மரண வாசலில் நிற்கும் குழந்தைகளின் தந்தை

நன்றி குங்குமம் தோழி

Advertising
Advertising

உலகில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் அப்பா என்பவர் ஒரு ரோல் மாடலாக இருப்பார். அது ஆண், பெண் எந்த குழந்தையாக இருந்தாலும், அப்பா என்ற கதாபாத்திரம் அவர்களின் வாழ்க்கையில் என்றுமே முக்கிய பங்கு வகிப்பதுண்டு. டீன் ஏஜ் பருவங்களில் ஆண் குழந்தைகளுக்கு அப்பா மேல் ஒரு வித வெறுப்பு ஏற்பட்டாலும், அவர்கள் வளர்ந்த பிறகு அதுவே பாசமாக மாறுவது இயல்பு. ஆனால் சில குழந்தைகள் அப்பா, அம்மா இல்லாமல் இன்றும் தனித்து வளர்கிறார்கள்.

இவர்களுக்காகவே கடவுள் அனுப்பிய தூதர்கள் பலர் உள்ளனர். அதில் மக்களால் கொண்டாடப்படும் வளர்ப்பு தந்தை, முகமது ப்சீக். இவர் 80 குழந்தைகளுக்கு தந்தை. புற்றுநோயின் பாதிப்பு இருந்தும் அதை எதிர்த்து போராடிக் கொண்ேட அந்த குழந்தைகளை கண்ணும் கருத்துமாக வளர்த்து வருகிறார்.

திருமணமாகி குழந்தை இல்லை என்றாலும், ஒரு ஆதரவற்ற குழந்தையை தத்தெடுக்க பலர் யோசிக்கிறார்கள். அப்படியே தத்து எடுக்க மனம் வந்தாலும், ஆண் குழந்தையா, பெண் குழந்தையா எனப் பல தேர்வுகளுக்கு பிறகுதான் குழந்தைகளை தத்தெடுக்கிறார்கள். இதில் உடல்நலம் குன்றிய குழந்தைகள் என்றால், அவர்களை யாரும் திரும்பிக்கூட பார்க்க முன் வருவதில்லை.

அதிலும், உயிர்கொல்லி நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் என்றால் அவர்களை மருத்துவமனைகளோ அல்லது அங்குள்ள செவிலியர்களோதான் கவனித்துக்கொள்கிறார்கள். அவர்களை அன்புடன் தூக்கவோ, கொஞ்சவோ, பேசவோ யாருமே இருப்பது இல்லை. ஆனால் இது போன்ற ஆதரவற்ற நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தன் இரு கரம் நீட்டி அரவணைத்து வருகிறார் முகமது ப்சீக்.

லாஸ் ஏஞ்சல்ஸில் வசிக்கும் 63 வயதான முகமது ப்சீக், லிபியாவிலிருந்து அமெரிக்காவுக்கு பொறியியல் படிக்க வந்தவர். படிப்பு முடிந்ததும், அமெரிக்காவிலேயே திருமணமும் செய்து, வசித்து வருகிறார். உலகில் பல ஆயிரம் குழந்தைகள் பிறந்து, உடல் நலக்குறையால் கைவிடப்பட்டு அனாதை இல்லங்களில் இருக்கின்றனர். தனக்கு என்ன நடக்கிறது என்றுகூடத் தெரியாமல், மரணத்தை எதிர் நோக்கி இந்த குழந்தைகள் வாழ்ந்து வருகிறார்கள். அவர்களின் கடைசி நாட்கள் பயமும் வலியும் நிறைந்தது.

பொதுவாகவே குழந்தைகள் பிறரின் அன்புக்காகவும், கவனிப்புக்காகவும் ஏங்கக்கூடியவர்கள். அதிலும், உடல் நலம் சரியில்லாத போது, தனக்கு என்ன நடக்கிறது என்ற புரிதலே இல்லாமல், தனிமையில் கவனிப்புக்காக ஏங்கித் தவிப்பர்.முகமது, அப்படி குணப்படுத்தவே முடியாத வியாதியால், கடைசி நாட்களை எண்ணிக்கொண்டு தனிமையிலும் வலியிலும் வாழும் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்கிறார். இதுவரை தத்தெடுத்து வளர்த்த குழந்தைகளில், பத்து குழந்தைகளை தானே அடக்கமும் செய்திருக்கிறார். அதில் பல குழந்தைகள் அவர் கைகளிலேயே கடைசி மூச்சினை சுவாசித்துள்ளனர்.

20 வருடங்களாக இந்த சேவையை ஒரு நாள் கூட ஓய்வில்லாமல் தொடர்ந்து செய்து வருகிறார் முகமது. இவரின் சேவை திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்தது. காரணம் அவரின் மனைவி. கணவன், மனைவி இருவரும் சேவை நோக்கத்தோடு செயல்பட்டதாலோ என்னவோ கடவுள் அவர்களுக்கு ஒரு சிறப்பு குழந்தையை பரிசாக கொடுத்தார். முகமதுவின் மகன் Brittle bones, dwarfism என்ற பிரச்னைகளுடன் பிறந்தான். சாதாரணமாக உடைகளை அணியும் போது கூட அவனுக்கு எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் உண்டு.

காரணம் அவனுடைய எலும்பு அவ்வளவு மென்மையாக இருக்கும். கண்ணாடியை கையாள்வது ேபால் தன் மகனை மிகவும் பத்திரமாக பாதுகாத்து வருகிறார்கள் இந்த தம்பதியினர். ஆனால், இதற்காக ஒருநாளும் முகமது வருந்தியது இல்லை.

கடவுளே, ஏன் என் மகனுக்கு இந்த துன்பம் என ஒரு நாளும் அவர் குமுறியது இல்லை. இப்போது அவர் மகன், கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறார். முகமதோ தன் மனைவியுடன் சேர்ந்து மற்ற ஆதரவற்ற குழந்தைகளை பராமரித்து வந்தார். மனைவி இறந்த பிறகு அவரே தனியாகவே குழந்தைகளை பாதுகாத்து வருகிறார்.

அமெரிக்க வெளியிட்ட ஆய்வின் படி, அந்நாட்டில் மொத்தம் 35,000 குழந்தைகள் அனாதை இல்லங்களில் இருக்கின்றனர். அதில், 600 குழந்தைகளுக்கு தீவிர மருத்துவச் சிகிச்சை அளிக்கக் கூடிய நிலையில் உள்ளனர். அவர்களை பராமரிக்க, வளர்ப்பு பெற்றோர்களின் தேவை அதிகம் உள்ளது, ஆனால் இருப்பதோ ஒரே ஒரு முகமது ப்சீக்தான்.

1989ல் முகமது தான் எடுத்து வளர்த்த முதல் குழந்தையின் பிரிவை சந்தித்தார். அந்த குழந்தை தாயின் கருவில் இருக்கும் போது, விஷவாயு தாக்கியதில், அந்த வாயு வயிற்றில் இருந்த பெண் குழந்தையையும் பாதித்தது.

இதனால் பிறக்கும் போதே முதுகெலும்பு பிரச்சனையுடன் பிறந்தது. எப்போதும் உடலில் கட்டுப்போடப்பட்டு இருக்கும். அவள் இறக்கும் போது, ஒரு வயதுகூட நிரம்பவில்லை. அந்த முதல் மரணம்தான் அவரை மிகவும் பாதித்ததாக முகமது கூறுகிறார். தொடர்ந்து மூன்று நாட்கள் அக்குழந்தைக்காக குடும்பமே அழுதுள்ளது.

இவரிடம் வரும் குழந்தைகளில் பெரும்பாலும் அனாதை இல்லங்களிலிருந்து பராமரிக்க முடியாத நோய்வாய்ப்பட்ட நிலையில் இருக்கும் குழந்தைகள், உடல் ஊனம் காரணமாக பெற்றோர்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் அல்லது மருத்துவச் செலவு செய்ய முடியாத காரணத்தால் இவரிடம் தஞ்சம் அடைந்த குழந்தைகள் தான் உள்ளனர். தத்தெடுக்கும் ஒவ்வொரு குழந்தையையும் தனக்கு பிறந்த குழந்தையைப் போலவே பராமரித்து வருகிறார்.

இவருக்கு விடுமுறையும் கிடையாது. ஓய்வும் கிடையாது.

இரவு முழுக்க விழித்திருக்க வேண்டும். மருத்துவமனையில் குழந்தையுடன் பல நாள் தங்க வேண்டிவரும். இப்படி குழந்தைக்காக ஓடிக் கொண்டிருந்தவருக்கு கடவுள் ஒரு பிரேக் போட்டுள்ளார். முகமது ஒரு நாள் மருத்துவமனைக்கு சென்ற போது, அவருக்கு பெருங்குடலில் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மருத்துவர்கள் உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என சொல்ல, முகமது தனக்கு இன்னும் சில காலம் நேரம் தர வேண்டும் என்றும், தன்னை விட்டால், குழந்தைகளை கவனிக்க வேறுயாரும் இல்லை. இப்போது என்னால் மருத்துவமனையில் தங்க இயலாது என்று மறுத்துவிட்டார்.

குழந்தைக்கு காய்ச்சல் என்றாலே துடித்துப் போகும் பெற்றோரைப் பார்த்திருப்போம். ஆனால், அந்த குழந்தை பல நாள் உயிர் வாழாது என்று தெரிந்தே ஒவ்வொரு முறை ஒரு குழந்தை இறக்கும் போதும் சோகத்தை மறந்து, அடுத்து இன்னொரு குழந்தைக்காக தன்னை தயார்படுத்திக்கொள்கிறார்.  ஒரு குழந்தையை இழந்த துக்கத்திலிருந்து முழுவதுமாக மீள்வதற்கு முன்னரே அடுத்த குழந்தை இவரிடம் தஞ்சம் அடைந்துவிடும்.

இப்படி பல குழந்தைகள் சரியாக கவனிக்கப்படாமல், வாழ்வதற்கான நம்பிக்கை தரப்படாமலே தனியாய் இறந்து போவது வேதனையளிப்பதாகக் கூறும் முகமது, ‘‘தத்தெடுக்க விரும்பும் பெற்றோர்கள், குழந்தைகள் பல நாள் உயிர்வாழ மாட்டார்கள் எனத் தெரிந்ததும் தத்தெடுக்க முன்வருவது இல்லை. அவர்கள் அந்த இழப்பை நினைத்து பயப்படுகின்றனர். அது அவர்கள் குடும்பத்தையும், குழந்தைகளையும் பாதிக்கும் என தயங்குகின்றனர். ஆனால், உலகில் வாழும் நம்மை போல இன்னொரு உயிரை பராமரிப்பது, ஒவ்வொரு மனிதனின் கடமை. நம்மால் முடிந்ததைச் செய்துவிட்டு மற்றதை கடவுளிடம் விட்டுவிட வேண்டும்’’ என்கிறார்.

- ஸ்வேதா கண்ணன்

மகேஸ்வரி நாகராஜன்

Related Stories: