இணையத்தின் மூலம் தமிழ் இலக்கியங்கள் உலகம் முழுவதும் சென்றடைய நடவடிக்கை: அமைச்சர் மனோதங்கராஜ் பேட்டி

நாகர்கோவில்: தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று நாகர்கோவிலில் அளித்த பேட்டி:  தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத்துறையில் தமிழ் விர்சுவல் அகாடமி என்று ஒரு துறை உள்ளது. இணையவழி கல்வி முறை மூலம் தமிழை உலகம் எங்கும் கொண்டு செல்வது இதன் நோக்கம். தமிழ்நாட்டில் உள்ள கலை, இலக்கியங்கள்,  பண்பாடு, நாகரிகம், தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள், ஓலைசுவடிகளில் உள்ள பெரிய வளங்கள் ஆகியவற்றை கொண்டு செல்ல வேண்டும். அந்த காலத்தில் இருந்த மக்கள் அறிவை சேமித்து வைத்துள்ளார்கள். அவற்றை ஆவணப்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம். தமிழில் உள்ள திருக்குறள், தொல்காப்பியம் உள்ளிட்ட அற்புதமான இலக்கிய படைப்புகளை உலகம் முழுவதும் உள்ள மக்கள் கைகளில் இணையத்தின் மூலம் கிடைக்க செய்வதே நோக்கம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories: