வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் பி.டெக் சேர்க்கை முடிவு வெளியீடு: வேந்தர் ஜி.விசுவநாதன் தகவல்

வேலூர்: ேவலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் நடப்பு கல்வியாண்டில் பி.டெக் பட்டப்படிப்பில் சேர்வதற்கான சேர்க்கை முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டுள்ளன. 2021ம் கல்வியாண்டில் இந்தியாவின் 31 மாநிலங்களிலிருந்து, 8 யூனியன் பிரதேசம், துபாய், குவைத், மஸ்கட், கத்தார், பகரைன், சிங்கப்பூர், மொரீசியஸ் உட்பட 15க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து மாணவர்கள் தேர்வு எழுதினர். இதுதொடர்பாக விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன் கூறியதாவது: விஐடி நுழைவுத்தேர்வின் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். வரும் 21ம் தேதி தொடங்கி ஜூலை 16 வரை 4 கட்டங்களாக கலந்தாய்வு நடைபெறும். ஜூன் 21 மற்றும் 22ல் ரேங்க் 1 முதல் 20,000 வரையிலும், ஜூன் 30 மற்றும் ஜூலை 1ம் தேதி ரேங்க் 20,001 முதல் 45,000 வரை, ஜூலை 8 மற்றும் 9ம் தேதிகளில் ரேங்க் 45,001 முதல் 70,000 வரை, ஜூலை 15 மற்றும் 16ல் ரேங்க் 70,001 முதல் 1,00,000 வரை கலந்தாய்வு நடைபெறும். ரேங்க் 1 முதல் 1,00,000 வரை எடுத்த மாணவர்களுக்கு விஐடி வேலூர், சென்னை, ஆந்திரா, போபாலில் இடம் கிடைக்கும்.

1,00,000க்கும் மேலாக ரேங்க் பெற்ற மாணவர்களுக்கு விஐடி ஆந்திரா, விஐடி போபாலில் மட்டுமே இடம் கிடைக்கும். மாணவர்கள் சேர்க்கை முடிவுகளை https://admissionresults.vit.ac.in/viteee என்ற இணையதளம் வழியாக தெரிந்து கொள்ளலாம். மேலும் விஐடி இணையதளம் வழியாக ஆன்லைன் கவுன்சலிங்கிற்கு விண்ணப்பிக்கலாம். ஜி.வி பள்ளி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சிறப்பு கல்வி உதவி மத்திய கல்வி வாரியம் நடத்தும் பிளஸ்2 தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்றவர்களுக்கு விஐடியில் பிடெக் படிப்பின் 4 ஆண்டுகளும் 100 சதவீத படிப்பு கட்டண சலுகையும், 1 முதல் 50 ரேங்க் பெற்றவர்களுக்கு 75 சதவீத படிப்பு கட்டண சலுகையும், 51 முதல் 100 ரேங்க் பெற்றவர்களுக்கு 50 சதவீத படிப்பு கட்டண சலுகையும், 101 முதல் 1000 ரேங்க் பெற்றவர்களுக்கு 25 சதவீத படிப்பு கட்டண சலுகையும் ஜிவி பள்ளி வளர்ச்சி திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு, ஆந்திரா, மத்திய பிரதேசத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பயின்று பிளஸ்2 தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பெறும் 1 மாணவருக்கும் 1 மாணவிக்கும் விஐடியில் 100 சதவித கல்வி கட்டண சலுகையும், இலவச விடுதி வசதியும், உணவு வசதியும் விஐடி ஸ்டார்ஸ் திட்டத்தின்கீழ் வழங்கப்பட உள்ளது. விஐடியில் 3 ஆண்டு இளங்கலை பட்டப்படிப்புகள் மற்றும் 5 ஆண்டு ஒருங்கிணைந்த முதுநிலை பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் ‘‘www.vit.ac.in’’ இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>