நெருக்கடியான நேரங்களைக் கையாள்வது எப்படி?!

நன்றி குங்குமம் டாக்டர்

Advertising
Advertising

நம் வாழ்க்கைப் பயணம் என்பது அடைய வேண்டிய இலக்குகளுக்கானது மட்டுமே அல்ல. நம்முடைய அறிவு, கல்வி, தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் நாம் சந்தித்த மக்களிடமிருந்து கற்றுக்கொண்ட பாடங்கள் போன்றவற்றையும் உள்ளடக்கியது. இந்தப்பயணத்தின் வழியில் ஒருவேளை எதிர்பாராத குறுக்கீடுகள் வரலாம்.

தீர்க்க முடியாதது போல தோன்றும் சிக்கல்கள் வரலாம். இந்த பிரச்னைகள் பொருளாதாரம், உறவுச்சிக்கல், உங்கள் உடல்நலம் என வேறு எதுவாகவும் இருக்கக்கூடும். இவற்றைச் சமாளிக்க தயாராகாமல் இருந்தால் நம்மை புரட்டிப்போட்டு செய்வதறியாது அப்படியே நிலைகுலைந்து நின்றுவிடுவீர்கள். இவற்றைக் கையாளக் கற்றுக் கொள்ள Crisis management பற்றி புரிந்துகொள்ள வேண்டும் என்கிறார்கள் உளவியலாளர்கள். அதுபோல், ஆபத்தைச் சந்திக்க உதவும் வழிமுறைகள் பற்றிப் பார்ப்போம்.

பிரச்னையின் தன்மை அறிதல்இழப்புகளையும், நெருக்கடிகளையும் சமாளிக்கும் விதத்தில் நாம் ஒவ்வொருவரும் வித்தியாசப்படுகிறோம். இழப்பை எவ்வாறு சமாளிக்கிறீர்கள் என்பதைப் பொருத்து, நீங்கள் யார் எனவும், எவ்வாறு மாறப்போகிறீர்கள் என்பதையும் தீர்மானிக்கிறீர்கள். சில நேரங்களில் பிரச்னையை கையாள்வது மிக எளிதானதாகவோ அல்லது நெருக்கடியானதாகவோ இருக்கலாம்.

நோய்கள், பொருளாதார நெருக்கடி, உறவுச்சிக்கல் இப்படி நாம் அடிக்கடி சந்திக்கக்கூடிய பிரச்னைகளை எடுத்துக் கொண்டால் அடிப்படையில் நம்முடைய பணி சார்ந்தவைகளாகவே இருக்கின்றன. இவற்றை எதிர்கொள்ள தேவை, சுய பராமரிப்பு பயிற்சிகள் மற்றும் வாழ்க்கை மேலாண்மை. அதற்கு, உங்கள் நேரத்தை, உங்கள் வேலையை, உங்கள் வாழ்க்கையை  நிர்வகிக்க வேண்டும். அதைக் கற்றுக் கொண்டால், நிச்சயம் எந்த மாதிரியான பிரச்னையையும் எதிர்கொள்ளத் தயாராகிவிடுவீர்கள்.

பயனில்லாதவற்றை செய்யாதே...

பலர் இதை புரிந்து கொள்வதில்லை. சுயநலம் என்று நினைக்கிறார்கள். அலுவலகத்திலோ, மற்ற இடத்திலோ ஒருவர் கொடுக்கும் எல்லா வேலைகளையும் செய்ய வேண்டிய அவசியமில்லை.

உங்களது நேரத்தை எடுத்துக்கொள்ளும் அல்லது உங்களது தனிப்பட்ட வாழ்க்கையை பாதிக்கும் வேலையாக இருக்குமானால், கண்டிப்பாக அதற்கு ‘நோ’ சொல்ல பழகிக் கொள்ளுங்கள். எல்லாவற்றிற்கும் ‘யெஸ்’ சொல்லாதீர்கள். அது சுயநலமாக இருக்காது, பதிலாக உங்கள்மீது கட்டுப்பாட்டை எடுத்துக்கொண்டு உங்கள் வாழ்க்கையை நிர்வகிக்க உதவும்.

நேர நிர்வாகம்

நேரத்தை நிர்வகிக்க முதலில் ஒவ்வொரு வேலைக்கும் கால அட்டவணை வகுத்துக் கொள்ளுங்கள். அதிலிருந்து தவறாதீர்கள். குறைந்தபட்சம் அடிப்படை நேர ஒழுக்கத்தை பின்பற்றினாலே எதிர்பாராமல் ஏற்படும் சில நேர நெருக்கடிகளை சமாளிக்க முடியும். அலுவலக வேலை, தூங்குவது, டிவி பார்ப்பது, புத்தகம் படிப்பது அல்லது ஃபேஸ்புக், டிவி்ட்டர் எதுவாக இருந்தாலும் அதற்காக நடுநிலையாக நேரத்தை செலவழிக்க முயற்சி செய்யுங்கள்.

வேலையை பகிர்தல்

வீட்டிலோ, அலுவலகத்திலோ எல்லா வேலைகளையும் நீங்களே செய்தால்தான் சரியாகச் செய்ய முடியும் என்று தவறாக கணக்குப் போடாதீர்கள். முக்கியமான, உங்கள் நேரடி கண்காணிப்பு தேவைப்படும் வேலையென்றால் நீங்களே செய்யலாம். சாதாரண வேலைகளை மற்றவர்களை செய்ய வைப்பதன் மூலம் அவர்களுக்கும் பயிற்சி அளிப்பது போல் இருக்கும், அதேவேளை உங்களது வேலையையும் குறைத்துக் கொள்ளலாம்.

இதனால் தேவையில்லாத மன அழுத்தத்தை தவிர்க்க முடியும்.

இடைவெளி

கடுமையான வேலைப்பளு இருக்கும்போது, சிறிது இடைவெளி கொடுத்து வெளியே சென்று வரலாம். மிகப்பெரிய புராஜெக்ட் ஒன்றை முடித்திருப்பீர்களானால் சின்னதாக ஒரு ட்ரிப் அடிக்கலாம். பணியிலிருந்து இடைவெளி பெறுவது குழம்பிப்போன உங்கள் மூளையை தெளிவாக்கவும், நெருக்கடிக்கு நடுவில் உங்கள் ஆற்றலை புதுப்பிக்கவும் உதவியாக இருக்கும்.

வெளிப்படைப் பேச்சு

நெருக்கடியான நேரங்களில் குடும்பத்தினரையும், நண்பர்களையும் சார்ந்திருக்க வேண்டும். அவர்களிடம் வெளிப்படையாகப் பேசி, கருத்துக்களை கேட்டறிவதும் அவசியம். உங்கள் குடும்பத்தாரும் பாதிக்கப்படுபவர்களாக இருந்தால், அவர்களுடனான உரையாடல், பிரச்னையிலிருந்து வெளிவருவதற்கான வழிகளை கண்டறிவதற்கும், பிரச்னையின் தீவிரத்தை குறைப்பதற்கும் உதவும்.

கனிவாக இருங்கள்

பிரச்னை உங்களுக்கோ, உங்களைச் சார்ந்து இருப்பவர்களுக்கோ இருக்கலாம் என்பதால் உங்களை நேசிக்கிறவர்களையும், நீங்கள் நேசிக்கிறவர்களையும் மறக்காதீர்கள். இந்த நேரத்தில் அவர்களிடம் மிகுந்த கனிவோடு நடந்து கொள்ள வேண்டும். அவர்களுக்காக செய்யும் சின்னச்சின்ன செயல்களும் அவர்களுக்கு ஆறுதல் கொடுக்கலாம். உங்கள் வேலைப்பளுவில் அவர்களை புறக்கணித்துவிடாதீர்கள்.

நிலைமையை ஏற்றுக் கொள்ளுங்கள்

நமக்கு ஒரு நிகழ்வு ஏற்படுகிறதென்றால், கண்டிப்பாக இருக்காது என்று முதலில் அதை மறுப்போம். அதனால் கோபம் வரும்; அதைப்பற்றி விவாதம் செய்வோம். அதற்காக வருந்தி மன அழுத்தம் உண்டாகும். இறுதியில் அதுதான் உண்மை என்று ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். கோபப்பட்டு, அழுது, அங்கே நின்று கொண்டிருப்பதால் எந்தப் பயனும் இல்லை.

தீய பழக்கங்களுக்கு அடிமையாக வேண்டாமே...

ஒரு இழப்பை எதிர்கொள்ளும்போது அதிலிருந்து தப்பிப்பதற்காக கெட்ட பழக்கங்களுக்கு தூண்டப்படுவீர்கள். அவை தற்காலிக சந்தோஷத்தைக் கொடுத்தாலும் நிரந்த அடிமையாகி, பின்னர் அதுவே வாழ்நாள்  போராட்டமாகிவிடும். உணர்ச்சியாக இருக்கும் இந்தத் தருணத்தில், கெட்ட பழக்கங்கள் கொண்ட நண்பர்களுடனான நட்பைத் தவிர்த்துவிடுங்கள். வேடிக்கைக்காகக்கூட போதைப் பொருட்களை பயன்படுத்த வேண்டாம்.

ஆரோக்கியம் அவசியம்

சோகமாக இருக்கிறோம் என்பதற்காக சரியான நேரத்தில் சாப்பிடாமல், உறங்காமல் உடலை கெடுத்துக் கொள்ள வேண்டாம். உங்கள் கவனத்தை திசை திரும்ப ஏதேனும் உடற்பயிற்சி அல்லது யோகா வகுப்புகளில் சேரலாம். மன ஆரோக்கியத்திற்கு சிறந்த மனநல ஆலோசகரை அணுகலாம். இன்பம், துன்பம் இரண்டையும் சமநிலையாக எடுத்துக்கொண்டு, உங்களுக்கான இந்த வாழ்க்கையை, முடிந்தவரை மகிழ்ச்சியாக அனுபவிக்கலாம். அதற்கான எல்லா உரிமையும் உங்களுக்கு உண்டு!

- என்.ஹரிஹரன்