மாணவிகளின் வாட்ஸ்அப் குழுவில் ஆபாச படங்கள் அனுப்பியதில் ஆசிரியர்களுக்கு தொடர்பு?.. ஈரோட்டில் பரபரப்பு

ஈரோடு: ஈரோட்டில் அரசு பள்ளி மாணவிகளின் வாட்ஸ் அப் குழுவில் ஆபாச படங்கள் அனுப்பிய விவகாரத்தில் ஆசிரியர்களுக்கு தொடர்பு இருக்கிறதா என சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் சிலர் வாட்ஸ் அப் குழு ஒன்றை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கி உள்ளனர். இக்குழுவில் முன்னாள் மாணவிகள், ஆசிரியர்கள், தற்போது பயிலும் மாணவிகள் என 200க்கும் மேற்பட்டோர் உள்ளனர். வாட்ஸ் அப் குரூப் அட்மின் உள்பட 6 பேர் மட்டுமே தகவல்களை அனுப்பும் வகையில் செட்டிங்ஸ் லாக் செய்து வைத்துள்ளனர்.

மேலும் ஆன்லைன் வகுப்பு தொடர்பான தகவல்களும் இக்குழுவில் பகிரப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வாட்ஸ் அப் குரூப்பில் உள்ள ஒரு செல்போன் எண்ணில் இருந்து 6 ஆபாச படங்கள் அடுத்தடுத்து வந்துள்ளன. இதனால் மாணவிகளும், பெற்றோர்களும் அதிர்ச்சியடைந்து ஆபாச படங்கள் வந்த எண்ணுக்கு சொந்தமான அப்பள்ளியில் பணியாற்றிய பயிற்சி ஆசிரியரை நேரில் அழைத்து கேட்டனர். அப்போது அவர் தன்னுடைய செல்போன் தொலைந்துவிட்டதாகவும், தனக்கும் ஆபாச படங்கள் அனுப்பியதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் கூறியுள்ளார். இதையடுத்து பெற்றோர்கள் சம்பந்தப்பட்ட பள்ளிக்கு சென்று கேட்டுள்ளனர்.

பள்ளி நிர்வாகத்திற்கும் சம்பந்தப்பட்ட வாட்ஸ் அப் குழுவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், பயிற்சி ஆசிரியை பள்ளியில் பணியாற்றவில்லை என்றும் பதிலளித்துள்ளனர். இதையடுத்து சித்தோடு, ஈரோடு வடக்கு உள்ளிட்ட காவல் நிலையங்களில் பெற்றோர்கள் தரப்பில் தனித்தனியாக புகார் மனு அளித்துள்ளனர். இப்புகார்கள் அனைத்தும் சைபர் பிரிவில் விசாரிக்க வேண்டியவை என்பதால் சைபர் பிரிவில் புகார் அளிக்கும்படி போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து நேற்று பெற்றோர்கள் சார்பில் ஈரோடு சைபர் பிரிவில் புகார் மனு அளிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆபாச படங்கள் அனுப்பிய விவகாரத்தில் ஆசிரியர்களுக்கு தொடர்பு உள்ளதா? அல்லது உண்மையிலேயே செல்போன் தொலைந்து வேறு யாராவது விஷமிகள் இது போன்ற செயல்களில் ஈடுபட்டார்களா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Related Stories: