தொடர் நீர்வரத்தால் வற்றாத வைகை அணை நீர்மட்டம்

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையிலிருந்து கடந்த 8 தினங்களாக பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இருப்பினும் தொடர்ந்து தண்ணீர் வரத்து உள்ளதால், அணையின் நீர்மட்டம் குறையாமல் உள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை உள்ளது. அணையின் உயரம் 71 அடியாகும். 8 தினங்களுக்கு முன்பு மதுரை, திண்டுக்கல் மாவட்ட முதல்போக பாசனத்திற்கு பாசன கால்வாய் வழியாக அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அப்போது அணையின் நீர்மட்டம் 67.54 அடியாக இருந்தது.

இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழையாலும், முல்லைப்பெரியாறு அணையில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீராலும் வைகை அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து உள்ளது. இதன் காரணமாக வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டாலும், அணையின் நீர்மட்டம் குறையாமல் 67.22 அடியிலேயே நிலை கொண்டுள்ளது. தற்போது தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளதால், அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நேற்றைய நிலவரப்படி வைகை அணையின் நீர்மட்டம் 67.22 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 575 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசனத்திற்காக, வினாடிக்கு 969 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. அணையின் மொத்த நீர் இருப்பு 5 ஆயிரத்து 140 மில்லியன் கன அடியாக இருந்தது.

Related Stories: