×

கொரோனா நோய் தொற்றை காரணம் காட்டி கட்டண கொள்ளையில் ஈடுபடும் மருத்துவமனைகள், ஆய்வகங்கள்: குமுறும் பொதுமக்கள்

சென்னை: கொரோனாவை காரணம் காட்டி, தமிழக மருத்துவமனைகள் மற்றும் ஆய்வகங்களில் கட்டணக் கொள்ளை நடப்பதாக பொதுமக்கள் பரபரப்பு குற்றம் சாட்டி வருகின்றனர். முழு நாடும் ஒருபக்கம் கொரோனாவுடன் போராடிக் கொண்டிருக்க, மற்றொருபுறம் மருத்துவ கட்டணங்களுடன் பொதுமக்கள் போராடிக் கொண்டுள்ளனர். சாதாரணமாக, கொரோனா தொற்றை உறுதிப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் பரிசோதனை கட்டணமே மருத்துவமனைக்கு மருத்துவமனை வேறுபடுவதாக புகார் கூறுகின்றனர். ஸ்வாப் சோதனை ஒரு பரிசோதனை நிலையத்தில் 340 ஆகவும், இன்னொரு பரிசோதனை நிலையத்தில் ₹405 ஆகவும் உள்ளது. ரத்தப் பரிசோதனை மூலம் மேற்கொள்ளும் ஆன்டிபாடி சோதனைக்கான கட்டணம் 300 ரூபாயிலிருந்து 700 ரூபாய் வரையிலும் உயர்ந்துள்ளது. 1500 ரூபாயில் எடுக்க வேண்டிய சிடி ஸ்கேன் 4500 வரையிலும் வசூலிக்கப்படுகிறது.

உடலின் ஒவ்வொரு பாகங்களுக்கு ஏற்ப சிடி ஸ்கேன் கட்டணம் இன்னும் மாறுபடும். சில பரிசோதனை மையங்களில் கூடுதலாக மற்றொரு பரிசோதனையும் மேற்கொள்ள வேண்டும் என்று நிர்ப்பந்தப்படுத்துவதால் பொதுமக்களின் செலவு இன்னும் எகிறிவிடுகிறது. ஆர்டி-பிசிஆர் சோதனைக்கு 4 ஆயிரம் வரை வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அரசு அதற்கு கடிவாளம் போட்டுள்ளது. இதனால், தற்போது ஆர்டிபிசிஆர் சோதனை ரூ.900 என குறைந்துள்ளது.  பரிசோதனையில் நிலவும் இந்த கட்டண முறைகேடு குறித்து மூத்த பொதுநல மருத்துவர் கு.கணேசன் கூறுகையில், ‘‘கொரோனா சிகிச்சையில் அனைத்து கட்டணங்களும் அரசால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. சாதாரண வார்டில் சிகிச்சை அளித்தால் கட்டணம் எவ்வளவு, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தால் கட்டணம் எவ்வளவு என எல்லாவற்றுக்குமே வரையறை இருக்கிறது.

முகக்கவசம், பிபிஈ கிட், சானிடைசருக்கும் கூட அரசு கட்டணங்களை நிர்ணயம் செய்துள்ளது. கொரோனாவில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை கட்டணம் அரசால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுபோல், கொரோனா சிகிச்சை தொடர்பான மற்ற பரிசோதனைகளின் கட்டணங்கள் இன்னும் வரையறுக்கப்படவில்லை. எனவே, மற்ற பரிசோதனை கட்டணங்கள் குறித்து தெளிவான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு அறிவித்தால் இந்த குழப்பம் நீங்கும்’’ என்கிறார்.  ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகிவிட்டால், 3 லட்ச ரூபாய் சராசரியாக செலவாகிவிடுகிறது. மதுரையை சேர்ந்த ஒருவரது குடும்பத்தில் 3 பேருக்கு கொரோனா. ரூ.9 லட்சத்தை செலவு செய்தே வீடு திரும்பியுள்ளார். சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு பெண்ணும் இதே பிரச்னையை சந்தித்துள்ளார். கட்டணக் கொள்ளையை தடுக்கவும், மருத்துவமனைகளைக் கண்காணிக்கவும் அரசு பிரத்யேகக் குழுவை அமைக்கலாம் என்கிறார் பாதிக்கப்பட்ட பெண்.

 பொதுநல மருத்துவரான புகழேந்தி மருந்து தட்டுப்பாடு, கட்டண கொள்ளைக்கு முக்கிய காரணம் என்று தனது அனுபவங்களை சொல்கிறார். அவர் கூறியதாவது: கொரோனா காரணமாக பாராசிட்டமால் மாத்திரையின் விலையே அதிகரித்துவிட்டது. ஆயிரம் பாராசிட்டமால் மாத்திரைகள் கொண்ட ஒரு ஜார் 320 ரூபாய்க்கு வாங்கிக்கொண்டிருந்தேன். தற்போதைய அதிக டிமாண்ட் காரணமாக ஜார் 420 ரூபாயாகிவிட்டது. கொரோனா தீவிரமானவுடன் ஆயிரம் மாத்திரைகளின் ஜாரும் இப்போது கிடைப்பதில்லை. சில்லரையாக, அட்டை அட்டையாக வாங்கிக் கொள்ளுங்கள் என்று ஆலோசனை சொல்கிறார்கள். முன்பு ஜாருடன் வாங்கியபோது ஒரு பாராசெட்டமால் மாத்திரையின் நிகர விலை 45 பைசாவாக எனக்கு கிடைத்தது. அதுவே அட்டையாக வாங்கும்போது 95 பைசா வரை செலவாகிறது.  இதேபோல் ஐவி ப்ளூய்ட் (க்ளூக்கோஸ்) 18 ரூபாயாக இருந்தது. தற்போது, 20 ரூபாயாக மாறிவிட்டது. நான் சொல்வதெல்லாம் சாதாரணமாக நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் மருந்து பொருட்களின் விலையேற்றம்.

இதில் என்ன கொடுமை என்றால், மருந்தில் குறிப்பிட்டிருக்கும் எம்.ஆர்.பி.யின் விலை இன்னும் மாறவில்லை. பழைய அதிகபட்ச விலையை ஸ்டிக்கராக ஒட்டிக் கொண்டே பகல் கொள்ளையாக மருந்தை அதிக விலைக்கு விற்கிறார்கள். சமயங்களில் அதிக விலை கொடுக்க தயாராக இருந்தாலும் டிஸ்டிரிபியூட்டரிடமே ஸ்டாக் இருப்பதில்லை. தயாரிப்பு நிறுவனத்திடமிருந்து விநியோகஸ்தருக்கு அனுப்பாமல், நேரடியாக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி விடுவதாக சொல்கிறார்கள். சிறிய மருத்துவமனைகளை நடத்தும் எங்களை போன்றவர்களிடமே இதுபோல் கட்டணத்தை திணித்தால், அதை சமாளிக்க இறுதியில் நோயாளியிடம் வசூலிக்க வேண்டிய நிலைதான் ஏற்படும். மருந்து பதுக்கல்களை அரசு தடுக்க வேண்டும். மருந்துகளில் குறிப்பிட்டிருக்கும் அதிகபட்ச விலைக்கு மட்டுமே விற்பனை செய்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்றார். கொரோனாவை தடுக்க தற்போது உலகத்தில் எங்கும் மருந்து கண்டுபிடிக்கவில்லை.

அதிகபட்சமாக டெஸ்லிசுமாப், ரெம்டெசிவிர், ஸ்டீராய்டு, பாராசிட்டமால், டோலோ 650 போன்ற மருந்துகளைதான் பயன்படுத்துகின்றனர். அதில் டெஸ்லிசுமாப்தான் ரூ.43 ஆயிரம் வரை விலை கொண்டது. மற்ற மருந்துகள் குறைவுதான். ரெம்டெசிவிரை தமிழக அரசே மருத்துவமனைகளுக்கு வழங்கி விடுகிறது. அதேபோல, எக்மோ சிகிச்சை, ஆக்சிஜன் சிகிச்சை மட்டுமே அளிக்கப்படுகிறது. ஆனால் தினமும் பல லட்சம் ரூபாய் மருந்துகளுக்காகவே கொள்ளையடிக்கின்றனர் தனியார் மருத்துவமனைகள். முன்பு அதிமுக ஆட்சியில் ஒவ்வொரு நோயாளியிடம் இருந்தும் குறிப்பிட்ட அளவு பணத்தை கொள்ளையடித்து மேலிடத்தில் உள்ளவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற உத்தரவு இருந்தது. இதனால் மனம்போன போக்கில் கட்டணக் கொள்ளையில் மருத்துவமனைகள் ஈடுபட்டன. புதிய மருத்துவமனைகள் இந்த கொரோனா காலத்தில் தங்களது கடன் முழுவதையும் அடைத்து விட்டனர். தற்போது திமுக அரசு நேர்மையாக செயல்படுகிறது. ஆனாலும் மருத்துவமனைகள் கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றன.

‘பொதுமக்களின் வாழ்வாதாரத்தையும், அவர்களுக்கான சிகிச்சைகளையும், ஊரடங்கையும் அமல்படுத்த இடைவிடாமல் அரசு இயந்திரம் இயங்கிக் கொண்டுள்ளது. இத்துடன் சிகிச்சைகளுக்கான கட்டண நிர்ணயத்தில் வழிகாட்டு நெறிமுறைகளை இன்னும் தீவிரமாக அமல்படுத்த வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலித்தால் மருத்துவமனை உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும். இதுகுறித்து ஏற்கனவே சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் வருகிற மருத்துவமனைகளை அரசே தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் ஏற்று நடத்தலாம்’ என்கிறார் பொதுநல மருத்துவரான ரவீந்திரநாத். நுகர்வோர் அமைப்பின் சோமசுந்தரம் அரசுக்கு சில கோரிக்கைகளை முன் வைக்கிறார். அவர் கூறுகையில், ‘‘மருத்துவமனைகள் சிகிச்சையின் இறுதியில் வழங்கும் பில்லில் மருந்துகளுக்கு இவ்வளவு என பொத்தாம்பொதுவாக குறிப்பிடுகிறார்கள்.

இது தவறு. என்னென்ன மருந்துகள் சிகிச்சையின்போது வழங்கப்பட்டன என்பதை விவரமாக ஒவ்வொன்றையும் குறிப்பிட்டு, அதன் விலையை குறிப்பிட வேண்டும். தங்கள் அவசரம் காரணமாகவோ, அறியாமை காரணமாகவோ பொதுமக்களும் இந்த கட்டணக் கொள்ளைக்கு மறைமுகமாகப் பொறுப்பேற்கிறார்கள். பொதுமக்களிடமும் விழிப்புணர்வு வேண்டும். பொதுமக்கள் சிகிச்சைக்காக செல்லும்போது மருத்துவமனையிடம் சிகிச்சைக்காக ஆகும் செலவு பற்றி முன்கூட்டியே தோராயமான அறிக்கை கேட்கலாம். இந்த எஸ்டிமேட் பில் நடைமுறை சில மாநிலங்களில் அமலில் உள்ளது. ஆரம்பத்தில் எதுவும் விசாரிக்காமல் பில் வந்த பிறகு பலரும் புலம்புகிறோம். தமிழ்நாடு மருத்துவமனைகள் ஒழுங்குபடுத்தல் சட்டம் ஏற்கனவே நம்மிடம் உள்ளது. இந்த சட்டத்தை அரசு தீவிரமாக நடைமுறைப்படுத்தினால் கட்டணக் கொள்ளையை நிச்சயம் தடுக்க முடியும்.

எப்படி பேரிடர் மேலாண்மை சட்டத்தின்படி ஒருவர் முகக்கவசம் அணியாவிட்டாலோ, 50 பேருக்கு மேல் கூடினாலோ நடவடிக்கை எடுக்கிறோமோ அதுபோல் மருத்துவமனை ஒழுங்குபடுத்தல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும். சமீபத்தில் என்95 முகக்கவசம் உள்ளிட்ட சிலவற்றுக்கான விலையை தமிழக அரசு நிர்ணயம் செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த கட்டணம் சரியாக பின்பற்றப்படுகிறதா என்பதை மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் பார்மசிகளில் நேரடியாக சென்று ஆய்வு செய்ய வேண்டும்’’ என்றார்.

பிபிஇ கிட்டிலும் கொள்ளை
தனியார் மருத்துவமனைகளில் ஐசியு பிரிவில் குறைந்தது 10 முதல் 20 நோயாளிகள் இருப்பார்கள். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கச் செல்லும் டாக்டர்கள் பிபிஇ கிட் (முழு கவச உடை) அணிந்திருப்பார்கள். இந்த பிபிஇ கிட்டை ஒரு நாள் முழுவதும் அணிந்திருப்பார்கள். 20 நோயாளிகளை பார்க்கும்போதும் ஒரே உடையில்தான் இருப்பார்கள். இந்த பிபிஇ கிட்டின் விலை ரூ.270 மட்டுமே. ஆனால், தனியார் மருத்துவமனைகளோ, டாக்டர்கள் பிபிஇ கிட் அணிய, ஒவ்வொரு நோயாளியிடம் இருந்தும் ரூ.2 ஆயிரம் வீதம் பணம் வசூலிக்கின்றனர். அதுவும் 20 நோயாளிகளிடம் இருந்தும் தனித்தனியாக ரூ.2 ஆயிரம் வீதம் சுமார் ரூ.40 ஆயிரத்ைத பிடுங்கிக் கொள்கின்றனர்.

ஆனால் அவர்கள் ஒரு பிபிஇ கிட்டை ரூ.270க்கு வாங்கி ரூ.40 ஆயிரம் கொள்ளையடிக்கின்றனர். இது ஒரு சாம்பிள்தான். கண்ணுக்கு தெரியாமல் நடைபெறும் இந்த முறைகேட்டிலேயே இப்படி கொள்ளையடித்தால், சிகிச்சைக்காக எவ்வளவு அடிப்பார்கள். இதேபோலதான்
ஒவ்வொரு சிகிச்சைக்கும் கொள்ளையடிக்கின்றனர் என்கின்றனர் பாதிக்கப்பட்ட பொதுமக்கள்.

மக்கள் செய்ய வேண்டியது என்ன?
கடந்த ஜூன் 8ம் தேதி கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றார் ஒரு பெண். ‘குணமடைந்த பின் முழு கட்டணம் செலுத்தினால்தான் விடுவிப்போம்’ என தனியார் மருத்துவமனை நிர்வாகம் நிர்ப்பந்தித்தது. அதிக கட்டணம் என்று புகார் எழுந்த நிலையில், அதிகாரிகள் தலையிட்டு சிகிச்சை பெற்ற பெண்ணை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். நமது பிரச்னை அரசுக்கு தெரிய வரும்போது நமக்கு நிவாரணம் கிடைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது என்பதற்கான அடையாளமே இந்த சம்பவம். கட்டணக் கொள்ளையால் பாதிக்கப்படும் பொதுமக்களில் பெரும்பாலானோர் புகார் அளிக்க முன் வருவதில்லை. நீங்கள் தனி நபர் அல்ல. உங்களுடன் ஓர் அரசாங்கம் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

எங்கு புகார் அளிப்பது
* தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பலாம்.
* பொதுவாகவே நோயாளிகள் தங்களது குறைகளை பதிவு செய்ய 104 என்ற ஹெல்ப்லைன் பயன்பாட்டில் உள்ளது.
* சென்னை டி.எம்.எஸ் வளாகத்திலுள்ள மருத்துவ கல்வி இயக்குநரகத்தில் புகார் அளிக்கலாம்.
* மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையிலும் ஜே.டி என்கிற இணை சுகாதார இயக்குநர், டி.டி என்கிற இணை சுகாதார இயக்குநர் அலுவலகம் இருக்கும். கூடுதல் கட்டண புகார்களை இவர்களிடம் அளிக்கலாம்.
* மருத்துவரின் மீது புகார் இருந்தால் தமிழக மருத்துவ கவுன்சிலில் புகார் அளிக்கலாம்.
* சமீபநாட்களாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளின் அடிப்படையிலும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே, உங்களது புகார்களை வெளியில் தெரிவிக்க ஊடகங்களின் உதவியையும் நாடலாம்.
* சமூக வலைதளங்களிலும் தங்களது கோரிக்கையை உரியவர்களுக்கு சென்று சேரும் வகையில், பொருத்தமான ஹேஷ்டேக் அல்லது முதல்வர், சுகாதார அமைச்சரின் சமூக வலைதள முகவரியுடன் இணைத்து பதிவிடுவதும் பலன் தரும்.




Tags : Hospitals and laboratories involved in the robbery of coronary heart disease: the general public
× RELATED பேருந்து நடத்துநரை தாக்கிய மென்பொறியாளர் கைது..!!