முக்கிய துறை அதிகாரிகளின் மெயில் ஐடிகளை ஹேக் செய்ய முயற்சி: உயர் அதிகாரிகள் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தல்

டெல்லி: ஏர் இந்தியா உள்ளிட்ட பல்வேறு தளங்களில் இருந்து திருடப்பட்ட தகவல்கள் மூலம் பாதுகாப்பு துறை உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளில் உள்ள அதிகாரிகளின் மெயில் ஐடிகளை ஹேக் செய்ய முயற்சி நடப்பதாக ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏர் இந்தியா, டோமினோஸ், பிக் பாஸ்கட் ஆகிய தளங்களில் இருந்து பல ஆயிரக்கணக்கான இந்தியர்களின் தகவல்கள் திருடப்பட்டதாக தகவல் வெளியானது.

இந்த தகவல்களை கொண்டு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல முக்கிய துறை அதிகாரிகளின் மெயில் ஐடிகளை திருட முயற்சிப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக ஒன்றிய அரசு அனுப்பியுள்ள எச்சரிக்கை அறிக்கையில் உயர் அதிகாரிகளின் வாட்ஸ்அப் கணக்குகளுக்கும், மெஸ்ஸேஜ்களுக்கும் லிங்க் ஒன்றை அனுப்பி கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டது தொடர்பான தகவல்களை அளிக்குமாறு ஹேக்கர்கள் கேட்பதாகவும் அவ்வாறு அவர்கள் அனுப்பும் லிங்குகளை திறந்தால் ஒன்றிய அரசின் அதிகாரப்பூர்வ தளத்தை போலவே இருக்கும் போலி தளத்திற்கு அழைத்து செல்லப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்ஐசி.இன் மற்றும் ஜிஓவி போன்ற முகவரிகளை குறிவைத்து தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாகவும் இதற்கான போலி லிங்குகள் மற்றும் போலி இணையப்பக்கம் பாகிஸ்தானில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதிகாரிகளின் மெயில் பக்கத்தில் இருக்கும் முக்கிய தகவல்களை திருடுவதன் மூலம் மிகப்பெரிய சதித்திட்டங்களை தீட்ட வாய்ப்புள்ளதால் உயர்அதிகாரிகள் கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: