தமிழகம் முழுவதும் இன்று திறக்கப்படும் நிலையில் டாஸ்மாக் கடைகளில் மது விற்க கடும் கட்டுப்பாடு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அமலாகும் நிலையில் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகின்றன. டாஸ்மாக் கடைகளில் பணியாளர்கள் பின்பற்ற வேண்டிய கடுமையான வழிகாட்டு நெறிமுறைகளை டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தநிலையில் இன்று முதல் 21ம் தேதி வரை கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு அமலாகிறது. இந்த ஊரடங்கில் தொற்று பாதிப்பு குறைந்த 27 மாவட்டங்களில் கடும் கட்டுப்பாடுகளுடன் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ளது. அந்தவகையில், டாஸ்மாக் கடைகளில் பணியாளர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை டாஸ்மாக் நிர்வாகம் நேற்று வெளியிட்டது.  

வழிகாட்டு நெறிமுறைகளில் கூறியிருப்பதாவது:

*  அனைத்து பணியாளர்களும் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை பணியில் இருக்க வேண்டும். பணியாளர்கள் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும்.

* கடை பணியாளர்களில் 55 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் பணியில் இருக்க வேண்டும். கூட்டம் கூடுவதை கட்டுப்படுத்த தடுப்பு வேலி அமைக்க வேண்டும்.

*  மதுபானம் வாங்க வருபவர்களின் கூட்டத்தை 2 பணியாளர்கள் வெளியில் இருந்து ஒழுங்கு படுத்த வேண்டும்.

* மது வாங்கவருபர்கள் மாஸ்க் அணிந்து வரவேண்டும். இல்லாவிட்டால் மதுபானம் வழங்க கூடாது.

* டாஸ்மாக் கடைகள் திறக்கும் பொழுதும், மூடும் பொழுதும் உட்புறம், வெளிப்புறம் கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். ஒருநாளைக்கு இரண்டு முறை பிளிச்சிங் பவுடர் தெளிக்க வேண்டும்.

* மதுபானம் வாங்க வருபவர்களுக்கு இடையில் 6 அடி இடைவெளி இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஒரு நேரத்தில் 5 நபர்களுக்கு மேல் அனுமதிக்கக் கூடாது.

* குறைந்தபட்சம் 2 பணியாளர்கள் மதுபான சில்லறை விற்பனை கடையில் வெளிப்புறம் நின்று சமூக இடைவெளி, வாடிக்கையாளர் முகக்கவசம் அணிந்துள்ளனரா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

* மதுபானம் வாங்க வரும் நபர்களுக்கு சானிடைசர் வழங்கிய பின்னரே கடைக்குள் அனுமதிக்க வேண்டும். மதுபானம் வாங்கிச்செல்லும் நபர்கள் பொது இடங்களில் அமர்ந்து மதுபானம் அருந்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

* மதுபானம் வாங்க வரும் நபர்களுக்கு அதிக அளவில் மதுபானம் வழங்க கூடாது. மதுபான சில்லறை விற்பனைக் கடையின் விற்பனையினை கட்டாயம் மாலை 5 மணிக்குள் முடித்திருக்க வேண்டும்.

* விற்பனையின் போது சமூக ஆர்வலர்களை பணிக்கு பயன்படுத்திக் கொள்ளவும், காவல்துறை பாதுகாப்பு பெற்றுக் கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேற்கண்ட அறிவுரைகளை சரியாக பின்பற்றாமலும், பணிக்கு வராமலும் உள்ள மதுபான சில்லரை விற்பனைக் கடை பணியாளர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டுள்ளது. அறிவுரைகளை சரியாக பின்பற்றாத மதுபான சில்லரை விற்பனைக் கடை பணியாளர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

Related Stories: