×

ஊரடங்கில் புதிய தளர்வுகள் அறிவிப்பு டீ கடைகள் இன்று முதல் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

* காலை 6 முதல் மாலை 5 மணி வரை பார்சல் மட்டும்
* கட்டுமான நிறுவன அலுவலகங்கள் இயங்கலாம்
* இ-சேவை மையம் செயல்படும்
* இனிப்பு, கார வகை கடைகளுக்கும் அனுமதி

சென்னை: கொரோனா தொற்று குறைந்துள்ள 27 மாவட்டங்களில் இன்று முதல் தேநீர் கடைகள் மற்றும் இ-சேவை மையங்கள் இயங்க அனுமதி வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்த கடந்த  31.5.2021 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் முழு ஊரடங்கு நல்ல பலனை அளித்துள்ளது. இந்தநிலையில், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படக்கூடாது என்ற நோக்கத்தில், நோய்ப் பரவல் முழுமையாக கட்டுக்குள் வராத கோவை உள்ளிட்ட ஏழு மேற்கு மாவட்டங்கள் மற்றும் தஞ்சை உள்ளிட்ட நான்கு டெல்டா மாவட்டங்கள் தவிர்த்த பிற மாவட்டங்களில் தளர்வுகள் சற்று விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளன.

இதன் தொடர்ச்சியாக பல்வேறு தரப்பினரிடமிருந்து வரப்பெற்ற கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு, மேற்படி 11 மாவட்டங்கள் தவிர்த்து, தமிழ்நாட்டின் இதர 27 மாவட்டங்களில் 14.6.2021 முதல், தேநீர்க் கடைகள் காலை 6 மணி முதல், மாலை 5 மணி வரை பார்சல் முறையில் மட்டும் வழங்க அனுமதி அளிக்கப்படுகிறது. பார்சல் முறையில்  தேநீர் வாங்க வரும் பொது மக்கள் பாத்திரங்களைக் கொண்டு வந்து பெற்றுச் செல்ல வேண்டும். நெகிழி பைகளில் தேநீர் பெறுவதைத் தவிர்க்க வேண்டும்.  கடைகளின் அருகே நின்று தேநீர் அருந்த அனுமதி இல்லை. மேலும் பேக்கரிகள், உணவகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது போல, இனிப்பு கார வகைகள் விற்கும் கடைகளுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது.  இவை காலை 8 முதல் மதியம் 2 மணி வரை இவை இயங்கலாம்.  இங்கும் பார்சல் முறை விற்பனை மட்டும் அனுமதிக்கப்படுகிறது.

பொது மக்களின் நலன் கருதி, அரசு அலுவலகங்களிலிருந்து சான்றிதழ்கள் மற்றும் சேவைகளைப் பெற இ-சேவை மையங்கள் 14.6.2021 முதல் இயங்க அனுமதி வழங்கப்படுகிறது. கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அப்பணிகளுக்கான அலுவலகங்கள் இயங்காத நிலையில் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கவும், வாங்கும் கட்டுமானப் பொருட்களுக்கு பணம் செலுத்தவும் உள்ள பணித் தேவைகளை கருத்தில் கொண்டு, கட்டுமான நிறுவனங்களின் அலுவலகங்கள் 50 சதவிகிதப் பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது. இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. கட்டுமான பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கவும், கட்டுமானப் பொருட்களுக்கு பணம் செலுத்தவும் கட்டுமான நிறுவனங்களின் அலுவலகங்கள் 50 சதவிகிதப் பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது.

Tags : Stalin , New relaxation in curfew Tea shops open today: Chief Minister MK Stalin's order
× RELATED இந்த தேர்தல் மூலம் யார் சரியானவர்,...