மக்களுக்கு உதவும் நேரத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு கண்டிக்கத்தக்கது: கே.எஸ்.அழகிரி பேட்டி

சென்னை: கிழக்கு இந்திய கம்பெனி ஆட்சியை விட மோடி ஆட்சி கொடுமையாக உள்ளது என்றும், மக்களுக்கு உதவ வேண்டிய நேரத்தில் இப்படி பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது கண்டிக்கத்தக்கது என்று கே.எஸ்.அழகிரி கூறினார். கீழ்ப்பாக்கத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்து கொண்டார். அப்போது, கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது: பொருளாதார கொள்கையில் எவ்வளவு பெரிய மீறல்கள் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். மன்மோகன் சிங் அரசாங்கம் மக்களை மையப்படுத்தி இருந்தது. மோடியின் அரசாங்கம் மக்களிடம் இருந்து விலகி இருக்கிறது என்பதுதான் வித்தியாசம். அதுமட்டுமல்ல கடந்த 6 ஆண்டுகளில் 20 லட்சம் கோடிக்கு கலால் வரியை மோடி உயர்த்தி இருக்கிறார். பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு அதுவும் ஒரு காரணம்.

இந்தியாவில் கிழக்கு இந்திய கம்பெனி ஆண்ட போது கூட, விளைச்சலில் 6ல் ஒரு பங்குதான் வரி வசூலிக்கப்பட்டது. ஆனால் இன்றைக்கு 100க்கு 100 சதவீதம் வரியை மோடி வசூலிக்கிறார்.  கிழக்கு இந்திய கம்பெனியை விட ஒரு கொடுமையான ஆட்சியை பாஜ மேற்கொண்டுள்ளது இந்த தவறான போக்குகளை மாற்ற வேண்டும். ராகுல்காந்தி இதை வெளிப்படுத்தி இன்று நாடு முழுவதும் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்த வேண்டும் என்று எங்களுக்கு கட்டளையிட்டுள்ளார். அதன்படி தமிழகம் முழுவதும் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் முன்பு காங்கிரசார் இந்த விலை உயர்வை எதிர்த்து போராடி வருகின்றனர். மக்கள் விரோத ஆட்சி நடத்தும் மோடியை வெளியேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். பெரும் தொற்று வந்திருக்கக்கூடிய இந்த நேரத்தில் மக்களுக்கு உதவி செய்ய வேண்டியது ஒரு அரசின் கடமை.

ஆனால் இந்த நேரத்தில் வரியை உயர்த்தி, விலையை உயர்த்தி, மக்களின் வாழ்வாதாரத்தை சேதப்படுத்துவது என்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. சர்வாதிகாரிகள் தான் இதுமாதிரியான காரியங்களை செய்வார்கள். அதைத் தான் மோடியும் செய்கிறார். எனவே இந்த அரசின் பொருளாதார கொள்கையை காங்கிரஸ் எதிர்க்கிறது. தமிழகத்தில் புதிய அரசு ஆட்சி அமைத்து 30 நாட்கள் தான் ஆகிறது. பச்சிளம் குழந்தையாக தான் இருக்கிறது. இந்த கொரோனா நிறைவடைந்தவுடன் மற்ற வேலைகளை முதல்வர் ஆரம்பிப்பார். திமுக தேர்தல் அறிக்கையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்படும் என கூறப்பட்டது. எனவே கண்டிப்பாக குறைக்கப்படும். மோடிக்கு 6 ஆண்டு காலம் கொடுத்தீர்கள், இவருக்கு 30 நாட்கள் கூட நேரம் கொடுக்கமாட்டீர்களா?.  இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: