கடந்த ஆட்சியில் பல ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கிய குடிமராமத்து திட்ட பணி விவரம் சேகரிக்கப்படுகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்

சேலம்: கடந்த ஆட்சியில் பல ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்ட குடிமராமத்து திட்ட பணிகள் குறித்த விவரம் சேகரிக்கப்படுகிறது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  மேட்டூர் அணையில் பாசனத்திற்காக தண்ணீரை திறந்துவிட்ட பின்னர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டி: மேட்டூர் அணையில் தற்போது நீர் இருப்பு 60 டிஎம்சியாக உள்ளது. ஜனவரி 28 வரை நீர் திறக்க, 330 டிஎம்சி தண்ணீர் தேவைப்படும். இதனை கர்நாடக அரசிடம் இருந்து எவ்வாறு பெறுவோம்? நேற்று இதுசம்பந்தமாக அந்த துறை அமைச்சருக்கு நினைவூட்டி கடிதம் எழுதியுள்ளோம். காவிரி, கோதாவரி இணைப்பு தொடர்பாக திட்டங்கள் ஏதேனும் உள்ளதா?(அமைச்சர் துரைமுருகன்) நாங்கள் தற்போதுதான் ஆட்சிக்கு வந்துள்ளோம். அதுகுறித்து விவரங்கள் கேட்டுள்ளோம். அதன்பின்னர், முதல்வரிடம் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

கடந்த ஆட்சியில் குடிமராமத்து திட்டத்திற்கு பல ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கினார்கள். அந்த திட்டம் முழு அளவில் செயல்பட்டுத்தப்பட்டுள்ளதா? இதுகுறித்து பலமுறை சட்டமன்றத்தில் அமைச்சர் துரைமுருகன் வெள்ளை அறிக்கை வைக்கும்படி கேட்டார். எங்கே வேலை நடக்கிறது, எவ்வளவு வேலை முடிந்திருக்கிறது என்று பலமுறை கேட்டும் ஒருமுறை கூட அவர்கள் முறையான பதில் கூறவில்லை. இப்போது ஆட்சிக்கு வந்திருக்கிறோம். அது குறித்து விவரங்கள் எல்லாவற்றையும்  சேகரித்து தெரிவிக்கிறோம். கொரோனா 2வது அலை பெரும்பாலும் கட்டுப்படுத்தியாகிவிட்டது. இதற்காக அரசு எடுத்த நடவடிக்கை என்ன?

கொேரானாவை பொறுத்தவரை, நிலைமை தற்போது ஓரளவுக்கு கட்டுக்குள் வந்துள்ளது. தொடர்ந்து படிப்படியாக கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தபோது தினசரி தொற்று 36 ஆயிரத்தை கடந்து இருந்தது.

 தினசரி பாதிப்பு 60 ஆயிரத்தை தொடும் என்ற சூழல் அப்போது இருந்தது. இதன் காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்று முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. படிப்படியாக குறைந்து, நேற்றைய தினம் தொற்று பாதிப்பு 16 ஆயிரத்துக்கும் குறைவாக இருந்தது.  சென்னையில் தினசரி பாதிப்பு 7,000 ஆக இருந்தது தற்போது ஆயிரமாக குறைந்துள்ளது. கோவையில் தினசரி பாதிப்பு 5 ஆயிரமாக இருந்தது, தற்போது அரசின் நடவடிக்கையால் 2,000 ஆக குறைக்கப்பட்டுள்ளது. சேலத்தில் 1,500 ஆக இருந்தது, தற்போது 900 ஆக குறைந்துள்ளது. ஆட்சிக்கு வந்தபோது படுக்கை மற்றும் ஆக்சிஜன் தட்டுப்பாடுகள் இருந்தது. தற்போது இதுபோன்ற பிரச்னைகள் இல்லாத சூழலை நாங்கள் உருவாக்கியுள்ளோம். போதுமான அளவிற்கு படுக்கை மற்றும் ஆக்சிஜன் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா கட்டளை மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டளை மையத்திற்கு அதிகபட்சமாக, கடந்த மே 20ம் தேதி 4,768 அழைப்புகள் வந்துள்ளது. ஆனால் தற்போது இந்த கட்டளை மையத்திற்கு 200 லிருந்து 300 அழைப்புகள் மட்டுமே வருகிறது. இந்த அளவிற்கு கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் படிப்படியாக கொரோனா பாதிப்பு குறைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. தமிழகத்திற்கு அதிக தடுப்பூசிகள் வேண்டுமென்று ஒன்றிய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசியமின்றி தேவையில்லாமல் வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும். தவறாமல் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். அரசு கூறும் வழிமுறைகளை தவறாமல் கடைபிடித்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.‌ பொதுமக்கள் ஒத்துழைப்பு இருந்தால் கொரோனாவை முழுமையாக கட்டுப்படுத்த இயலும் என கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன்.

ஊரடங்கு தளர்வில் டாஸ்மாக் திறக்கும் உத்தரவை, திரும்ப பெற வாய்ப்புள்ளதா? சில தளர்வுகள் கொடுத்துதான் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, மேற்கு மண்டலத்தில் தளர்வுகள் இல்லாமல் ஊரடங்கு தொடர்கிறது. தொற்று பாதிப்பு குறைந்த மாவட்டங்களில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில்தான் டாஸ்மாக் கடைகளுக்கு அந்த சலுகை கொடுத்துள்ளோம். உங்களது டெல்லி பயணம் குறித்து கூறுங்களேன். வரும் 17ம் தேதி பிரதமரை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன். உறுதி செய்யப் பட்டதும் கூறுகிறேன். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

Related Stories: