இலங்கைக்கு எதிரான டி.20, ஒரு நாள் போட்டி தொடர்: தவான் தலைமையில் 20 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு

மும்பை: இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் மற்றும் டி.20 போட்டிகளில் விளையாடுகிறது. ஒருநாள் போட்டிகளில் முறையே ஜூலை 13, 16, 19ம் தேதிகளிலும், டி.20 போட்டிகள் 22, 24, 27 ஆகிய தேதிகளிலும் கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடத்தப்பட உள்ளது. ஒருநாள் போட்டிகள் காலை 10 மணிக்கும், டி.20 போட்டிகள் இரவு 7 மணிக்கும் தொடங்கி நடத்தப்படுகிறது. இதனிடையே உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் பைனல் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுவதற்காக விராட் கோஹ்லி தலைமையிலான 24 பேர் கொண்ட இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. ரோகித் சர்மா, ரிஷப் பன்ட், லோகேஷ் ராகுல், ரஹானே, புஜாரா, மயங்க் அகர்வால், சுப்மான் கில் பும்ரா, முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், முகமது சிராஜ் உள்ளிட்ட முன்னணி அந்த அணியில் இடம்பெற்றுள்ளனர். இதனால் இலங்கை தொடருக்காக இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. கேப்டனாக ஷிகார் தவானும், துணை கேப்டனாக புவனேஷ்வர் குமாரும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மொத்தம் 20 வீரர்கள் அணியில் இடம் பிடித்துள்ளனர். அணி விபரம்: ஷிகர் தவான் (கேப்டன்), புவனேஷ்வர் குமார் (துணை கேப்டன்), பிரித்வி ஷா, தேவ்தத் படிக்கல், ருதுராஜ் கெய்க்வாட், சூர்யகுமார் யாதவ், மணிஷ் பாண்டே, ஹர்திக் பாண்ட்யா, நிதிஷ் ராணா, இஷான் கிஷன் (வி.கீப்பர்), சஞ்சு சாம்சன் (வி.கீப்பர்), யுஸ்வேந்திர சாஹல், ராகுல் சஹார், கே.கவுதம், குர்ணால் பாண்ட்யா, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி, தீபக் சஹார், நவ்தீப் சைனி, சி.சகரியா. இவர்களை தவிர வலை பந்துவீச்சாளர்களாக இஷான் பொரல், சந்தீப் வாரியர், அர்ஷ்தீப் சிங், சாய் கிஷோர், சிமர்ஜீத் சிங் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

ஸ்ரேயாஸ் அய்யர் தோள்பட்டை காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்துள்ள நிலையில், இன்னும் உடல் தகுதியை எட்டவில்லை. இதனால் அவர் அணியில் இடம்பெற வில்லை. இதேபோல் தமிழகத்தைச் சேர்ந்த மிதவேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜனும் காயத்தில் இருந்து முழுமையாக மீளாததால் சேர்க்கப்படவில்லை. இதனிடையே இலங்கை செல்லும் இந்திய அணிக்கு முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: