முன்னாள் அமைச்சர் மணிகண்டனை தொடர்ந்து மேலும் 3 அதிமுக அமைச்சர்கள் பாலியல் புகாரில் சிக்குகின்றனர்;'விரைவில் போலீசில் புகார் அளிக்கபோவதாக தகவல்

சென்னை: முன்னாள் அமைச்சர் மணிகண்டனை தொடர்ந்து மேலும் 3 அதிமுக அமைச்சர்கள் மற்றும் ஒரு முன்னாள் எம்பி ஆகியோர் பாலியல் விவகாரத்தில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சராக இருந்தவர் டாக்டர் மணிகண்டன். இவர், நடிகை சாந்தினியை திருமணம் செய்வதாக கூறி ஒரே வீட்டில் குடும்பம் நடத்தியதாகவும், பின்னர் 3 முறை கருக்கலைப்பு செய்ததாகவும், திருமணம் செய்யச் சொன்னபோது கொலை மிரட்டல் விடுப்பதாகவும் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து மணிகண்டன் தலைமறைவாகிவிட்டார். இதற்கிடையே ,அவர் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.  இந்தநிலையில் மேலும், 3 முன்னாள் அமைச்சர்கள், ஒரு முன்னாள் எம்பி ஆகியோர் பாலியல் விவகாரத்தில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் 2 பேர் தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் மேற்கு மண்டலத்தைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது.

 அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலர், நடிகைகள் பின்னால் சுற்றினாலும் இந்த 3 பேர் மட்டும் நடிகைகள் மட்டுமல்லாது தன்னிடம் உதவி கேட்டு வந்த பெண்களிடம் போன் நம்பரை வாங்கி அவர்களுடன் பழகி வந்ததாக கூறப்படுகிறது. சென்னையில் இருக்கும்போது அவர்களின் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றதாகவும் கூறப்படுகிறது. தற்போது பதவி இழந்த முன்னாள் அமைச்சர்கள், அந்த பெண்களை கண்டு கொள்ளாமல் ஏமாற்றி வருவதாக கூறப்படுகிறது. இதனால் முன்னாள் அமைச்சர்கள் வசிக்கும் பழைய வீடுகளுக்கு சென்று தேடியுள்ளனர். ஆனால் அவர்கள் வீட்டை காலி செய்து விட்டதால், அவர்களை தேடி வருவதாக கூறப்படுகிறது. மேலும் செல்போன் எண்ணையும் அவர்கள் மாற்றிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் இந்த 3 முன்னாள் அமைச்சர்கள் மீதும் புகார் செய்வது குறித்து வக்கீல்களுடன் அவர்கள் ஆலோசனை நடத்துவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேபோல, முன்னாள் எம்பி ஒருவரும் பாலியல் விவகாரத்தில் சிக்கியுள்ளார். மத்திய மண்டலத்தைச் சேர்ந்த அவர், தற்போது சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அவர் திருச்சியைச் சேர்ந்த ஒரு பெண்ணை ஏமாற்றி வருவதாக கூறப்படுகிறது. முன்னாள் எம்பி மீது புகார் செய்ய அந்தப் பெண் தயாரானபோது, முன்னாள் எம்பி அவரை தற்காலிகமாக சமாதானப்படுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் அவர் வாக்குறுதி அளித்தபடி நடந்து கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் அவர் மீது புகார் செய்ய போலீஸ் நிலையம் வரை வந்த பெண், பின்னர் புகார் செய்யாமல் சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. விரைவில் அவர் புகார் செய்வார் என்று பாதிக்கப்பட்ட பெண்ணின் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

3 முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் எம்பி மீது விரைவில் போலீசில் புகார் செய்ய இருக்கும் தகவல் வெளியாகியுள்ளது, அதிமுக விஐபிக்களை கலங்கடித்து வருகிறது. 1991 முதல் 1996ம் ஆண்டு வரை அதிமுக ஆட்சி அமைந்தபோது பல முன்னாள் அமைச்சர்கள் மீது நடிகைகள் வரிசையாக புகார் தெரிவித்தனர். அதன்பின்னர் ஜெயலலிதா இல்லாத கடந்த நான்கரை ஆண்டுகளில் அமைச்சர்களாக இருந்தவர்கள் ஆட்டம்போட்டதாக கூறப்படுகிறது. இப்போது ஆட்சி பறிபோனதால், ஒவ்வொரு விவகாரமாக வெளியாகத் தொடங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: