ஐஎஸ்ஐ தரச்சான்றிதழ் இல்லாத குடிநீர் ஆலைக்கு பூட்டு: இளையான்குடி அருகே பரபரப்பு

இளையான்குடி: இளையான்குடி அருகே ஐஎஸ்ஐ தரச்சான்றிதழ் இல்லாமல் இயங்கிய குடிநீர் ஆலை செயல்பட அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். இளையான்குடி அருகே பெரும்பச்சேரியில் வைகையாற்றின் கரையோரத்தில் அட்சயா மினரல் வாட்டர் என்ற பெயரில் குடிநீர் ஆலை இயங்கி வந்தது. இந்த குடிநீர் நிலையத்தின் மூலம் வேன் மற்றும் டிராக்டரில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் சப்ளை செய்து வருகிறது. 1 லிட்டர், 500 மி.லி, 300மி.லி என்ற அளவுகளில் பாட்டிலில் குடிநீர் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், இந்த குடிநீர் நிலையத்தில் உணவு மற்றும் தரச்சான்றிதழ் இல்லாமல் செயல்பட்டு வருவதாக மாநில குடிநீர் வாரியத்திற்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் பிரபாவதி தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ராஜேஷ் குமார், தியாகராஜன், முத்துக்குமார் ஆகியோர் நேற்று அட்சயா மினரல் வாட்டர் நிலையத்தில் ஆய்வு செய்தனர்.  ஆய்வில் கடந்த 2013 முதல் ஐஎஸ்ஐ தரச்சான்றிதழ், உணவு பாதுகாப்பு மற்றும் தரநிர்ணயம் உரிமை, நிலத்தடிநீர் அனுமதி சான்றிதழ் ஆகியவை இல்லாமல் இயங்கி வந்தது விசாரணையில் தெரியவந்தது. முக்கியமாக, போலியாக லேபிள் ஒட்டி, ஆய்வகம் இல்லாமல் பரிசோதனை செய்யப்படாத குடிநீர் பாட்டில்களும் விற்பனை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முக்கியமாக, சில ஆண்டுகளாக முறைகேடு மற்றும் சட்டத்திற்கு புறம்பாக அட்சயா குடிநீர் நிலையம் இயங்கி வந்ததாக தெரிகிறது.

இதையடுத்து குடிநீர் ஆலையின் உரிமையாளர் லாவன்யாவிடம் மாவட்ட நியமன அலுவலர் பிரபாவதி விசாரணை நடத்தினார். தொடர்ந்து குடிநீர் பாட்டில்களை பறிமுதல் செய்து, தற்காலிகமாக குடிநீர் ஆலையை பூட்ட உத்தரவிட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.  இது குறித்து மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் பிரபாவதி கூறுகையில்,‘‘சில ஆண்டுகளாக அட்சயா குடிநீர் ஆலை உரிய சான்றிதழ் மற்றும் அரசின் விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. இது குறித்து துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பியும் கண்டு கொள்ளவில்லை. தொடர்ந்து புகாரின் அடிப்படையில் ஆய்வு செய்ததில் முறைகேடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தண்ணீர் பாட்டில்களை பறிமுதல் செய்யப்பட்டது. முக்கியமாக, குடிநீர் நிலையம் செயல்பட தடை விதித்துள்ளோம்,’’என்றார்.

Related Stories: