பாடப் புத்தகமும் வினியோகம் இன்று முதல் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: அரசு அறிவிப்பு

சென்னை: அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில்  இன்று மாணவர்கள் சேர்க்கை தொடங்க உள்ளது. மேலும் மாணவ மாணவியருக்கு இலவச பாடப்புத்தகங்களும் வழங்கப்படுகிறது. இதையடுத்து அனைத்து ஆசிரியர்களும் இன்று பள்ளிக்கு வர வேண்டும் என்று கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவல் தொடங்கியதை அடுத்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. பின்னர் டிசம்பர் மாதம் 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுகாக மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டன.

இருப்பினும் இந்த ஆண்டு மார்ச் மாதம் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியதை அடுத்து, மீண்டும் பள்ளிகள் கல்லூரிகள் மூடப்பட்டு, பொதுத் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், இந்த கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் தொடங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் கொரோனா பரவலும் குறையத் தொடங்கியதை அடுத்து, தற்போது பள்ளிகளை திறக்க பள்ளிக் கல்வித்துறை முன் வந்துள்ளது. இதையடுத்து, 14ம் தேதி அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக் கு வர வேண்டும் என்று ஏற்கெனவே அறிவித்துள்ளது. இந்த கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 வகுப்பில் மாணவர்கள் சேர்க்கை நடத்த வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை ஆணையர் கடந்த 7ம் தேதி வெளியிட்டு இருந்தார்.

அதில், பிளஸ் 1 வகுப்பில் சேர்வதற்கு மாணவர்கள் எந்த பாடப்பிரிவுக்கு அதிக அளவில் விண்ணப்பிக்கிறார்களோ அவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப பாடப்பிரிவுகளை ஒதுக்கலாம். ஒரே பாடப் பிரிவுக்கு அதிக அளவில் விண்ணப்பங்கள் வரும் பட்சத்தில் பத்தாம் வகுப்பு பாடத்தில் இருந்து கேள்விகள் கேட்டு தேர்வு நடத்தி அதில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களை கொண்டு சேர்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும், இந்த கல்வி ஆண்டில்(2021-2022) பிளஸ் 1 வகுப்பு மாணவர் சேர்க்கை குறித்து ஏற்கெனவே வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டன.

அந்த வழிகாட்டு நெறிமுறையில் அனைத்து அம்சங்களும் அப்படியே உள்ள நிலையில், 4வது பத்தியில் சில மாற்றங்கள் செய்து, பிளஸ் 1 சேர்க்கைக்கு மிக அதிகப்படியான விண்ணப்பங்கள் எந்த பாடப்பிரிவுக்கு வரப் பெறுகிறதோ, அந்த சூழ்நிலையில் அதற்கென விண்ணப்பித்த மாணவர்களின் 9ம் வகுப்பு மதிப்பெண்களை அடிப்படையாக கொண்டு மாணவர்களின் விருப்பத்தின்படி பிரிவுகளை ஒதுக்கீடு செய்யலாம். மேலும், 7ம் தேதி வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளவாறு 10ம் வகுப்பு பாடத்தின் அடிப்படையில் தேர்வு எதுவும் நடத்தத் தேவையில்லை. என்று பள்ளிக் கல்வி ஆணையர் அறிவுறுத்தி இருந்தார்.

இந்நிலையில், இந்த கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் விரைவில் தொடங்க உள்ளன. அதற்கேற்ப அந்தந்த வகுப்புகளில் மாணவர் சேர்க்கையும் இன்று தொடங்குகிறது. பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டதால், அந்த மாணவர்களுக்கான தேர்ச்சி மதிப்பெண்கள் கணக்கிடும் பணியும்  இன்று தொடங்க உள்ளது. மேலும், கீழ் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள் ஒவ்வொரு பருவத்துக்கும் வழங்கும் பணியும் இன்று தொடங்க உள்ளது. இதையடுத்து ஆசிரியர்கள் பணிக்கு வர வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை ஏற்கெனவே அறிவித்து இருப்பதால் அனைத்து ஆசிரியர்களும் இன்று பள்ளிக்கு வருகின்றனர். மாணவர் சேர்க்கை, பாடப் புத்தங்கள் வினியோகம் ஆகியவற்றில் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

>