அம்மாவுக்கு கல்யாணம்!

நன்றி குங்குமம் தோழி

Advertising
Advertising

“அம்மா மினி, ரொம்ப நல்லா படிப்பாங்க. திறமைசாலி. ஒரு பள்ளியில் ஆசிரியரா வேலை பாத்துட்டு இருந்தாங்க. ஆனா நான் பிறந்ததும், என்ன பக்கத்துல இருந்து கவனிச்சுக்க, அவங்க வேலையை விட்டுட்டாங்க.

இப்படி, எது செய்தாலும் அது எனக்காகத்தான் செய்வாங்க. எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே அப்பாவும் அம்மாவும் எப்பவுமே சண்டை போட்டுட்டுதான் இருப்பாங்க. ஒரு நாள், அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சண்டை அதிகமாகி, அதுல அம்மா தலையில் அடிபட்டு ரத்தமா கொட்டுச்சு.

நான் பயத்துல பதற, இதெல்லாம் ஒன்னும் இல்ல டா. உனக்காக இன்னும் எவ்வளவு வேணா தாங்கிப்பேன். நீ சந்தோஷமா இருந்தா போதும்னு சொன்னாங்க. இப்படி கூட ஒருத்தர் இருக்க முடியுமானு, அம்மாவைப் பார்க்க ஆச்சரியமா இருந்துச்சு.

ஒரு கட்டத்துக்கு மேல, அம்மா, அப்பா ரெண்டு பேருக்குமே ஒத்துவரல. அப்பாதான் விவாகரத்து பத்தி முதல்ல பேசினார். இது சரியா வராதுனு சொன்னாரு. நான் பத்தாவது படிக்கும் போது, அம்மா என் கையை பிடிச்சு, வீட்டை விட்டு வெளியில வந்துட்டாங்க. அன்னிக்குதான், எனக்காக எதுவும் தாங்கிக் கொண்ட அம்மாவை, அவங்கள பாத்துக்க ஒருத்தர் வேணும்னு தோணுச்சு. அம்மாவுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணிவெச்சா, அவங்கள அவர் நல்லா பார்த்துப்பார்ன்னு நினைச்சேன். எனக்காக இவ்வளவு காலம் எல்லாவற்றையும் எதிர்த்து வாழ்ந்த அம்மா, கொஞ்சம் தனக்காகவும் வாழட்டும்னு நினைச்சேன்.

வீட்டை விட்டு வௌியே வந்த நாங்க, எங்க சொந்தக்காரங்க வீட்டில் தான் தங்கினோம். அவங்க எங்கள அன்பா தான் பார்த்துக்கிட்டாங்க. அம்மாவும் நிம்மதியா இருந்தாங்க. நானும் சந்தோஷமா இருந்தேன். இதற்கிடையில் அம்மாவுக்கு அப்பாவிடம் இருந்து விவாகரத்து கிடைச்சது.

அப்பா, அம்மாவை விவாகரத்து ெசய்து இருந்தாலும் என்னிடம் தொடர்பில்தான் இருந்தார். எல்லாமே நல்லாதான் போயிட்டு இருந்துச்சு. ஆனா, அம்மாவுக்கு கல்யாணம் பண்ணிவைக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் என்னுடைய அடி மனசில் ஆழமா பதிஞ்சிடுச்சு. நான் சின்ன பையன். இதை பத்தி அம்மாவிடம் பேச எனக்கு தைரியம் இல்லை’’ என்கிறார் கேரளாவைச் சேர்ந்த இளைஞர் கோகுல் தர்.

பொதுவாக பெற்றோர்கள்தான் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து, அவர்களுக்கு சந்தோஷமான வாழ்க்கையை அமைத்துத் தர வேண்டும் என்பதை கனவாக கொண்டிருப்பார்கள். ஆனால் கேரளாவைச் சேர்ந்த கோகுல் கொஞ்சம் வித்தியாசமானவர். அம்மாவின் மீது அதீத பாசமும், அன்பும் வைத்திருப்பவர். தனக்காக சின்ன வயசில், அம்மா செய்த தியாகங்களுக்காக, இப்போது அவர் சந்தோஷமாக இருக்க வேண்டும் என அவருக்கு திருமணம் செய்து வைக்க போராடி அதில் வெற்றியும் பெற்றுள்ளார். அம்மாவுக்கு மகன் செய்து வைத்த திருமணம், அனைவரின் கவனத்தையும்

ஈர்த்துள்ளது.

தொடர்ந்து கோகுலிடம் பேசியபோது, ‘‘அஞ்சு வருஷம் கழிச்சு, நான் கல்லூரி முடித்த சமயத்தில், அம்மாவுக்கு கல்யாணம் செய்வது பற்றி, வீட்டில் பேச்செழுந்தது. அம்மா கூட பிறந்தவங்க நிறைய பேர். எல்லாருக்கும் ரொம்ப சந்தோஷம். அதுவும் சரிதான், நல்லவரா, அம்மாவ பாசமா கவனிப்பவர் வந்தால் போதும், கல்யாணம் பண்ணிடலாம்னு சொன்னாங்க. ஆனா அம்மா மட்டும் சம்மதிக்கவே இல்லை.

‘‘இந்த வயசுல எதுக்கு இதெல்லாம். அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். நான் இப்பவே சந்தோஷமாதானே இருக்கேன். என்ன இப்படியே விட்டுடுங்க” என்றுதான் சொன்னார். ஆனால், எனக்காக இவ்வளவு நாள் அம்மா போராடியது, எனக்கு மட்டும்தான் தெரியும். இனியாவது அவர் வாழ்க்கையின் நல்லது கெட்டதை பகிர்ந்துகொள்ள ஒருத்தர் வேண்டும் என்று நான் உறுதியாய் இருந்தேன்.

அப்போதுதான், எங்க அம்மாவின் நண்பர் மூலமா, வேணு என்பவர் அறிமுகமானார். அவரும் ஏற்கனவே திருமணமானவர். ஆனால் இப்போ தனியாதான் இருக்கார். ரொம்ப நல்லவரா இருந்தார். அம்மாவிடம் ரொம்ப போராடி, இரண்டு குடும்பமும் சந்திக்க ஏற்பாடு செய்தோம். அவங்க குடும்பமும் அவரும் ரொம்ப அன்பா பழகினாங்க. என் அம்மா இவருடன் சந்தோஷமா இருப்பாங்கனு என் மனசில் பட்டுச்சு. அம்மாவிடம் குடும்பத்தில் இருக்கும் எல்லாரும் எடுத்து சொன்னோம். கடைசியில ஒரு வழியா அம்மா சம்மதிச்சாங்க. கொஞ்ச நாள் கழிச்சு, சின்னதா ரெஜிஸ்டர் மேரேஜ் செய்து வைத்தோம். இப்போ அம்மா சந்தோஷமா இடுக்கியில் இருக்காங்க’’ என்றார்.

உங்களுக்கு மக்களிடமிருந்து பாராட்டுக்கள்தான் அதிகம் வந்துள்ளது. இதை எதிர்பார்த்தீர்களா?

சத்தியமா இல்லை. நிறைய எதிர்ப்புதான் வரும்னு நினைச்சேன். ஆனா நான் பயந்ததுக்கு நேர் எதிரா அவ்ளோ பாராட்டுகளும் வாழ்த்துக்களும் குவிந்தன. ஃபேஸ்புக்கில் பதிவை போடுவதற்கு முன் ரொம்பவும் யோசிச்சேன். அம்மாவை யாராவது காயப்படுத்திடுவாங்கலோனு பயம் இருந்தது. இதில் மறைக்க என்ன இருக்கு.

யாரும் மறுமணம் செய்து கொண்டதில்லையா என்ன? எல்லாருக்கும் தெரியட்டுமேன்னு தான் முகநூலில் நானே அம்மாவுக்கு வாழ்த்து சொல்லி பதிவு போட்டேன். அவங்க வாழ்க்கை என்னோடு முடிந்துபோகக் கூடாது. என் வாழ்க்கையை நான் வாழ்வது போல, அவங்களுக்கான வாழ்க்கையை அவங்க வாழணும். நம்ம அம்மா, அப்பாவுக்கும் ‘பர்சனல் லைஃப்’ன்னு ஒன்னு உண்டுன்னு பசங்க புரிஞ்சுக்கனும். இந்த தலைமுறை கண்டிப்பா  புரிஞ்சுப்பாங்க.

குழந்தைகளுக்காக கசப்பான திருமண வாழ்க்கையில் வாழ்பவர்களுக்கு நீங்க சொல்ல நினைப்பது?பல பெற்றோர்கள், சேர்ந்திருந்தால்தான் குழந்தைகள் எதிர்காலம் நல்லா இருக்கும் என்ற எண்ணத்தில், எப்போதும் சண்டையும் சச்சரவுமாக வாழ்கின்றனர். நீங்கள் பூட்டிய கதவிற்குப் பின் சண்டை போட்டு, குழந்தைகள் முன் அன்பாய் இருந்தாலும், அவர்களுக்கு நீங்கள் சண்டை போட்டிருப்பது தெரிந்துவிடும்.

பெற்றோர்கள் குழந்தைகளுக்காக எது செய்யவும் தயாராக இருப்பார்கள். அதில் ஒன்றுதான், எவ்வளவு சண்டை வந்தாலும் சரி, திருமணப் பந்தத்தைத் தொடர்வது. அவர்கள் கணவன் மனைவியாய் இருப்பதைவிட்டு, தாய் தந்தையாக மட்டுமே வாழ்கின்றனர். சேர்ந்திருப்பது மட்டும் போதாது, குழந்தை வளர அதற்கு நல்ல மாதிரியான சூழ்நிலையை உருவாக்குவதும் முக்கியம்தான்.

‘‘என் அம்மா, அப்பா இருவருமே நல்லவர்கள்தான். ஆனால் வித்தியாசமானவர்கள். கருத்து வேறுபாடு, மனஸ்தாபம் என, வேற்றுமைகள் அதிகரித்துக்கொண்டே போக, சண்டைகளும் அதிகமாகியது. ஆனால், அவர்கள் பிரிந்து வந்ததும், இருவருக்குமே சுதந்திரம் கிடைத்தது. மனம் அமைதியானது. வாழ்க்கை அழகானது. இதற்காக விவாகரத்தும் மறுமணமும்தான் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு என்று சொல்லவரவில்லை. உங்கள் திருமணம் நிலைக்க அனைத்து வழிகளையும் முயற்சியுங்கள். பொறுத்திருந்து பாருங்கள்.

ஆனால் ஒரு கட்டத்தில், சரி வராது என்று உங்களுக்கே தோன்றும். அப்போது, இந்த சமூகத்தை பற்றி கவலைப்படாமல், உங்களுக்காகவும், குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு முடிவெடுங்கள்.அவங்க என் அம்மா.

என்ன இந்த உலகத்துக்கு கொண்டுவந்தவங்க. அதுக்காக, அவங்க வாழ்க்கையை எனக்காக அர்ப்பணிச்சு, கஷ்டப்பட வேண்டாம். என் சந்தோஷம் எப்படி அவங்களுக்கு முக்கியமோ, எனக்கும் அவங்க சந்தோஷம் ரொம்பவே முக்கியம். பிள்ளைகளுக்காக வாழ்க்கை வாழும் பெற்றவர்களை பற்றி ஒவ்வொரு குழந்தைகளும் புரிந்து கொள்ளணும்’’ என்று கூறி முடித்தார்.

’Child Trends’ என்ற நிறுவனம் நடத்திய ஆய்வின்படி, எப்போதும் சண்டையும் வாக்குவாதமுமாய் இருக்கும் குடும்பத்தில் வளரும் குழந்தைகள், நம்பிக்கையின்மை, மன அழுத்தம், தனிமையும் சேர்ந்து பள்ளி, கல்லூரிகளில்  குறைந்த மதிப்பெண் எடுக்க கூடும் எனத் தெரியவந்துள்ளது. இவர்கள் வளர்ந்ததும், பெற்றோரிடமிருந்து விலகிச்  சென்று பின் முழுமையாக அவர்களின் தொடர்பை துண்டித்துக்கொள்ளவும் வாய்ப்புகள் இருக்கின்றன.

இங்கு விவாகரத்தே சர்ச்சைக்குரியதாகத்தான் பார்க்கப்படுகிறது.

அதிலும் விவாகரத்து செய்து, மறுமணம் செய்வதென்பது அபூர்வம்தான். இதில் கோகுல் ஸ்ரீதர், தன் பெற்றோருக்கு நடந்த விவாகரத்தையும் ஏற்று, தன் தாய்க்கு ஒரு துணை தேவை என்று தீர்மானித்து, அவருக்கு திருமணமும் செய்துவைத்திருப்பது, அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவர் தன் வலைப்பக்கத்தில் தன் அம்மாவுக்கு திருமண வாழ்த்துக்கள் சொல்லி போட்ட இடுகைக்கு, கிட்டதட்ட ஐம்பதாயிரம் பேர் லைக் செய்து விருப்பம் தெரிவித்து, ஐயாயிரம் ஷேர்களும் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

- ஸ்வேதா கண்ணன்

Related Stories: