பேச்சுவார்த்தையில் திடீர் சமரசம் புதுச்சேரி சபாநாயகர் தேர்வு 16ம் தேதி நடக்கிறது

புதுச்சேரி: புதுச்சேரியில் முதல்வராக ரங்கசாமி பதவியேற்ற பிறகு அமைச்சர்கள், இலாகா ஒதுக்குவதில் என்.ஆர்.காங்கிரஸ்- பாஜ இடையே உரசல் நீடித்து வந்தது. இந்நிலையில் முதல்வர் ரங்கசாமியே நேரடியாக பாஜவின் தேசிய தலைமையை தொடர்பு கொண்டு உடனடியாக சபாநாயகர் பெயரை பரிந்துரைத்து கடிதம் அனுப்புமாறு கேட்டுக் கொண்டார். அதன்படி சபாநாயகர் பதவிக்கு ஏம்பலம் செல்வத்தின் பெயரை குறிப்பிட்டு பரிந்துரை கடிதத்தை ரங்கசாமிக்கு அனுப்பியுள்ளது. அதன்படி வரும் 16ம் தேதி காலை 9.30 மணி முதல் 10.30 மணிக்குள்ளாக சபாநாயகர் தேர்வு, பதவியேற்புக்கான நேரம் குறிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மாலையே அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என கூறப்படுகிறது. முன்னதாக வரும் 14ம் தேதி துணைநிலை ஆளுநர் தமிழிசையை சந்தித்து, அமைச்சரவைக்கான பட்டியலை முதல்வர் ரங்கசாமி வழங்க இருக்கிறார். இந்நிலையில், பாஜ தலைவர் சாமிநாதன் தலைமையில் அக்கட்சி எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. பின்னர், சாமிநாதன் கூறுகையில், பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்து விட்டது. நாங்கள் நெருக்கடி ஏதும் கொடுக்கவில்லை. முதல்வர் ரங்கசாமி, விரைவில் அமைச்சர்களை அறிவித்து, அவர்கள் பதவியேற்பார்கள். அத்தனை கேள்விகளுக்கும் திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை விடை கிடைக்கும். அடுத்த வாரத்தில் எல்லாம் நடக்கும் என்றார்.

Related Stories: