நாட்டில் கொரோனா பாதிப்பு 3 கோடியை நெருங்கியது : மூன்றரை மாதத்தில் 2.20 லட்சம் பேர் பலி

புதுடெல்லி: கொரோனா 2வது அலையின் கோர தாண்டவத்தால் நாடு முழுவதும் தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 3 கோடியை நெருங்குகிறது. 2வது அலை தொடங்கிய பிறகு கடந்த மூன்றரை மாதங்களில் மட்டுமே 2.20 லட்சம் பேர் பலியாகி உள்ளனர்.  நாட்டில் கொரோனா 2வது அலையின் கோரத்தாண்டவம் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக, கடந்தாண்டில் தாக்கிய முதல் அலையை விட, 2வது அலையில் பாதிக்கப்பட்டவர்களில் உயிர் இழப்பு அதிகமாக நடந்துள்ளது. பாதிப்பிலும், பலியிலும் மகாராஷ்டிரா மாநிலமே இப்போது வரை தொடர்ந்து முதலிடம் வகித்து வருகிறது. குறிப்பாக, கடந்த மாதத்தில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சம் வரை சென்றது. அதேபோல், பலி எண்ணிக்கையும் 4 ஆயிரத்தை கடந்தது.

இந்தியாவில் கொரோனா 2வது அலை, கடந்த மார்ச் 1ம் தேதி முதல் தொடங்கியதாக கணக்கிடப்படுகிறது. இதன்படி கணக்கிட்டால், நாட்டில் கடந்த மூன்றரை மாதங்களில் மட்டுமே சுமார் 2.20 லட்சம் பேர், இந்த வைரசுக்கு இரையாகி இருக்கின்றனர். அதேபோல், இந்த காலக்கட்டத்தில் 2 கோடி பேர் தொற்றால் பாதித்துள்ளனர். தற்போது, நாடு முழுவதும் தொற்றின் வேகம் வேகமாக குறைந்து வருகிறது. தினசரி பாதிப்பு 78 சதவீதம் வரை சரிந்துள்ளது. ஆனால், பலி எண்ணிக்கை மட்டும் குறையவில்லை. இதற்கு, இந்தியாவில் உருமாற்றம் அடைந்த டெல்டா வைரஸ் மிகவும் வீரியமாக இருப்பதே காரணம். பலகீனமான உடல்நிலையை கொண்டவர்களை இது பெருமளவில் பலி வாங்கி இருக்கிறது. தற்போது, நாட்டின் கொரோனா பாதிப்பு 3 கோடியை நெருங்கி வருகிறது. பலி எண்ணிக்கை 4 லட்சத்தை நோக்கி வேகமாக நகர்ந்து வருகிறது.

நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு, பலி உள்ளிட்ட விவரங்கள் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை வருமாறு:

* கடந்த 24 மணி நேரத்தில் 84,332 பேருக்கு புதிதாக தொற்று பாதித்துள்ளது. 73 நாட்களுக்கு பிறகு மிகவும் குறைவாக பாதிப்பு பதிவாகி இருக்கிறது. இதனால், நாட்டில் மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 2 கோடியே 93 லட்சத்து 59 ஆயிரத்து 155 ஆக உயர்ந்துள்ளது.

*அதேபோல், புதிதாக 4,002 பேர் தொற்றுக்கு பலியானதால், உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 67 ஆயிரத்து 81 ஆக அதிகரித்துள்ளது.

*நாடு முழுவதும் 10 லட்சத்து 80 ஆயிரத்து 690 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 63 நாட்களுக்கு பிறகு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 11 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

*பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையை விட குணமடைவோரின் எண்ணிக்கை தொடர்ந்து 30வது நாளாக அதிகரித்துள்ளது.

3ம் அலையை சந்திக்க டெல்லி தயார்நிலை

ஆன்லைனில் 22 ஆக்சிஜன் உற்பத்தி தொழிற்சாலைகளை திறந்து வைத்து பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ``கொரோனா 3வது அலை பற்றி இங்கிலாந்தில் இருந்து வரும் தகவல்கள் உண்மையே. அதனால் தான், இதனை எதிர்கொள்ள டெல்லி அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து வருகிறது. டெல்லியில் 45 சதவீதத்தினருக்கு தடுப்பூசி போடப்பட்டு விட்டதால், அரசு மெத்தனமாக இருக்காது,’’ என்று தெரிவித்தார்.

கோ-வின் இணையதளம் ஹேக் செய்யப்பட்டதா?

மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ‘மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் தகவல்களை பதிவு செய்யும் ‘கோ-வின்’ இணையதளம் ஹேக் செய்யப்பட்டு, அதில் உள்ள தகவல்கள் திருடப்பட்டதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. இது, அடிப்படையற்றது. இருப்பினும், ஹேக் செய்யப்பட்டதாக கூறப்படுவது பற்றி மத்திய மின்னணு மற்றும்  தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கம்ப்யூட்டர்  அவசர நடவடிக்கை குழு விசாரித்து வருகிறது,’ என கூறப்பட்டுள்ளது.

2வது அலையில் இன்னுயிரை இழந்த 719 மருத்துவர்கள்

நாடு முழுவதும் 2வது அலையில் பாதிக்கப்பட்ட கொரோனா நோயாளிகளுக்கு இரவு பகல் பாராமல், தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் மருத்துவர்களும், மருத்துவ ஊழியர்களும் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதில், அவர்களுக்கும் தொற்று ஏற்பட்டு உயிர் தியாகம் செய்து வருகின்றனர். இது பற்றி இந்திய மருத்துவ சங்கம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘2வது அலையின் பாதிப்பில் நாடு முழுவதும் இதுவரையில் 719 மருத்துவர்கள் உயிர் தியாகம் செய்துள்ளனர். அதிகபட்சமாக பீகாரில் 111 மருத்துவர்கள் உயிர் இழந்துள்ளனர். டெல்லியில் 109, உத்தரப்பிரதேசத்தில் 79, ஆந்திராவில் 35, தெலங்கானாவில் 36, மகாராஷ்டிராவில் 23, ஒடிசாவில் 28 மருத்துவர்கள் இறந்துள்ளனர். தமிழகத்தில் 32 மருத்துவர்கள் இறந்துள்ளனர். மிகவும் குறைந்தபட்சமாக, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஒரு மருத்துவர் இறந்துள்ளார். முதல் அலையின் போதும் 748 மருத்துவர்கள் தொற்றால் இறந்தனர்,’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories: