மதுரையில் ரூ. 70 கோடியில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கும் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் பாராட்டு

மதுரை : மதுரையில் ரூ. 70 கோடியில் கலைஞர் நினைவு நூலகம் அமைக்கப்படும் என்ற அரசின் அறிவிப்புக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பாராட்டு தெரிவித்துள்ளது.மதுரையைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவில், 2017-2018ல் சட்டசபையில் தமிழ்நாட்டில் தனித்தன்மை வாய்ந்த நூலகங்கள் அமைக்கப்படும்.அறிவிப்பு வெளியாகி 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே துறை சார்பில் அறிவித்தபடி தனித்தன்மை நூலகம் மற்றும் காட்சியங்கள் அமைக்குமாறு அரசுக்கு உத்தரவிடுங்கள், என கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த மனு இன்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்த போது, 7 நூலகங்கள் பயன்பாட்டில் உள்ளதாகவும் பழமை நாகரீக நூலகம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.மேலும் ரூ. 70 கோடியில் மதுரையில் நவீன வசதிகளுடன் கூடிய கலைஞர் நூலகம் அமைக்கும் பணியும் தொடங்கியுள்ளதாக அரசு தரப்பு வழக்கறிஞர் நினைவுக் கூர்ந்தார். இதனை கேட்ட நீதிபதி, சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்குள் நுழைந்தால் ஒரு நாள் போதாது. அதே போல மதுரையில் அமையப்போகும் கலைஞர் நினைவு நூலகம் இருக்கும் என எதிர்பார்க்கிறோம். இதனை அறிவித்த தமிழ்நாடு அரசுக்கு எங்களது பாராட்டுக்கள். மதுரையில் அமைய உள்ள நூலகம் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பெருமளவு பயன் தரும், என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர்.

Related Stories:

>