×

உயர் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிப்பு? இன்று அறிவிப்பு வெளியாகிறது

* தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10 முதல் 24ம் தேதி வரை இரண்டு வாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
* கொரோனா பரவல் அதிகரித்ததால் எந்தவித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கை தமிழக அரசு கடந்த 24ம் தேதியில் இருந்து கடந்த 7ம் தேதி (திங்கள்) அதிகாலை 6 மணி அறிவித்தது.
* அரசின் கடும் கட்டுப்பாடுகள் மூலம் 34 ஆயிரத்திற்கும் மேல் உயர்ந்து வந்த கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து, தற்போது 16,800 ஆக குறைந்துள்ளது.

சென்னை: தமிழகத்தில் வரும் 14ம் தேதியுடன் தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு முடிவடையும் நிலையில் கொரோனா தொற்றை முற்றிலும் தடுப்பதற்காக, முதல்வர் மு.க.ஸ்டாலின் உயர் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது, தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை மேலும் ஒரு வார காலம் நீட்டிக்க அரசுக்கு அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகிறது. தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே மாதம் 10ம் தேதி முதல் 24ம் தேதி வரையில் இரண்டு வாரத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கில் அரசு அறிவித்த தளர்வுகளை பயன்படுத்தி பொதுமக்கள் வெளியே சுற்றி வந்தனர். இதனால், கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியது. இதையடுத்து எந்தவித தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கை தமிழக அரசு மே 24ம் தேதியில் இருந்து கடந்த 7ம் தேதி (திங்கள்) அதிகாலை 6 மணி அறிவித்தது. அரசின் கடும் கட்டுப்பாடுகள் மூலம் 34 ஆயிரத்திற்கும் மேல் உயர்ந்து வந்த கொரோனா பாதிப்பு வெகுவாக குறையத் தொடங்கியது. தற்போது, தமிழகத்தில் தொற்று பாதிப்பு 16,800 ஆக குறைந்துள்ளது.

குறிப்பாக கொரோனா உச்சத்தில் இருந்த சென்னை, கோவையிலும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இதன் காரணமாக, காய்கறி, மளிகை, மீன், இறைச்சி, ஹார்ட்வேர், எலக்ட்ரிக்கல், வாகனங்கள் பழுதுபார்க்கும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் 30 சதவீத ஊழியர்களுடன் பணியாற்றவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வேலைக்கு செல்பவர்கள் இ-பதிவு செய்து, அதற்கான சான்று வைத்திருக்க வேண்டும். ஆனாலும், அத்தியாவசிய தேவைகள் மற்றும் அரசின் அனுமதிக்கப்பட்ட வேலைகளுக்கு செல்பவர்கள் மட்டும் இ-பதிவு அல்லது தகுந்த அடையாள அட்டை பெற்று வெளியே செல்லுமாறு போலீசார் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.  இந்தநிலையில், வரும் 14ம் தேதி காலை 6 மணியுடன் ஊரடங்கு முடிவடையும் நிலையில், தமிழகத்தில் தொற்று தினமும் குறைந்து வந்தாலும், தினசரி பாதிப்பு 16 ஆயிரத்துக்கும் அதிகமாக உள்ளது.

இதனால், ஊரடங்கை இதே தளர்வுகளுடன் நீட்டிக்கலாமா? அல்லது கூடுதலாக புதிய தளர்வுகளை வழங்கலாமா? என்பது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் நேற்று ஆலோசனை நடத்தினார். காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்,  தலைமை செயலாளர் இறையன்பு, மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன், வருவாய் துறை முதன்மை செயலாளர் குமார் ஜெயந்த், தமிழக டிஜிபி திரிபாதி, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் மற்றும்உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில், கொரோனா தொற்றை  மேலும் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய துரித நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு அதிகாரிகள் ஆலோசனை வழங்கினர். தடுப்பூசி போடும் பணியை விரிவுபடுத்துவது, தற்போது தினசரி 1.70 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.  இதை 2 லட்சமாக அதிகரிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

இதேபோல், கடந்த 7ம் தேதி அறிவிக்கப்பட்ட ஊரடங்கில் தொற்று பாதிப்பு அதிகம் இருந்த கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களுக்கு ஒருசில அத்தியாவசிய தளர்வுகள் மட்டுமே அளிக்கப்பட்டது. தற்போது, தொற்று குறைந்துள்ளதால் இந்த மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளை அளிப்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. இதேபோல், வரும் காலங்களில் தொற்று பரவல் அதிகரித்தால் அதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற சுகாதார துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது. ஆனாலும் பொதுமக்கள் அத்தியாவசிய பணிக்கு மட்டுமே வெளியே வர வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டுள்ளது.

இன்னும் ஒரு வாரத்தில் தமிழகத்தில் தொற்று பரவலை 5 ஆயிரத்துக்கும் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதனால், தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அல்லது கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கை தமிழகத்தில் மேலும் ஒரு வாரம் நீட்டிக்க அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம். ஆனாலும், இறுதி முடிவை தமிழக அரசுதான் எடுக்கும். தமிழகத்தில் தற்போதுள்ள ஊரடங்கை நீட்டிப்பது அல்லது தளர்வுகளுடன் ஊரடங்கை அறிவிப்பது குறித்து இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்’’ என்றார்.



Tags : Chief Minister ,MK Stalin , Chief Minister MK Stalin's consultation with top officials for another week of curfew extension? The announcement comes out today
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...