பணிநிரந்தரம் செய்வதாக கூறி அதிமுக ஆட்சியில் 200 ஆம்புலன்ஸ் டிரைவர்களிடம் ரூ.4 கோடி பணவசூல்: நடவடிக்கை எடுக்க அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவு

சென்னை: ஆம்புலன்ஸ் டிரைவர்களிடம் அதிமுக ஆட்சியில் பணி நிரந்தரம் செய்வதாக கூறி ரூ.4 கோடி வசூல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அமைச்சர் வெளியிட்ட அறிக்கை: நடமாடும் மருத்துவமனையில் 200 ஊர்தி ஓட்டுநர்கள் 2008ம் ஆண்டு முதல் தற்காலிக பணியாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். அதிமுக ஆட்சியில் அவர்களை பணிநிரந்தரம் செய்து தருவதாக கூறி சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஓட்டுநர் பார்த்தசாரதி, வெற்றிவேல் மற்றும் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த முருகேசன் ஆகியோர் 2018 செப்டம்பர் 9ம் தேதி சுமார் ரூ.3 கோடி முதல் ரூ.4 கோடி வரை 200 ஊர்தி ஓட்டுநர்களிடமும் வசூல் செய்து பண முறைகேட்டில் ஈடுபட்டனர். இதுபற்றி ஊர்தி ஓட்டுநர்கள் புகார் மனு அளித்தனர். இதையடுத்து மருந்து துறை இயக்குநர் செல்வ விநாயகத்திடம் மேற்கண்ட நபர்கள் மீது துறை ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. மேலும் அவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்குமாறு சென்னை மத்திய குற்ற புலனாய்வு பிரிவு துணை ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>