கொரோனா நிவாரண நிதியாக கட்டுமான தொழிலாளர்களுக்கு தலா 5,000 வழங்க வேண்டும்: முதல்வருக்கு சங்க பொதுச்செயலாளர் கோரிக்கை

சென்னை: அகில இந்திய கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்க பொதுச்செயலாளர் மு.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு முதல் கொரோனா அலையின்போது தினக்கூலி வேலை செய்யும் கட்டுமான, அமைப்புச்சார தொழிலாளர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டனர். தற்போது கொரோனா இரண்டாவது அலை பரவி வருவதால் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் எப்பொழுதும்போல அதிக அளவு பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் கட்டுமானம், அமைப்புச்சார தொழிலாளர்கள்தான். பாதிக்கப்பட்டுள்ள கட்டுமான தொழிலாளர்களுக்கு அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்பது முதலமைச்சருக்கு தெரியும். அந்த உதவியை காலத்தில் செய்ய வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கையாகும்.

கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தில் கட்டுமான தொழிலாளர்களின் சேமநல நிதி 3,200 கோடி உள்ளது. அந்த பணம் முழுக்க முழுக்க கட்டுமான தொழிலாளர்களின் நலன் நிதியாகும் அந்த நிதியில் இருந்து ஒவ்வொரு கட்டுமான தொழிலாளர் குடும்பத்திற்கும் 5 ஆயிரம், அரிசி, மளிகை பொருட்களின் தொகுப்புகளை வழங்க வேண்டும். மேலும் கடந்த 5 மாதங்களுக்கு மேலாக கட்டுமான தொழிலாளர்களுக்கு நலவாரியத்தின் மூலம் கிடைக்க வேண்டிய பென்சன், விபத்து நிதிகள் பண பலன்கள்  கிடைக்கவில்லை.  கட்டுமானம் உள்ளிட்ட 17 அமைப்புச்சார  நலவாரியங்கள் செயல்படாமலும் முடங்கியுள்ளது. தமிழக முதல்வர் கட்டுமான தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய பண பயன்கள் கிடைக்கவும், வாரியம் புத்துணர்ச்சியோடு மீண்டும் செயல்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: