கிச்சன் டிப்ஸ்

நன்றி குங்குமம் தோழி

* கறிவேப்பிலை, கொத்தமல்லித் தழையை வாங்கியவுடன் வாழைப்பட்டையில் சுற்றி வைத்தால் வாடாமல் இருக்கும்.

* பச்சை மிளகாயை சுடுநீரில் போட்டு சிறிது நேரம் ஆனதும் எடுத்து சமையல் செய்தால் அல்சர் ஏற்படாது.

* சப்பாத்தி மாவோடு சிறிது அரிசி மாவு சேர்ப்பதால் லேசான சப்பாத்திகளை தயாரிக்க முடியும். அவை எளிதில் ஜீரணம் ஆகும்.

* எந்த உப்புமா செய்தாலும் இறக்குவதற்கு முன் இரண்டு மேசைக்கரண்டி கெட்டித்தயிர் சேர்த்து கிளறி இறக்கினால் உப்புமா வித்தியாசமான சுவையில் இருக்கும்.

* மாங்காய் கிடைக்கும் காலத்தில் மாங்காயை 4 துண்டுகள் செய்து உப்பில் ஊற வைத்து வெயிலில் காய வைத்துக்கொள்ளவும். மாங்காய் கிடைக்காத காலங்களில் சாம்பாரில் போட சுவை கூடும்.

* ஒரு கைப்பிடி பழைய சாதத்தை மிக்ஸியில் அரைத்து இட்லி மாவுடன் கலந்து தோசையாக வார்க்கவும். கல்லில் ஒட்டாமல், எண்ணெய் குடிக்காமல் அருமையான பேப்பர் ரோஸ்ட் சுலபமாக வார்த்தெடுக்கலாம்.

.

* கசகசாவை ஊற வைக்காமல் அரைக்க முடியாது. அதனால் கசகசாவுடன் இரண்டு பட்டை, வெங்காயம் சிறிது, பொட்டுக்கடலை என எல்லாவற்றையும் வறுத்து பொடியாக பண்ணிக்கொண்டால் சமையலின் போது தூவிக்கொள்ளலாம்.

* ரசம் மணமாக இருக்க தனியா - மூன்று கப், து.பருப்பு - 1/2 கப், மிளகு -1/4 கப், சீரகம்- 1/4 கப், காய்ந்த மிளகாய் - 1/2 கப் இவை எல்லாவற்றையும் தனித்தனியாக வறுத்து அந்தப் பொடியைக்கொண்டு ரசம் செய்தால் சூப்பராக இருக்கும்.

* வெஜ்.பிரியாணி, ஃப்ரைடு ரைஸ் செய்யும்போது ஒரு பீட்ரூட்டை  குக்கர்ல வேக வைத்து பொடி துண்டுகளாக்கி பிரியாணி மீது போட்டால் அழகாகவும், டேஸ்டாகவும் இருக்கும்.

* பிரியாணியை அடுப்பிலிருந்து இறக்கும்போது எலுமிச்சை தோலை பொடியாக நறுக்கி நெய்யில் பொரித்து தூவி விட்டால் மணம்தூக்கும்.

* கோடை வெயிலில் சிறுநீர் எரிச்சல் ஏற்படும். இதற்கு அதிமதுரம், கடுக்காய், மிளகு சம அளவு எடுத்து மிதமாக வறுத்து தேனில் கலந்து சாப்பிட்டால், எரிச்சலுடன் சூட்டினால் உண்டாகும் இருமலும் குணமாகும்.

* தக்காளி ரசத்திற்கு சீரகம், கொத்தமல்லி, கறிவேப்பிலை இவைகளை மசிய அரைத்துப் போட்டால் சுவையுடன் மணமும் கூடும். மீண்டும், மீண்டும் சாப்பிட தூண்டும்

* மைசூர் பாகு, பர்பி செய்து கட்டி போட்டு எடுக்கும்போது சரியாக சில சமயம் வராது. கட்டி போட்டவுடன் அப்படியே ஒரு பேப்பர் மீது கவிழ்த்துத் தட்டினால் பிசிறு இல்லாமல் கத்தியால் வெட்டி எடுக்கலாம்.

* வெண்பொங்கல், உப்புமா ஆகியவற்றைத் தண்ணீர் அதிகமாகச் சேர்த்து குழைய சமைக்கவும். நேரமானாலும் இறுகி கட்டிபோல் ஆகாது.

* தேநீர் தயாரிக்கும்போது அதில் சிறிதளவு சுக்குப் பொடியும் தூவினால் தேநீரின் சுவை கூடும்.

* காரக்குழம்பு மீதியானதும் அதை அப்படியே சுட வைத்து கொடுக்காமல் வாணலியை அடுப்பில் வைத்து ஒரு கரண்டி எண்ணெய் விட்டு காய்ந்ததும் குழம்பைக் கொட்டி கொதிக்க வைத்து இறக்கி விடுங்கள். புதுக்குழம்பு சமைத்தது போல இருக்கும்.

* பூரி மாவு பிசையும்போது பிரட் துண்டுகளை நீரில் நனைத்துச் சேர்த்துப் பூரி செய்தால் கரகரவென்று இருக்கும். சுவையும் அதிகம்.

* அப்பளத்தைச் சுட்டு அதனுடன் மிளகாய் வற்றல், பெருங்காயம் இவற்றை வறுத்து தேவையான அளவு உப்புடன் சேர்த்துப் பொடி செய்து வைத்துக்

கொண்டால் சாதத்தில் போட்டு நெய் விட்டு சாப்பிடலாம்.

பித்தம் போக்கும் சீரகம்!

* சீரகத்துடன் கற்கண்டைக் கலந்து மென்று தின்றால் இருமல் குணமாகும்.

* சீரகப் பொடியோடு தேன் கலந்து சாப்பிட்டால் விக்கல் அகலும்.

* சீரகத்தை அரைத்து உடம்பில் பூச அரிப்பு நிற்கும்.

* சீரகத்தை வாழைப்பழத்துடன் பிசைந்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் ரத்த மூலம் தீரும்.

* சீரகத்தை வறுத்து, சுடுநீரில் போட்டு பால் கலந்து சாப்பிட பசி கூடும்.

* சீரகத்தை மிளகுப்பொடியோடு கலந்து காய்ச்சி வடிகட்டிக் குடித்தால் அஜீரணம், மந்தம் நீங்கும்.

* சீரகத்துடன் உப்பைச் சேர்த்து மென்று தண்ணீர் குடித்தாலோ அல்லது வெறும் சீரகத்தை மென்று தின்றாலோ வயிற்றுவலி நீங்கி செரிமானம் ஏற்படும்.

வெந்நீரின் மகத்தான நன்மைகள்!

குளிர்ந்த நீரைக் குடிப்பது அனைவருக்கும் பழக்கம் ஆகிவிட்டது. காய்ச்சல், சளி, இருமல் என்று உடல் உபாதை ஏற்படும் நேரத்தில் மட்டுமே தான் நாம் வெந்நீரை அருந்துகிறோம். உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் காலையில் மட்டும் வெந்நீரில் சிறிது தேனை கலந்து குடிப்பார்கள். வெந்நீர் அருந்துவது எடையைக் குறைக்க மட்டும் அல்ல உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் ஆற்றல் உடையது.

உடல் வெப்பநிலையை பராமரிக்க, ஊட்டச்சத்துக்களை உடலில் சேர்க்க, நச்சுக்களை அகற்ற என நீர் ஏராளமான வேலைகளை நமக்குள் செய்கிறது. நீரில் சோடியம், கால்சியம், மக்னீசியம், தாமிரம் எனப் பல்வேறு தாது உப்புக்கள் கலந்திருக்கின்றன. இப்படி, பல நன்மைகளை அள்ளித் தரும் நீரைக் கொதிக்கவைத்து அருந்துவதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்று தெரிந்து கொள்வோம்.

* காலையில் எழுந்ததும் வெந்நீர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் நம் உடலில் ஏற்படும் நோய்கள் குறையும். வயிற்றைச் சுத்தப்படுத்துவதில், வெந்நீருக்கு இணை எதுவும் இல்லை.

* வெந்நீர் அருந்துவதால் அதிகமாக வியர்வை ஏற்படும். நம் உடலின் செல்களில் உள்ள நீர் சத்து மற்றும் உப்புச் சத்து முதலான கழிவுகள் வெளியேறுகின்றன. இதனால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

* அளவுக்கு அதிகமான அசைவ உணவு அல்லது சுவீட், பூரி, வடை, போண்டா, பஜ்ஜி போன்ற எண்ணையால் செய்யப்பட்ட பலகாரங்கள் சாப்பிட்ட பிறகு, வெந்நீரை பருகினால் கொழுப்புகளை உடலில் சேரவிடாமல் கரைத்துவிடும். மேலும் வெந்நீர் இதயத்துக்கு மிகவும் நல்லது.

* மூக்கு அடைப்புக்கு சிறந்த மருந்து வெந்நீர் தான். வெந்நீரில் மஞ்சள் தூள் சேர்த்து ஆவி பிடித்தால் மூக்கடைப்பு குணமாகும்.

* வெயிலில் அலைந்து விட்டு வீட்டுக்கு வந்தவுடன் குளிர்ந்த நீரை அருந்துவதைவிட வெதுவெதுப்பான வெந்நீர் அருந்தினால் தாகம் உடனடியாக  தீரும்.

* கால் பாதங்களில் வலி ஏற்பட்டால் பெரிய பிளாஸ்டிக் டப்பில் வெந்நீர் ஊற்றி அதில் கல் உப்பைப் போட்டு, சிறிது நேரம் பாதத்தை வைத்து எடுத்தால் கால் வலி மறைவதோடு, பாதமும் சுத்தமாகிவிடும்.

* மழையில் நனைந்து வீட்டிற்கு வந்தால் தலை, உடம்பை துடைத்து விட்டு இரண்டு டம்ளர் வெந்நீரைக் குடித்தால் சளி, இருமல் போன்ற தொல்லைகள் வராது.

* தினமும் வெந்நீர் குடித்து வந்தால் உடல் சீராக செயல்படுவதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

Related Stories: