அடுத்த ஆண்டுக்குள் 70% மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும்: உலக சுகாதார அமைப்பு

லண்டன்: அடுத்த ஆண்டுக்குள் மக்கள் தொகையில் 70% மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு, ஜி-7 உறுப்பு நாடுகளின் தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. ஜி-7 கூட்டமைப்பின் 47-வது உச்சி மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது. பிரிட்டனின் கார்ன்வால் பகுதியில் செயின்ட் ஐவ்ஸ் நகரில் உள்ள கார்பில் பே பகுதியில் இந்த மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கேப்ரியேசஸ் கலந்துகொண்டார்.

இதுகுறித்து கேப்ரியேசஸ் கூறுகையில், நம்மிடம் உள்ள சவால் இந்த கொரோனா தொற்றை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும். அடுத்த முறை ஜி-7 நாடுகளின் கூட்டம் ஜெர்மனியில் நடைபெறும்போது உலக மக்கள்தொகையில் 70% மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

ஏழை நாடுகளுக்குப் பிற நாடுகள் கொரோனா தடுப்பூசி வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கினால்தான் செப்டம்பர் மாதத்திற்குள்ளாக 10% மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த முடியும் என்று டெட்ராஸ் அதானம் கேப்ரியேசஸ் சில நாட்களுக்கு முன்னர் கூறியிருந்தார். பிரிட்டன், அமெரிக்கா, இஸ்ரேல், பிரான்ஸ், ஜெர்மனி, கனடா ஆகிய நாடுகள் அதிகப்படியாக கொரோனா தடுப்பு மருந்துகளை வாங்கியுள்ளன. ஆப்பிரிக்கா, ஆசியா கண்டங்களில் உள்ள ஏழை நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசிகள் சென்றடையாத வண்ணம் உள்ளன. இந்த நிலையில் தடுப்பூசிகள் சென்றடைவதில் சமநிலையின்மை நிலவுவதாகப் பலரும் வேதனை தெரிவித்துள்ளனர்.

Related Stories: