ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் மீண்டும் வைரம் கண்டுபிடிப்பு?: விளைநிலத்தில் இருந்து 30 கேரட் வைரக்கல் மீட்கப்பட்டு ரூ.1.2 கோடிக்கு விவசாயி விற்றுவிட்டதாக பரபரப்பு தகவல்..!!

கர்னூல்: ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் விவசாயி ஒருவர் 30 கேரட் வைரத்தை தனது விளைநிலத்தில் மீட்டு 1.2 கோடி ரூபாய்க்கு விற்றுவிட்டதாக கூறப்படும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஜொன்னகிரி, துக்கிலி, மடிகேரா, பெகதிராய், பேராபலி, மஹாநந்தி மற்றும் மஹாதேவபுரம் கிராமங்களில் உள்ள வயல் பகுதிகளில் மழைக்கு பின்னர் வைரக்கற்கள் தானாகவே வெளியே வரும் என அப்பகுதி மக்கள் நம்புவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் 2019ம் ஆண்டில் விவசாயி ஒருவர் 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான வைரத்தையும், கடந்த ஆண்டு 2 விவசாயிகள் 2 விலைமதிப்பற்ற வைர கற்களையும் கண்டுபிடித்து உள்ளூர் வணிகர்களிடம் நல்ல தொகைக்கு விற்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது. 

இந்த வைரம் கிடைப்பதை உறுதி செய்யும் விதமாக சிலர் அன்றாட வேலைகளை ஒதுக்கிவிட்டு, வயல்வெளிகளில் தற்காலிக கூடாரங்கள் அமைத்து தொடர்ந்து தேடி வரும் நிகழ்வுகளும் நாள்தோறும் கண்கூடாகி வருகிறது. இந்நிலையில் விவசாயி ஒருவர் தனது விளைநிலத்தில் 30 கேரட் வைரத்தை கண்டுபிடித்ததாகவும் அதனை உள்ளூர் வைர வியாபாரியிடம் 1.2 கோடி ரூபாய்க்கு விற்றுவிட்டதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இந்த செய்தி சமூக வலைத்தளங்களிலும் வேகமாக பரவி வருகிறது. இதுகுறித்து கர்னூல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பக்கிரப்பாவிடம்  கேட்ட போது, மூத்த அதிகாரி ஒருவர் கூறியதின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகிறோம் என்றார். அதேசமயம் விலைமதிப்பற்ற வைரக்கற்களை மீட்ட உண்மை சம்பவங்களை இதுவரை கேள்விப்பட்டதில்லை என்று அப்பகுதி போலீசார் தெரிவிக்கின்றனர். 

Related Stories: