நம்மோடு உலகம் அழிவதில்லை!

நன்றி குங்குமம் தோழி

Advertising
Advertising

“சூர்யகங்கா, உலகின் தலைசிறந்த நாகரீகம் தோன்றுவதற்கான மூலகாரணம். இது போல் பல நதிகள் இருக்கின்றன. ஆனால், இன்று இந்தியாவில் உள்ள சில ஆறுகள் மோசமான தலை எழுத்துக்களைக் கொண்டிருக்கின்றன. கடந்த பதினைந்து ஆண்டுகளாக மக்களிடையே இயற்கைக்கு முரணான மாற்றங்கள் பல நிகழ்ந்துள்ளன. அதில் ஆறுகளையும், காடுகளையும் மிகவும் மோசமானதாக மாற்றியிருக்கிறோம் என்பதைப் பகுப்பாய்வு செய்யவில்லை. இந்த இயற்கை அழிவின் விளைவுகளில் முக்கியமாகப் பாதிக்கப்பட்டிருப்பது மழைப்பொழிவு. இந்த அழிவுகளின் அறிகுறிகளாக, திடீரென்று நம் பக்கத்திலிருக்கும் அடர்த்தியான மரங்கள் காணாமல்  போனதோடு, ஆறுகளும் குறுகலாகி இருக்கின்றன. இதையும் தாண்டிய பெரிய விளைவுகளை நாம் காண்பதில்லை.

இந்த காணமுடியாத விளைவுகளின் பல புள்ளிகளைத்தான் இப்படத்தில் சொல்லியிருக்கிறோம். புவியியல், ஆற்றல் தொழில்நுட்பங்கள், பொருளாதாரம் என இயற்கையின் சுரண்டலில் இருக்கும் புள்ளிகளை இணைக்கும் படமாக இதை முயன்றிருக்கிறோம். இருந்தாலும் படத்தில் சிறு துளிகளைத்தான் பார்க்கிறோம்” என்று தான் இயக்கி இருக்கும் ‘சூர்யகங்கா’ ஆவணப்படம் பற்றிப் பேசுகிறார் வள்ளி. இமயமலை மட்டுமல்ல, நதிகளின் குறுக்கே கட்டப்படும் எந்த பெரிய அணையும் சுற்றுச்சூழலுக்கும் சமூகத்துக்கும் அளவிட முடியாத சேதங்களை ஏற்படுத்தவல்லவை.

இந்தக் கட்டுமானங்களுக்கு ஆகும் செலவு, இவற்றால் கிடைக்கவிருக்கும் பலன், இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புகளால் உண்டாகும் நஷ்டம் ஆகியவற்றை ஒப்பிடும்போது, இந்தத் திட்டங்களால் லாபத்தைவிட அழிவுதான் அதிகம் என்பது நிச்சயம் புலப்படும். இங்கு வசிக்கும் மக்கள் மீது சிறிதும் அக்கறையும், அன்பும் இல்லாத தனியார் நிறுவனங்களின் கைகளில் ஆறு தொடர்பான உரிமைகள் ஒப்பு கொடுப்பது பேரழிவுக்கே இட்டுச் செல்கின்றன. அதே போல் கங்கையில் அணைகள், நீர்த்தேக்கங்கள் கட்டுவதால், மீன் வளம் பாதிக்கிறது.

கங்கை நதியை தூய்மையாக்க, மீன்கள் அவசியமானவை என்பதைத் தெள்ளத் தெளிவாகக் காட்டுகிறது இப்படம். “மலைப்பிரதேசங்கள், நிலச்சரிவு உள்ள பகுதிகள், மழைப் பொழிவு நேரங்களில் படப்பிடிப்பு நடத்தியது சாதாரண விஷயமில்லை” என்று கூறும் வள்ளி,  இந்த ஆவணப்படத்தைச் சுயாதீன முறையில் தயாரித்திருக்கிறார். “அணைக் கட்டுவதற்கு முன் பல முறை நீரோடு கங்கை நதியைப் பார்த்த எனக்கு, அதிர்ச்சியாக இருந்தது நீரில்லாமல் பார்ப்பதற்கு. அங்கிருக்கும் மக்களுக்கு இங்கு என்ன நடக்கிறது என்பது தெரியாமல் இருப்பதுதான் ஆச்சரியமாக  இருக்கிறது.

பல ஆயிரம் வருடமாக இருந்து வந்த தாய் கடவுள் இல்லாமல் போய்விட்டது” என்று தனது ஆதங்கத்தைப் பகிர்கிறார் வள்ளி. இந்த சூர்யகங்கா ஆவணப்படத்தைப் பார்க்கும் போது, ‘‘இமய மலைப் பகுதியை இயற்கையோடு இயைந்த வகையில் வளப்படுத்துவதை விட்டுவிட்டு, கோடீஸ்வரர்களான ஒப்பந்தக்காரர்களின் விருப்பத்தைக் கேட்டு, அவர்கள் அளிக்கும் ஆலோசனைகளின்படி மலைப் பகுதியில் ஆறுகளை அவற்றின் நீர்ப்போக்கைத் தடுத்து, மிகப்பெரிய நீர்த்தேக்கத்தையும் அணைகளையும் கட்ட முடிவு செய்யப்பட்டிருக்கிறது. மலையின் சரிவுப் பகுதிகள் நீர்த்தேக்கத் திட்டங்களுக்காக நேராக்கப்படுகின்றன.

மரங்கள் ஆயிரக்கணக்கில் வெட்டப்பட்டு நிலம் சமன்படுத்தப்படுகிறது. தரைப்பகுதியின் நெகிழ்வுத்தன்மையை உணராமல் பெருமளவுக்குத் தண்ணீர் தேக்கப்படுகிறது. மலையின் காடும், தாவரங்களும், உயிரினங்களும் அழிவதைப் பற்றிக் கவலைப்படவில்லை. ஓயாமல் வெட்டுகிறார்கள், மண்ணை அள்ளிக் கொட்டுகிறார்கள்” என்று இருதயேஷ் ஜோஷியின் புத்தகத்துக்கு பில் அட்கன் என்ற இந்தியக் குடியுரிமையைப் பெற்ற சமூக ஆர்வலர் முன்னுரை எழுதியிருப்பது நினைவுக்கு வருகிறது.

மின்சாரம் தயாரிப்பதற்காகக் கங்கை நதியை பாழாக்கியது பற்றி மட்டும் பேசியதோடு நின்றுவிடாமல், நிலக்கரியைப் பயன்படுத்தி இயங்கும் அனல் மின் நிலையங்களிலிருந்து வெளியாகும் சல்பர் ஆக்ஸைடு, நைட்ரஜன் ஆக்ஸைடு, காற்றில் கலக்கும்  துகள்கள் ஆகியவை சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை உருவாக்குபவை என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார் வள்ளி. இந்தியாவில் நிலக்கரியைக் கொண்டு 1000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்வது என்றால், ஓர் ஆண்டுக்கு 55 லட்சம் டன் நிலக்கரி வேண்டும்.

சராசரியாக ஒரு லாரிக்கு 20 டன் எனக் கொண்டால் 5 லட்சம் லாரிகள் தேவைப்படும். ஒரு லாரியிலிருந்து 50 கிலோ நிலக்கரி கீழே கொட்டுவதாக வைத்துக் கொண்டால் கூட ஆண்டுக்கு 25 ஆயிரம் நிலக்கரி பாதையில் சிதறி நிலத்தைப் பாழாக்குகிறது. “ஒவ்வொரு முறையும் நாம் எங்காவது பயணிக்கும் போது அவ்விடங்களில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களைப் பார்க்காமலேயே கடந்து விடுகிறோம். அதனால் இன்று பலவற்றை இழந்திருக்கிறோம்” என்று பதிவு செய்திருக்கும் இப்படத்தில், கூடுதல் சிறப்பாக பழம்பெரும் நடிகர் நஸ்ருதின் ஷா-வின் பங்கு முக்கியமானது. மின்சாரம் நமக்கு அத்தியாவசியமானது.

 ஆனால், அதைப் பெறுவதற்காக இயற்கையைச் சீண்டுவது அவ்வளவு நல்லதல்ல. மாறாக நீர்மின் திட்டங்கள் நதிகளின் இயற்கை போக்கை மாற்றாமல் இருக்கவேண்டும். நிலம், நீர், காற்று, உயிரினங்கள், குறிப்பாகப் பழங்குடி மக்கள்… என எவற்றையும் பாதிக்காதவாறு சிறிதளவில் பயன்பாட்டில் இருக்கும் காற்றாலை, சூரிய சக்திக் கொண்டு மின்சாரம் தயாரிப்பதை மிகைப்படுத்துவோம். மலையில் வளரும் தாவரங்கள், மரங்களை அழிக்காமல் பெருக்கும் வகையிலும், உயிரினங்கள் வாழும் வகையிலும், இயற்கைக் கண்ணி அறுபடாத வகையிலும் திட்டங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை இந்த ஆவணப்படத்தின் முக்கியக் கருவாகக் கொண்டு நம்மை அழைக்கிறார் வள்ளி.

Related Stories: