நள்ளிரவில் சொகுசு காரில் நோட்டமிட்டு ஆடு, கோழிகளை திருடிய தம்பதி கைது

சென்னை: சென்னை பாடி ஜெகதாம்பிகை நகர் வள்ளலார் தெருவை சேர்ந்த பூபாலன் (37), அதே பகுதியில் இறைச்சி கடை நடத்தி வருகிறார். கடந்த மாதம் 29ம் தேதி இரவு, இவரது கடைக்கு வெளியே கூண்டில் வைத்திருந்த 15 நாட்டுக்கோழிகள் திருடு போனது. அதேபோல், கொரட்டூர், போத்தியம்மன் கோயில் தெருவை சேர்ந்த இந்திரா (56), வீட்டு முன்பு கட்டி வைத்திருந்த 2 ஆடுகள், கடந்த மாதம் 2ம் தேதி இரவு திருடுபோனது. இதுகுறித்த புகாரின் பேரில் கொரட்டூர் போலீ சார், சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது, ஒரு ஆணும், பெண்ணும், கைக்குழந்தையுடன் சொகுசு காரில் வந்து ஆடு, கோழிகளை திருடிச்சென்றது தெரியவந்தது. அந்த காரின் பதிவு எண்ணை வைத்து திருடர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில், கொரட்டூர் 200 அடி சாலையில் நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, திருட்டில் ஈடுபட்ட கார் அந்த வழியாக வந்தது. அதை நிறுத்தி சோதனையிட்டபோது, காரில் ஒரு ஆணும், பெண்ணும் கைக்குழந்தையுடன் இருந்தனர். விசாரணையில், ஈக்காட்டுதாங்கல் சுந்தர் நகர் 6வது தெருவில் சேர்ந்த அஷ்ரப் (38), அவரது மனைவி லட்சுமி (36)  என்பதும், இவர்கள் நள்ளிரவில் காரில் வந்து, பல்வேறு பகுதிகளில் நோட்டமிட்டு சாலையோரம் உள்ள கோழி, ஆடுகளை திருடி விற்றதும் தெரிந்தது. அவர்களிடமிருந்து ஆடு, கோழிகளை பறிமுதல் செய்து, கைது செய்தனர்.

Related Stories:

>