வஉசி நகர் ஆறுமுகம் தெருவில் வாடகை வீட்டில் மனைவி மீனாட்சியுடன் தங்கி, அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். முகப்பேர் பகுதியில் உள்ள தனியார் காப்பகத்தில் பணிபுரிந்து வந்த கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த குழந்தை சாமியை (40), தங்களது வீட்டு வேலைக்கு அமர்த்தினர். இவர், சுப்பிரமணியனின் வங்கி கணக்கில் வரவு, செலவு கணக்குகளையும் கவனித்து வந்தார். இந்நிலையில், சுப்பிரமணி வங்கி கணக்கில் இருந்து பல தவணைகளில் ரூ.24 லட்சம் மாயமானது தெரியவந்தது. இதுகுறித்து குழந்தைசாமியிடம் கேட்டபோது, தனக்கு ஏதும் தெரியாது என கூறியதுடன், திடீரென தலைமறைவாகிவிட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் சங்கர் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து நேற்று முன்தினம் இரவு கள்ளக்குறிச்சியில் பதுங்கியிருந்த குழந்தைசாமியை கைது செய்தனர். விசாரணையில், அவர் பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டார். அவர் மீது வழக்குப்பதிவு செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories:

>