ஒரே இடத்தில் 10 ஆயிரம் பேர் தடுப்பூசி எடுத்துக் கொண்ட இடமாக கோயம்பேடு மார்க்கெட் மாற உள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: தமிழ்நாட்டுக்கு இன்று 4.25 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் வர உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் இதுவரை 98 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. மேலும் சென்னை கோயம்பேடு சந்தையில் 10,000 பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். கொரோனா வைரஸுக்கு எதிரான ஒரே ஆயுதம் தடுப்பூசி தான். இந்த பேரிடரிலிருந்து மக்களைக் காக்க தமிழக அரசு தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தியது.

ஆரம்பக் கட்டத்தில் தடுப்பூசியை கண்டாலே தெறித்து ஓடிய தமிழக மக்கள், தடுப்பூசியின் அவசியத்தை உணர்ந்து தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்கிறார்கள். இதனால், தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. பல மாவட்டங்களில் கடந்த ஓரிரு நாட்களாக தடுப்பூசி போடும் பணி நிறுத்தப் பட்டிருந்தது. இதையடுத்து, மத்திய அரசு கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகளை நேற்று அனுப்பி வைத்த நிலையில் இன்று மீண்டும் தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது. இதனிடையே காய்கறி, மளிகை பொருட்கள் வியாபாரம் செய்யும் நபர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டால் தான் விற்பனை செய்ய அனுமதிக்கப்படும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்தனர்.

அதன் படி, பெரும்பாலான வியாபாரிகள் தடுப்பூசி போட்டுக் கொண்டு விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இதுவரை 9,655 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டிருப்பதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ஒரே இடத்தில் 10 ஆயிரம் பேர் தடுப்பூசி எடுத்துக் கொண்ட இடமாக கோயம்பேடு மார்க்கெட் மாற உள்ளது என்றும் காசிமேடு மீன் மார்க்கெட்டில் இதுவரை 2500 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். தமிழ்நாட்டுக்கு இன்று 4.25 லட்சம் கொரோனா தடுப்பூசி டோஸ்கள் வர உள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 98 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>