வழிப்பறி ஆசாமிகள் கைது

ஆலந்தூர்: குன்றத்தூர் அருகே கொளப்பாக்கம், அகத்தீஸ்வரர் கோயில் தெருவை சேர்ந்தவர் முகமது அர்ஷத் (28). இவர், சைதாப்பேட்டையில் ஒரு தனியார் செக்யூரிட்டி ஏஜென்சி நடத்தி வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து, மவுண்ட்-பூந்தமல்லி சாலையில் நந்தம்பாக்கம் அருகே பைக்கில் முகமது அர்ஷத் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு நின்றிருந்த 2 மர்ம நபர்கள், அர்ஷத்தின் பைக்கை வழிமறித்தனர். பின்னர் அவரிடம் கத்திமுனையில் பணம் கேட்டு மிரட்டினர்.

இதையடுத்து அவரது செல்போன், ₹750 ரொக்கப் பணத்தை பறித்துக்கொண்டு 2 மர்ம நபர்களும் தப்பி சென்றுவிட்டனர்.இதுகுறித்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அர்ஷத் புகார் தெரிவித்தார். இதையடுத்து அங்கு நந்தம்பாக்கம் குற்றப்பிரிவு பெண் ஆய்வாளர் ஷகிலா, ஏட்டு முத்தழகு ஆகியோர்  விரைந்து வந்தனர். அங்குள்ள சிசிடிவி காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் பதிவான உருவங்களை வைத்து, நேற்று 2 வழிப்பறி ஆசாமிகளை வளைத்து பிடித்தனர். பின்னர் அவர்களை காவல் நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர்.

விசாரணையில், அவர்கள் அசோக்நகர், புதூரை சேர்ந்த ஆகாஷ் (20), கே.கே.நகர் வீட்டுவசதி குடியிருப்பு பகுதியை சேர்ந்த அபினாஷ் (21) எனத் தெரியவந்தது.இப்புகாரின்பேரில் நந்தம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 வழிப்பறி ஆசாமிகளை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு பைக், ₹750 ரொக்கம், ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் வேறு எங்கேனும் கைவரிசை காட்டினரா என போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரிக்கின்றனர்.

Related Stories: