×

தண்ணீர் கண்ணீர்

நன்றி குங்குமம் தோழி

இப்படி தண்ணீருக்காக அல்லாடுவதற்கு மக்களாகிய நாமே காரணம். இனிமேலாவது தாமதிக்காமல், தண்ணீர் சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து நீரை சேமிக்க நாம் முற்பட வேண்டும்.

தமிழ்நாடு மிகப்பெரிய அளவில் தண்ணீர் நெருக்கடியை சந்தித்து வருகிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னையில் தண்ணீர் பற்றாக்குறை தலைவிரித்தாடுகிறது. சென்னையின் முக்கிய நீர் ஆதாரங்களாக விளங்கும் செம்பரம்பாக்கம், புழல், பூண்டி உள்ளிட்ட ஏரிகள் அனைத்தும் வறண்ட நிலையில் உள்ளன. இந்நிலையில் ஒருபுறம், பெண்கள் குடிநீருக்காக காலி குடங்களுடன் சாலையில் அமர்ந்து போராடி வருகின்றனர்.

மறுபுறம், இணையத்தில் தற்போது எழுந்துள்ள தண்ணீர் நெருக்கடிக்கு யார் காரணம் என்ற விவாதம் எழுந்துள்ளது. சென்னையில் ஏற்பட்டுள்ள இத்தகைய கடுமையான தண்ணீர் பற்றாக்குறைக்கான உரிய காரணம் என்ன என்பதற்கு தமிழக அரசிடம் சரியான பதில் இல்லை. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக நிலத்தடி நீர் அளவுக்கு அதிகமாக உறிஞ்சப்பட்டதால், அதற்கும் தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தண்ணீர் பற்றாக்குறை பொதுமக்களை மட்டும் இல்லை, வர்த்தக நிறுவனத்தையும் ெபருமளவுக்கு பாதித்துள்ளது. பெரிய வணிக நிறுவனங்கள் முதல் சாதாரண டீ கடை வரை, சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட உணவகங்களை தற்காலிகமாக மூட ஆலோசிக்கப்பட்டு வருகிறது. பல உணவகங்களில் தண்ணீர் பற்றாக்குறையால் மதிய உணவு சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

நகரில் உள்ள மிகப்பெரிய ஐ.டி நிறுவனங்கள் தண்ணீரை விநியோகிக்க முடியாததால், வீட்டிலிருந்தே பணி செய்ய உத்தரவிட்டுள்ளது. சென்னையில் இப்படி உச்சகட்ட ஆட்டத்தை நிகழ்த்தி வருகிறது இந்த தண்ணீர் பற்றாக்குறை.

சென்னை கொருக்குப்பேட்டையில் தண்ணீருக்காக பொதுமக்கள் நடத்திய போராட்டத்தில் ஒரு பெண்மணி மனம் வெதும்பி கலங்கும் புகைப்படம் நாளிதழில் வெளியாகியிருந்தது. அது எல்லாரையும் ஒரு நிமிடம் கதிகலங்க வைத்துவிட்டது. இன்றைய சூழலில் ரத்தம்கூட தானமாக பெற்றுவிடலாம், ஆனால் தண்ணீர் காசுக் கொடுத்தாலும் பெற முடியாத நிலைக்கு நாம் தள்ளப்பட்டு இருக்கிறோம்.

உங்களில் எத்தனை பேர், வீடுகளில் மழை நீர் சேகரிப்பு அமைப்பு முறையை வைத்துள்ளீர்கள் என்ற கேள்விக்கு மக்களாகிய நம்மிடம் பதில் இல்லை. அடுக்கு மாடி குடியிருப்போ அல்லது தனி வீடோ எதுவாக இருந்தாலும், வீட்டைச் சுற்றி சிமென்டால் பூசி விடுகிறோம். இதில் தண்ணீர் நிலத்தடியில் செல்ல எங்கு வழி வகுத்து இருக்கிறோம்.

அதற்காக அமைக்கப்பட்டதுதான் ஒவ்வொரு வீட்டிலும் மழை நீர் சேகரிப்பு திட்டம். ஒரு சிலர் ஆரம்பத்தில் அமைத்து இருந்தாலும் அதை முறையாக செயல்படுத்தி வருகிறார்களா என்று பார்த்தால் அதற்கான பதில் இல்லை என்றுதான் பெரும்பாலானவர்களிடம் இருந்து வருகிறது. இந்த நிலை சென்னைக்கு இனி வராமல் இருக்க ஒவ்வொரு வீட்டிலும் நிலத்தடி நீரினை சேமிப்பதை அரசு கட்டாயப்படுத்த வேண்டும்.

தற்போது தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க சென்னையின் சுற்று வட்டாரத்தில் உள்ள விவசாய கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுக்க சென்னை குடிநீர் வாரியம் திட்டமிட்டுள்ளது. மேலும் கல்குவாரி நீர் நிலைகளை கண்டறிந்து அதை சுத்திகரித்து தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. சென்னையின் குடிநீர் தேவைக்காக தினசரி வீராணம், மீஞ்சூர் மற்றும் நெம்மேலியில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் கீழ் இருந்தும் தண்ணீர் எடுக்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த அளவு போதாது என்பதால் தண்ணீர் தட்டுப்பாட்டை சமாளிக்க சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள விவசாயக் கிணறுகளில் இருந்து நீர் எடுக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. தண்ணீர் வழங்க அனைத்து நடவடிக்கைகளும் அரசின் சார்பாக எடுக்கப்பட்டு வருவதாகவும் சென்னை குடிநீர் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே ஏரி, குளங்களை தூர்வாரும் பணிகள் துவங்கி உள்ளன. அரசு என்னதான் திட்டங்களை கொண்டு வந்தாலும் மக்களாகிய நாம் தண்ணீரை எவ்வாறு பாதுகாத்து வருகிறோம்? அதற்கான திட்டங்களை அவரவர் அமைத்துள்ளனரா? மேலும் தண்ணீர் தட்டுப்பாட்டினால் மக்கள் எந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என்பதை அவர்களே நம்முடன் பகிர்ந்து கொண்டனர்.

வாணிஸ்ரீ: ‘‘என் கணவருக்கு வங்கியில் வேலை. அதனால் சென்னைக்கு மாற்றலாகி ஐந்து வருஷமாகுது. முதலில் பெரம்பூரில் இருந்தோம். இப்ப வில்லிவாக்கத்தில் வந்து நான்கு வருஷமாகுது. சென்னையில் கடந்த இரண்டு ஆண்டுகளாவே மழை இல்லை. இருந்தாலும் இந்த வருடம் போல் தண்ணீர் பிரச்னை ஏற்பட்டதில்லை.

நாங்க இருப்பது வாடகை வீடு தான். போர் இருந்தும் நிலத்தடி நீர் இல்லாத காரணத்தால் தண்ணீர் இல்லை. அதனால தண்ணீர் லாரியை தான் நம்பி இருக்கோம். விடியற்காலை ஐந்து மணி முதல் பகல் ஒரு மணி வரை மற்றும் மாலை 6.30 மணி முதல் இரவு 12 மணிக்கும் எப்போது லாரி வருமென்றே தெரியாது. வண்டி சத்தம் கேட்டதும் குடத்தை தூக்கிக் கொண்டு ஓடணும். அப்படியே இணையத்தில் புக் செய்தாலும், ஒரு நாளைக்கு பத்துக்கு மேல் எடுக்க மாட்டாங்க. அப்படி புக் செய்தாலும் ஒரு மாசம் கழிச்சு தான் வருவாங்க. லாரி தண்ணீரை பொறுத்தவரை தினமும் வராது.

ஒரு நாள் விட்டு தான் வருவாங்க. ஒரு குடத்துக்கு 5 ரூபாய் முதல் 8 ரூபாய் வரை கட்டணம் கொடுத்து வாங்கணும். எங்க ஏரியாவில் அசோசியேஷன் இருப்பதால் ஒரு குடத்துக்கு 1 ரூபாய், அதுவும் பத்து குடம் தான் பிடிக்கணும். சில இடங்களில் குழாயில் தண்ணீர் வரும். அதற்கு தெரு முழுக்க க்யூ நிக்கும். சில இடங்களில் சின்டெக்ஸ் டேங்கில் தண்ணீர் நிரப்பிட்டு போவாங்க. அதில் தண்ணீர் பிடிச்சா ஒரு குடத்திற்கு பத்து ரூபாய். குடிக்கிற தண்ணீரை தான் காசு கொடுத்து வாங்க ஆரம்பிச்சிட்டோம். இப்ப அன்றாடம் புழங்கும் தண்ணீரையும் காசு கொடுத்து வாங்குற நிலைக்கு
வந்துட்டோம்’’ என்றார்.  

கிருஷ்ணஜா: ‘‘இரண்டு வருஷமா சென்னையில் மழை இல்லை. ேபான வருஷம் கூட இவ்வளவு தண்ணீர் பிரச்னையை நாங்க சந்திக்கல. ஆனா இந்த வருஷம் சொல்ல முடியாத அளவுக்கு தண்ணீருக்காக குடத்துடன் அலைந்து கொண்டு இருக்கிறோம். டேங்கர் லாரி எங்க ஏரியாவுக்கு வரும்போது, தண்ணீர் பிடிச்சு, வீட்டில் உள்ள டிரம்மில் நிரப்பணும்.

இரண்டு வருஷமா சைதாப்பேட்டையில் இந்த நிலமைதான். ஒரு குடம் தண்ணீருக்கு ரூ,10ன்னு ஒரு நாளைக்கு தண்ணீருக்காக மட்டுமே 100 ரூபாய் செலவு செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறோம். சில சமயம் ஆறு குடம் தான் கிடைக்கும். ஒரு சிலருக்கு ஒரு குடம் கூட கிடைக்காது. ஆறு குட தண்ணீரில் தான் குளிக்கணும், துணி துவைக்கணும், பாத்திரம் கழுவணும், சமையல் செய்யணும். ஒருத்தரின் தேவைக்கு குறைந்தபட்சம் மூணு குடம் தண்ணீர்  தேவைப்படும். கூட்டுக்குடும்பமா ஆறு பேர் இருக்கிற வீட்டில் ஆறு குடம் தண்ணீர் எப்படி பத்தும். நான் தனியார் நிறுவனத்தில் வேலைப் பார்த்து வருகிறேன். அலுவலகத்துக்கு நேரத்துக்கு போகலைன்னா பிரச்ைன தான்.

அதனாலேயே தண்ணீர் லாரி காலையில் வந்தா பர்மிஷன் போட வேண்டியதா இருக்கு. லாரி எப்ப வரும்ன்னே தெரியாது. சில சமயம் காலை ஆறு மணிக்கு வரும். சில சமயம் இரவு 12 மணிக்கு வரும். தூக்கமும் கெட்டுப் போகுது. வேலைக்கு சரியான நேரத்துக்கு போக முடியல. ரொம்பவே கஷ்டமா இருக்கு. சிலர் தண்ணீர் பிரச்னையால சொந்த வீட்டை காலி செய்திட்டு செங்கல்பட்டுக்கு வாடகைக்கு போயிட்டாங்க. போரில் தண்ணீர் போட்டாலும் மூணு குடம் வருவதே கஷ்டமா இருக்கு. சில சமயம் மோட்டார் காயில் சூடாகி பாழாயிடுது.

பூமியில தண்ணீர் ஊறினாதான் தண்ணீர் நிலமை மாறும். இந்த கஷ்டம் எப்போ தீரும்ன்னு தெரியல. இங்க எல்லா வசதியும் இருக்கு. ஆனா, தண்ணீர் மட்டும் இல்லை’’ என்றார். சித்ரா: ‘‘தண்ணீர் எங்க வருது. நாங்க இருக்கிறது கொளத்தூரில், வாடகை வீடு தான். போர் இறக்கியும் பூமியில் தண்ணீர் இல்லை. கார்ப்பரேஷன் பம்ப் இருக்கு.

அடிச்சா தண்ணீர் வராது. டேங்கர் லாரி தண்ணீரை தான் காசு ெகாடுத்து வாங்குறோம். முதலில் 12000 லிட்டர் 1200 ரூபாய் வாங்கினோம். இப்ப 8000 லிட்டரே 1800 ரூபாய். அந்த தண்ணீரும் மஞ்சள் நிறத்தில் இருக்கு. 8000 லிட்டர் தண்ணீர் நிரப்பினா 10 நாளைக்கு தான் வரும். போரும் இல்லை, குழாய் தண்ணீரும் இல்லை. லாரி தண்ணீரை நம்பி தான் எங்க பிழைப்பு ஓடுது. பூமியில தண்ணீர் ஊறினா தான், ஓரளவு பிரச்னை தீரும். தண்ணீர் லாரி எப்ப வராணுங்கன்னு கூட தெரியல. இந்த வருஷம் மழை வந்தா தான் தண்ணீர் பிரச்னை தீரும்.

அப்படியே வந்தாலும், தண்ணீரை சேமித்து வைக்க குளம், ஏரி, குட்டை எல்லாம் தூர் வாரி இருக்கணும். அதையும் இந்த ஆட்சி செய்ததான்னு தெரியல. தண்ணீர் குடத்தை தூக்கிக் கொண்டு ஜனங்க அல்லாடுவதை பார்க்கும் போது மனசு வலிக்குது.

ஒவ்வொரு தொகுதி எம்.எல்.ஏக்களும் அவங்க தொகுதியில் இறங்கி வேலை செய்யணும். அவங்களால முடியலையா? அதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை அந்த தொகுதி இளைஞர்களிடம் கொடுத்து அதற்கான வேலையை செய்ய சொல்லலாம். தலைமை சரியில்லைன்னு தான் சொல்லணும். நீர்நிலைகளை பிளாட் போட்டு வித்தாச்சு.

இப்ப கேரளா, கர்நாடகா கிட்ட தண்ணீர் கொடுங்கன்னு கெஞ்சிக்கிட்டு இருக்கோம். இங்க பாதி ஓட்டல் மூடிட்டாங்க. மருத்துவ மனையிலும் தண்ணீர் இல்லை. இந்த வருஷம் தண்ணீர் பிரச்னைக்காக ஒரு தீர்வு எடுக்கலைன்னா, சென்னை மக்கள் வேறு ஊருக்குதான் குடிபோகணும்’’ என்றார் இல்லத்தரசியான சித்ரா.

2015ல் சென்னையில் ஏற்பட்ட வெள்ளத் தின் போது, கடலில் கலக்கப்பட்ட தண்ணீரை சேமித்து இருந்தாேல இன்று நாம் இப்படி ஒரு பிரச்னையை சந்தித்திருக்க மாட்டோம். ஒவ்ெவாரு வருடமும் சென்ைனயில் வாழும் மக்கள் தொகை அதிகமாகி வருகிறது. அதை சமாளிக்க புதிய நீர்த்தேக்கத்தை அமைப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 2012ம் ஆண்டு புதிதாக நீர்த்தேக்கத்தை அமைப்பதற்கு இன்றைய அரசு ரூ.500 கோடி ரூபாய் நிதியுதவி பெற்றது.

அந்த திட்டமும் நிறைவேறவில்லை. நிதியின் நிலையும் தெரியல. இந்த திட்டம் நிறைவு பெற்று இருந்தால் சென்னையில் ஓரளவுக்கு தண்ணீர் பிரச்னையை சமாளித்திருக்கலாம். நாம் இப்படி தண்ணீருக்காக அல்லாடுவதற்கு மக்களாகிய நாமே காரணம். இனிமேலாவது தாமதிக்காமல், தண்ணீர் சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து நீரை சேமிக்க நாம் எல்லாரும் முற்படவேண்டும். நாம் வீணாக்கும் ஒவ்வொரு சொட்டு தண்ணீரும் நம் வருங்கால சந்ததியினரை பாதிக்கும் என்பதை நாம் நினைவுகொள்ள வேண்டும்.

- ப்ரியா
ஏ.டி.தமிழ்வாணன்

Tags :
× RELATED பனை ஓலை கைவினைப் பொருட்களில் வருமானம் பார்க்கலாம்!