தமிழ்நாட்டின் எந்தப் பகுதியையும் ஹைட்ரோ கார்பன் ஏலத்திற்காக அறிவிக்கக் கூடாது: ஒருபோதும் அனுமதி வழங்கப்படாது: பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் !

சென்னை: டெல்டா மாவட்டங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான  ஏல அறிவிக்கையை நிறுத்த  வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ஒன்றிய பெட்ரோலிய அமைச்சகம் கடந்த 10ம் தேதி  ஹைட்ரோகார்பன்திட்டத்திற்கான அறிவிக்கை வெளியிட்டது. இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒன்றை கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் டெல்டா மண்டலத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தின் ஏல அறிவிக்கையை நிறுத்த வேண்டும். எதிர்காலத்தில் தமிழகத்தின் எந்தப் பகுதியையும் ஹைட்ரோ கார்பன் ஏலத்திற்காக அறிவிக்கக் கூடாது. மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் ஏலம் விட்டாலும் தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்காது. ஹைட்ரோ கார்பன் ஆய்வு, உற்பத்திச் செய்யத் தேவைப்படும் அனுமதி ஒருபோதும் வழங்கப்படாது. காவிரி படுகை வளத்தைக் கண்ணை இமை காப்பது போல் தமிழ்நாடு அரசு காக்கும். ஹைட்ரோ கார்பன் உற்பத்திக்கு ஆழ்குழாய் கிணறுகளை அமைக்கக்கூடாது என்பது தமிழ்நாடு அரசின் கொள்கை என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தொன்றுதொட்டு தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாகவும், தமிழர் நாகரிகத்தின் ஆணிவேராகவும் காவிரிப் படுகை விளங்கி வருகிறது. சோழ நாடு சோறுடைத்து என்ற சொல் நெடுங்காலமாக வழக்கத்தில் உள்ள ஒன்று. இத்தனை பெருமை கொண்ட காவிரிப் படுகை பகுதியையும், அதனைச் சார்ந்திருக்கும் விவசாயப் பெருமக்களின் நலனையும் பாதுகாப்பதில் எங்கள் அரசு உறுதி பூண்டுள்ளது. நேற்றைய தினம், மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும், காவிரிப் படுகை மாவட்டங்களில் உள்ள வாய்க்கால்கள், நீர்நிலைகளைத் தூர்வாரும் பணிகளுக்கு போதுமான நிதி ஒதுக்கி, அப்பணிகளைத் துரிதப்படுத்த அரசு ஆணையிட்டுள்ளதையும் நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

மேலும், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் ஏலம் விட்டாலும், தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் ஆய்வு மற்றும் உற்பத்தி செய்யத் தேவைப்படும் அனுமதிகளை தமிழ்நாடு அரசு ஒருபோதும் வழங்காது என்றும், தமிழ்நாட்டின் விவசாயப் பெருங்குடி மக்களின் நலனையும், காவிரிப் படுகை பகுதியின் வளத்தையும் கண்ணை இமை காப்பது போல எங்கள் அரசு காக்கும் என்றும் உறுதிபடக் கூற விரும்புகிறேன் என்று அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Related Stories: