×

வீடு வீடாக குப்பை சேகரிக்கும் திட்டத்தில் விசில் சத்தத்துக்கு பதிலாக விழிப்புணர்வு பாடல்: தொற்று பரவலை தடுக்க மாநகராட்சி ஏற்பாடு

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் 200 வார்டுகள் உள்ளன. இவற்றில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 5 ஆயிரம் டன் குப்பை வீடுகள், வணிக வளாகங்கள், ஓட்டல்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் இருந்து சேகரிக்கப்படுகிறது. தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக சென்னை மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பையின் அளவு குறைந்துள்ளது. இவ்வாறு சேகரிக்கப்படும் குப்பை தரம் பிரிக்கப்பட்டு மக்கும் குப்பை மூலம் உரம் மற்றும் மீத்தேன் எரிசக்தி தயாரிக்கப்படுகிறது. மக்காத குப்பை மறுசுழற்சி செய்யப்படுகிறது. அந்த வகையில் பொதுமக்களிடம் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு, குப்பையை தரம் பிரித்து பெறப்படுகின்றது. மேலும் வீடு வீடாக சென்று குப்பை சேகரிக்கும் தூய்மை பணியாளர்கள் குப்பை சேகரிக்கும் வண்டி வந்திருப்பதை, விசில் சத்தம் எழுப்பி அழைக்கின்றனர்.

அப்போது முககவசத்தை கழட்ட வேண்டியுள்ளது. கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக குப்பை சேகரிக்கும் ஊழியர்கள் விசில் சத்தத்திற்கு பதிலாக ‘ஹாரன்’ சத்தம் எழுப்பி குப்பை சேகரிக்கும் முறையை செயல்படுத்த மாநகராட்சி திட்டமிட்டது. ஆனால் பல்வேறு வாகன ‘ஹாரன்’ சத்தங்களால் பொதுமக்களுக்கு குழப்பம் ஏற்படக்கூடும். அதனால் விசில் சத்தத்திற்கு பதிலாக, குப்பை குறித்த விழிப்புணர்வு பாடலை ஒலிக்க செய்ய மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அந்தவகையில் குப்பையை தரம் பிரித்து தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும். பொது இடத்தையும், வீட்டையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று பொது சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு பாடலுடன் வீடு வீடாக குப்பையை சேகரிக்க மாநகராட்சி புதிய ஏற்பாடு செய்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: தூய்மையான நாடு, தூய்மையான வீடு என்ற பாடலில் குப்பையை பிரித்து வழங்குவதால் ஏற்படும் நன்மை, மக்கும், மக்காத குப்பை எவை, குப்பை சேகரிக்க வருவோரை மரியாதையாக நடத்துவது, வீட்டையும், பொது இடத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்வது போன்ற அம்சங்களுடன் ‘தூய்மையான நாடு, தூய்மையான வீடு, என்ற கருப்பொருளை மையப்படுத்தி இந்த பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பாடல் இன்னும் ஓரிரு நாட்களில் வெளியிடப்பட்டு குப்பை சேகரிக்கும் வண்டிகளில் ஒலிக்கும். இந்த பாடலை வைத்து குப்பை வண்டி வருகிறது என பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம். மேலும் பாடல் வாயிலாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். தூய்மை பணியாளர்களுக்கும் தொற்று பரவாமல் தடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : Awareness song instead of whistle in the house-to-house garbage collection program: Corporation arrangement to prevent the spread of infection
× RELATED நீட்-யுஜி கவுன்சிலிங் தேதி ஜன. 19க்கு மாற்றம்