ஆயுள் வளர்க்கும் ஆட்டுப்பால்

நன்றி குங்குமம் தோழி

“அண்ணல் காந்தி குடிச்சதெல்லாம் ஆயுள் கொடுக்கும் ஆட்டுப்பால்” என்று ரஜினி ஒரு படத்தில் பாடி நடித்திருப்பார். பிறந்த குழந்தை முதல் முதியோர்கள் வரை பால் அத்தியா வசியமான ஒன்று. நம் நாட்டைப் பொறுத்தவரை, கால்சியம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கு, மாட்டுப்பாலைத்தான் பரவலாக பயன்படுத்துகிறோம்.

சமீப காலமாக பால் மற்றும் பால்பொருட்களினால் ‘லேக்டோஸ் சகிப்புத்தன்மையின்மை’யால்(Lactose Intolerence), நிறையபேர் செரிமானக்கோளாறுகளால் பாதிப்படைவதைப்பற்றி நிறைய கேள்விப்படுகிறோம். இவர்களுக்கு, உணவியல் நிபுணர்கள் பால்பொருட்களுக்கு மாற்றாக சோயா, பருத்தி, பாதாம், பிஸ்தா போன்ற தாவரங்களிலிருந்து எடுக்கப்பட்ட அல்லது ஆடு மற்றும் கழுதைப்பாலை பரிந்துரைக்கிறார்கள். எனவே, மாட்டுப்பாலுக்கு மாற்று தேடவேண்டிய கட்டாயத்தில் இப்போது நாம் இருக்கிறோம்.

அந்த வகையில் மற்ற மாற்றுப் பொருட்களைவிட ஊட்டச்சத்து மிக்கதும், சில உடற்கூறு பண்புகள், எளிதில் செரிமானம் மற்றும் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கக்கூடியதுமான ‘ஆட்டுப்பால்’, மாட்டுப்பாலுக்கு இணையாக சிறந்தது என்று கூறும் உணவியல் நிபுணர் மீனாட்சி பஜாஜ், ஆட்டுப்பாலின் மருத்துவ குணங்கள் பற்றி விளக்குகிறார்…

“உலகம் முழுவதும் பால் உற்பத்தியை அதிகரிக்க, கறவைப் பசுக்களுக்கு மீளுருவாக்க ஹார்மோன் (rBGH) சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது மனிதர்களின் ஆரோக்கியத்தை பாதிக்கும் வாய்ப்ப்பை அதிகரிக்கச் செய்கிறது.   ஆனால், ஆடுகளுக்கு, பொதுவாக வளர்ச்சி ஹார்மோன்கள் சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என்பதால்,  ஆட்டுப்பால்,  மாட்டுப்பாலைவிட குறைந்த நச்சுத்தன்மை உடையதாய் இருக்கிறது.

இதுவே நமக்கு கூடுதல் நன்மை. தவிர, A1, A2 போன்ற சர்ச்சையும் ஆட்டுப்பாலில் கிடையாது என்பதால் தாய்ப்பாலுக்கு மாற்றாகவும் குழந்தைகளுக்கு தரலாம். மோனோ மற்றும் பாலிஅன்சேச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் நிறைந்த ஆட்டுப்பால் செரிமான சக்தி நிறைந்தது. ஆட்டினுடைய பால், தயிர், பாலாடை மற்றும் பால்பவுடர் போன்றவை, மனித ஊட்டச்சத்து தேவைகளில்,  மூன்று மடங்கு அதிக முக்கியத்துவத்தை கொண்டுள்ளன.

ஆட்டுப்பால் உற்பத்தியில் மிகப்பெரிய புரட்சி உண்டாக்க வேண்டிய கட்டாயத்தில் வளரும் நாடுகள் இருக்கின்றன. அதற்கு காரணம்,

1. வளரும் நாடுகளில் உள்ள மக்களின் மிகைப்பட்டினி மற்றும் ஊட்டச்சத்துப் பற்றாக்குறைத் தேவையை, மாட்டுப்பாலைக்காட்டிலும், ஆட்டுப்பால் பூர்த்தி செய்கிறது.

2. மேலும், மாட்டுப்பால் ஒவ்வாமை மற்றும் இரைப்பை, குடல் கோளாறுகள் ஆகியவற்றால்  பாதிக்கப்பட்ட மக்களுக்கு சிகிச்சை அளிப்பது வளரும் நாடுகள் சந்தித்து வரும் சவாலாக இருக்கிறது.

3. அடுத்து, வளர்ந்து வரும் நாடுகளில், நுகர்வோர் சந்தையில், செரிமானப் பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட மக்களின் மாற்றுத்தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய நிலை.

இந்த மூன்றில் முதல் பிரச்னையை எடுத்துக் கொண்டால், ஆட்டுப்பால் உற்பத்தியை அதிகரிக்க குறிப்பாக வளரும் நாடுகளில் பால் வளர்ப்பாளர்களிடத்தில், உணவு, மரபியல் பற்றிய விழிப்புணர்வு கல்வியை மேம்படுத்த வேண்டும்.இரண்டாவது பிரச்னைக்கு முதலில் ஆட்டுப்பால் நுகர்வின் மூலம் கிடைக்கக்கூடிய நன்மைகள் பற்றியும், மாட்டுப்பாலினால் விளையும் ஒவ்வாமைப் பிரச்னைகள் மற்றும் ஆடு, மாடுகளிலிருந்து உடற்கூறியல், உடலியல் மற்றும் உயிர்வேதியியல் ஆகியவற்றில் எப்படி பல தனிப்பட்ட வித்தியாசங்களைக் கொண்டுள்ளது;  இந்த தனித்தன்மை மனித ஊட்டச்சத்துக்கான பல பிரத்யேக மருத்துவ பலனை ஆதரிக்கிறது போன்ற சந்தேகங்களை தீர்க்கும் வகையில் ஒரு நடுநிலையான மருத்துவ ஆய்வு மேற்கொள்ளப்பட்டு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

மூன்றாவது, பிரச்னைக்கு வருவோம்.  உதாரணத்திற்கு, பிரான்ஸ் போன்ற ஒரு சில நாடுகளில் ஆட்டுப்பால் உற்பத்தி, செயலாக்கம், சந்தைப்படுத்தல், ஊக்குவிப்பு மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றின் ஒரு நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட தொழிற்துறைக்கு முன்னோடியாக அமைந்துள்ளது, இது மற்ற நாடுகளில் இல்லாத ஒரு வலுவான நுகர்வோர் வாடிக்கையாளர்களை உருவாக்கியுள்ளது. பிரான்ஸைப் போல பிற நாடுகளும் இந்த முறையைப் பின்பற்றினால், ஆட்டுப்பால் உற்பத்தியை அதிகரிக்க முடியும்.

ஆட்டுப்பாலுக்கும் மாட்டுப்பாலுக்கும் உள்ள வித்தியாசத்தையும், ஆட்டுப்பாலின் மூலம் கிடைக்கும் மருத்துவ நன்மைகளையும்  தெரிந்து கொள்வோம்.

மாட்டுப்பால் அருந்தும்போது, தோலில் அரிப்பு, தடிப்பு, மற்றும் சிலருக்கு ஆஸ்துமா, மலச்சிக்கல், வயிற்று உப்புசம், செரிமானக்கோளாறு, மூச்சுத்திணறல் போன்ற பிரச்னைகளில் இருப்பவர்கள், எந்த அச்சமுமின்றி ஆட்டுப்பாலை அருந்தலாம்.  இதற்கு காரணம், இதில் குறைவான ஆல்ஃபா S1 கேசின் (Alpha S1 Casein) இருப்பது முக்கிய காரணம்.

மனித உடலின் வளர்ச்சி மற்றும் பராமரிப்புக்கு புரோட்டீன் அவசியம் என்றாலும், இந்த ஆல்ஃபா S1 கேசின் என்னும் புரோட்டீன் காரணமாக பெரும்பாலோருக்கு மாட்டுப்பால் ஒவ்வாமை ஏற்படுவதாகவும் ஆராய்ச்சி கூறுகிறது. 200 மிலி ஆட்டுப்பாலில் சுமார் 6 கிராம் உயர்தர புரோட்டீன் கிடைத்தாலும், ஆட்டுப்பாலில் இந்த ஆல்ஃபா S1 கேசின் அளவு குறைவாக இருக்கிறது.

இதயத்திற்கு பலம் தரக்கூடிய மெக்னீசியத்திற்கு முக்கிய ஆதாரமாக ஆட்டுப்பால் இருக்கிறது. ரத்தம் உறைவதையும், ரத்தக் கொழுப்பு அதிகரிப்பதையும் தடுக்கும் ஆற்றல் கொண்ட மெக்னீசியம் வைட்டமின் டி யுடன் இணைந்து இதயத்துடிப்பை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது.  மேலும் நிறைவுற்ற கொழுப்பு மற்றும் கொழுப்பு அமிலங்கள் உள்ள ஆட்டுப்பாலை அருந்துவதால், நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிப்பதால் ஆட்டுப்பால் இதயத்திற்கு நண்பன் என்று சொல்லலாம்.

ஆட்டுப்பாலில் உள்ள Oligosaccharides  என்ற சேர்மங்களால், இதற்கு இயல்பாகவே அழற்சி எதிர்ப்பு குணம் இருக்கிறது. இது குடல்அழற்சி நோய்க்கு எதிராக வேலை செய்வதன் மூலம் குடல் வீக்கத்தை குறைப்பதாக ஒரு ஸ்பானிஷ் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு கப் ஆட்டுப்பாலில் 329 மிலி கிராம் கால்சியம் உள்ளது. இது மாட்டுப்பாலில் உள்ளதைவிட அதிகம். கூடுதலாக, பாலில் உள்ள கால்சியத்தை உறிஞ்சத் தேவையான வைட்டமின்’ டி’ ஊட்டச்சத்தும்  இருப்பதால், எலும்புகளுக்கு அதிக வலிமையைக் கொடுக்கிறது. எலும்புப்புரை நோய் உள்ள நோயாளிகளுக்கு எலும்பு முறிவை தடுக்கும் திறன் ஆட்டுப்பாலுக்கு இருப்பது ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இரும்பு, மெக்னீசியம், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற கனிமச்சத்துக்கள் ஆட்டுப்பாலில் அதிக அளவில் இருப்பது ஒரு சிறந்த வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது. ஆரோக்கியமான எடைஇழப்பிற்கு உதவக்கூடிய புரதம் மற்றும் கால்சியம் மிகுந்துள்ளது.மாட்டுப்பாலைவிட, ஆட்டுப்பாலில் குறைந்த அளவே கொழுப்பு உள்ளதால் எளிதில் செரிமானம் ஆகிவிடும்.  செரிமான மண்டலத்தை அடைவதற்கு முன்பாகவே மென்மையான தயிராக மாறிவிடுவதால்,  மற்ற பாலை சாப்பிடுவதால் ஏற்படும் நெஞ்செரிச்சல் இந்த பாலை குடிப்பதால் வராது.

ஆட்டுப்பாலில் இருக்கும்  லிபிட்டுகள் மனப்பதற்றத்தை குறைப்பதையும், மேலும் இதில் உள்ள லினோலிக் அமிலம் மூளை

வளர்ச்சியைத் தூண்டுவதாகவும் ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.ஆட்டுப்பாலில்  உள்ள சிறப்பம்சமான இரும்பு உறிஞ்சும்திறன்,  ரத்த சோகையை தடுக்க உதவுகிறது. தாய்ப்பாலைப்போலவே, ஆட்டுப்பாலிலும் உள்ள காரஅமிலத்தன்மை  குழந்தைகளின் உடலில்  pH அளவை சமநிலையில் வைத்துக் கொள்ள உதவுகிறது.

ஆட்டுப்பாலை அருந்துவதால், அதிலிருக்கும் அத்தியாவசிய  கொழுப்பு அமிலங்கள் மற்றும் ட்ரை கிளிசரைடுகள் தோலுக்கு நல்ல பளபளப்பைத் தரக்கூடியது.  தோலுக்கு மட்டுமல்லாது,  நல்ல முடி வளர்ச்சிக்கும்  pH அளவு சமநிலையில் இருப்பது முக்கியம்.  இதனால்தான் இப்போது ஷாம்பு, சோப்பு போன்ற அழகுப்பராமரிப்பு பொருட்களில் ஆட்டுப்பாலை சேர்ப்பது அதிகரித்துள்ளது.

இப்படி எல்லா வகையிலும் ஆட்டுப்பால், மாட்டுப்பாலைவிட  சிறப்பாக  இருக்கும்போது, நாம் ஏன் தேசப்பிதாவைப் போல ஆட்டுப்பால் அருந்தி அறிவை வளர்த்துக் கொள்ளக்கூடாது.               

ஆட்டுப்பாலிலிருந்து தயாரித்த சீஸ் வைத்து செய்யக்கூடிய ரெசிபியை சமையல்

நிபுணர் நித்யா நடராஜன் இங்கே

விளக்குகிறார்….

க்ரீமி பென்னே பாஸ்தா வித் கோட் சீஸ்

ஒயிட் சாஸுக்குத் தேவையான பொருட்கள்

மைதா - 1 டேபிள் ஸ்பூன்

வெண்ணெய் - 1 டீஸ்பூன்

பால் - 1 கப்

வெள்ளை மிளகுத் தூள் - ¼ டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு.

ஒயிட் சாஸ் செய்முறை

ஒரு பாத்திரத்தில் மைதா சேர்த்து சிறிது பால் ஊற்றி கட்டியில்லாமல் கலந்து வைத்துக் கொள்ளவும். பின் அடுப்பில் நான்ஸ்டிக் தவாவை வைத்து வெண்ணெய் சேர்த்து பிறகு மைதா கலவையை சேர்க்கவும். அதில் மீதி உள்ள பால், உப்பு, வெள்ளை மிளகுத் தூள் சேர்த்து நன்கு கட்டியில்லாமல் 10 நிமிடம் கிளறி வேகவைத்து இறக்கவும்.

பாஸ்தாவிற்கு தேவையான பொருட்கள்

கோட் சீஸ் - 1 கப் (துறுவியது)

வெங்காயம் - 1 பெரியது

(பொடியாக நறுக்கியது)

தக்காளி - 1 (பெங்களூர் தக்காளி பொடியாக நறுக்கியது)

பென்னே பாஸ்தா (கோதுமை) - 1 கப் (வேகவைத்து குளிர்ந்த நீர் ஊற்றி வடித்து எடுத்து வைக்கவும்)

வெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்

கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)

வெங்காயத்தாள் - 1 கைப்பிடி

சில்லி ஃப்ளேக்ஸ் - 1 டீஸ்பூன் (வரமிளகாயை மிக்சியில் கொர கொரப்பாக பொடித்தால் சில்லி ஃப்ளேக்ஸ் ரெடி)

மிளகுத் தூள் - ½ டீஸ்பூன்.

செய்முறை

ஒரு நான்ஸ்டிக் தவாவை அடுப்பில் வைத்து வெண்ணெய் சேர்த்து, பிறகு அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளி, கேரட், மிளகுத்தூள், உப்பு, சில்லி ஃப்ளேக்ஸ் ஆகியவற்றைச் சேர்த்து 5 நிமிடம் வதக்கி, பின் அதில் வேகவைத்த பாஸ்தா, ஒயிட் சாஸ் ஆகியவற்றை சேர்த்து கிளறவும். பின் கடைசியாக வெங்காயத்தாள் மற்றும் துறுவிய கோட் சீஸ் சேர்த்து கிளரி இறக்கி சூடாக பரிமாறவும். குழந்தை களுக்கு பாஸ்தா மிகவும் பிடிக்கும். இது கோதுமையால் செய்த பாஸ்தா என்பதால் பெரியவர்கள், வயதானவர்கள் என அனைவருமே சாப்பிடலாம்.

மகாலட்சுமி

Related Stories: