தமிழக முதல்வரின் ஒரு மாத செயல்பாடு சிறப்பாக உள்ளது: ப.சிதம்பரம் பாராட்டு

காரைக்குடி: தமிழக முதல்வரின் ஒரு மாத செயல்பாடு சிறப்பாக உள்ளது என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் நேற்று அளித்த பேட்டி: பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசு இதுவரை நியாயமான காரணம், விளக்கம் கூறவில்லை. இந்த விலை உயர்வு அனைத்து தரப்பினரையும் பாதிக்கிறது.கச்சா எண்ணெய் தயாரிப்பு, டீலர் கமிஷன் செலவு என பார்த்தால் லிட்டர் ரூ.39 முதல் ரூ.40 தான் வருகிறது. ஆனால் பல இடங்களில் லிட்டர் ரூ.100க்கு சென்றுவிட்டது. ஏழை, நடுத்தர மக்களின் வயிற்றில் அடித்து பெரும் லாபத்தை மத்திய அரசு சம்பாதிக்கிறது. தேர்தல் அறிக்கையை படிப்படியாக தமிழக அரசு நிறைவேற்றி வருகிறது. தடுப்பூசி தட்டுப்பாடு விவகாரம் மோடி அரசின் கையாலாகாத தன்மையை காட்டுகிறது. 10 நாட்களாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை காணவில்லை. தமிழகத்தில் 36 மாவட்டங்களில் தடுப்பூசி இல்லை. இதிலும் தமிழக மக்களை மோடி அரசு வஞ்சிக்கிறது. தமிழகத்திற்கு நீட் தேவையில்லை. விலக்கு அளிக்க வேண்டும். தமிழக முதல்வரின் ஒருமாத செயல்பாடு சிறப்பாக உள்ளது. பாராட்டுக்குரியது. இவ்வாறு தெரிவித்தார்.

Related Stories:

>