இம்மாதம் 26ம் தேதி ஆளுநர் மாளிகைகள் முன் கருப்பு கொடி ஆர்ப்பாட்டம்: விவசாய சங்கங்கள் அறிவிப்பு

புதுடெல்லி : மத்திய அரசின் வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, இம்மாதம் 26ம் தேதி நாடு முழுவதும் ஆளுநர் மாளிகையின் முன் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.   மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, டெல்லியில் விவசாயிகள் கடந்த 7 மாதங்களுக்கு மேலாக  தொடர் போராட்டம்  நடத்தி வருகின்றனர்.  ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று டெல்லியில் இவர்கள் நடத்திய டிராக்டர் பேரணியில் பெரும் வன்முறை வெடித்தது. அதன் பிறகு, கொரோனா பரவல் காரணமாக டெல்லி  தொடர் போராட்டத்தில் சிறிது தொய்வு ஏற்பட்டது. தற்போது, நாடு முழுவதும் பல்வேறு வகைகளில் இந்த சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில், இந்த போராட்டத்தை தொடங்கி இம்மாதம் 26ம் தேதியுடன்   7 மாதங்கள் முடிகிறது.

அன்றைய தினம், வேளாண் சட்டங்களை ரத்து செய்யும்படி மத்திய அரசை வலியுறுத்தி,  நாடு முழுவதும் உள்ள ஆளுநர்  மாளிகைளின் முன்பாக  கருப்புக் கொடி  போராட்டம் நடத்தப்படும் என விவசாய சங்கங்கள் நேற்று அறிவித்தன. வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை 40 விவசாய சங்கங்கள் சேர்ந்த கூட்டமைப்பான ‘சம்யுக்தா கிசான் மோர்ச்சா’ தலைமை ஏற்று நடத்தி வருகிறது.

டெல்லி எல்லையில் போலீசாருக்கு அடி

தேசிய நெடுஞ்சாலைகளை டெல்லி மாநிலத்துடன் இணைக்கும் சிங்கு உட்பட 3க்கும் இடங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சிங்கு எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் நேற்று தாக்கப்பட்டனர். இதை விவசாயிகள் நடத்தினார்களா என்ற சந்தேகம் நிலவுகிறது. இது பற்றி டெல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: