பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி மோசடி செய்த வைர வியாபாரி மெகுல் சோக்சிக்கு டொமினிகா நீதிமன்றம் ஜாமீன் மறுப்பு!!

டொமினிகா: இந்தியாவில் வங்கி மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் தொழிலதிபர் மெகுல் சோக்சி வேறு நாட்டிற்கு தப்பி செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறி டொமினிகா நீதிமன்றம் ஜாமீன் மறுத்துள்ளது .  பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி  கடன் பெற்று மோசடி செய்த தொழிலதிபர் மெகுல் சோக்சி,  இந்தியாவில் இருந்து தப்பி ஆன்டிகுவா நாட்டில் குடியுரிமை பெற்று வசித்து வருகிறார். கடந்த மாதம் 23ம் தேதி அவர் ஆன்டிகுவாவில் இருந்து டொமினிகா நாட்டுக்கு மர்மமான முறையில் கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அவர் தனது நாட்டில் சட்ட விரோதமாக நுழைந்ததாக அந்நாட்டு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த நிலையில் அவர் ஜாமீன் கோரி அந்நாட்டு நீதிமன்றத்தை நாடினார்.

அப்போது இன்டர்போலின் ரெட் கார்னர் நோட்டீஸ் அவர் மீது பாய்ந்து இருப்பதால் ஜாமீன் வழங்க கூடாது என்று அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். மேலும் ஜாமீன் வழங்கினால் மெகுல் சோக்சி வெளிநாட்டிற்கு தப்பி விடுவார் என்றும் அந்நாட்டு அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். இதனை ஏற்றுக் கொண்ட அந்நாட்டு நீதிமன்றம் மெகுல் சோக்சிக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது. ஏற்கனவே மெகுல் சோக்சியை இந்தியா கொண்டு வர அதிகாரிகள் திணறி வரக்கூடிய நிலையில், தற்போது ஜாமீன் மறுக்கப்பட்டு இருப்பது மேலும் சிக்கலை அதிகரித்துள்ளது.

Related Stories: