வாழ்வென்பது பெருங்கனவு!

நன்றி குங்குமம் தோழி

மலர்கள் மனிதர்களை தன் அழகால் மகிழ்விப்பதோடு மனதுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்து நோய்களைக் குணமாக்கும் சக்தி கொண்டது. மனதில் உண்டாகும் குறைபாடுகளே நமது உடலில் நோயை ஏற்படுத்துகின்றது.

அதனை மனவளக்கலைப் பயிற்சி மற்றும் மலர் மருந்துகளின் துணையால் போக்குவதன் மூலம் உடலை பாதிக்கும் நோய்களைக் குணப்படுத்தி பலரின் இருண்ட வாழ்வில் ஒளியேற்றி வைத்துக்கொண்டிருக்கும் மலர் மருத்துவர் கவுரி தாமோதரன் தன் வாழ்வின் பெருங்கனவை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

‘‘ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேலைப் பற்றி எல்லோரும் கேள்விப்பட்டிருப்போம். லண்டனைச் சேர்ந்த இவர் போரில் காயமடைந்த வீரர்களை தேடிச் சென்று அவர்களுக்கு மருத்துவ உதவி அளித்ததுடன் ஆறுதல் வார்த்தைகளும் சொல்வார்.  இரவு நேரங்களில் லாந்தர் விளக்குடன் அவர் போர்ப்

பகுதிகளுக்குச் செல்லும்போது அவர் வருகைக்காகவே காயமடைந்த போர் வீரர்கள் எதிர்பார்த்து காத்திருப்பார்களாம்.

அவர் இதமாக பேசுவதனாலேயே பாதி நோய் குணமாகிவிடுமாம். அதனாலேயே அவருக்கு நைட்டிங்கேல் என்ற பெயர் வழங்கலாயிற்று. பெரும் பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த அவர் செவிலியர் படிப்பைத் தேர்ந்தெடுத்து அப்பணியை தன் வாழ்நாள் முழுக்க சிறப்பாகச் செய்ததாலேயே அவர் பிறந்த நாளை செவிலியர் தினமாக அனுசரித்து வருகிறோம்.

‘‘அந்த ஃபிளாரன்ஸ் நைட்டிங்கேல் போன்று ஆகவேண்டும் என்பதே என்னுடைய சிறுவயது கனவாக இருந்தது. சொந்த ஊர் வேலூர் மாவட்டம் காட்பாடி. அப்பாவுக்கு ஆந்திராவில் ரயில்வே பணி. நாங்க ஆந்திராவில் தான் வசித்து வந்தோம். ஆந்திராவில் உள்ள முண்டக்கல் என்ற இடத்தில்தான் என்னுடைய சிறு வயது முதல் இளமைக்கால வாழ்க்கை கழிந்தது.

எங்களுடையது நடுத்தர குடும்பம். என்னோடு பிறந்தவர்கள் ஒரு அண்ணன், ஒரு தங்கை மற்றும் தம்பி. செவிலியர் ஆக வேண்டும் என்பது என கனவாக இருந்ததால் பார்மஸி குறித்த மருத்துவப் படிப்பை படித்தேன். படித்து முடித்ததும் திருமணம். சிறு வயதில் ஒரு கூட்டுக்குடும்பமாக வாழவேண்டும் என்பது எனது விருப்பமாக இருந்தது.

அதற்கு ஏற்றாற்போல் 40 பேர் கொண்ட மிகப் பெரிய கூட்டுக்குடும்பத்தில் திருமணமானது. எனக்கு இரண்டு மகன்கள். மூத்தவன் நியூரோ சர்ஜன் டாக்டர் லண்டனில் பணி செய்கிறான். இளையவன் சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட். பசங்க சிறியவர்களாக இருக்கும் வரை எனக்கு வீட்டில் நேரம் போவதே தெரியாது. அவர்கள் வளர்ந்ததும் நிறைய நேரம் இருப்பது போல் உணர்ந்தேன்.

என் மனதைப் புரிந்து கொண்டு என் கணவரும் விரும்பமான துறையைத் தேர்ந்தெடுத்து படிக்க சொன்னார். சென்னை பல்கலைக்கழகத்தில், தொலைதூரக் கல்வியில் பி.எஸ்.சி, எம்.எஸ்.சி சைக்காலஜி படித்தேன். அடுத்து வேலூர் சி.எம்.சி-யில் கவுன்சிலிங் கைடன்ஸ் ஸ்கில்ஸ் பற்றி படிக்கும் வாய்ப்பு கிடைச்சது.

அதாவது எல்லா நோயாளிகளையும் சந்தித்து கவுன்சிலிங் கொடுப்பது. ஒரு பக்கம் பயிற்சி எடுத்துக் கொண்டே சைக்காலஜியும் சேர்த்து தனியாக பிராக்டீஸ் செய்ய ஆரம்பித்தேன். இதற்கிடையில் சிறுதானிய உணவுகளின் மீது எனக்கு ஆர்வம் ஏற்பட்டது. என் பெரிய மகனுக்கு அடிக்கடி சளித்தொந்தரவு ஏற்படும். ஹோமியோபதி சிகிச்சை அவனுக்கு நல்ல பலனை கொடுத்தது.

இதற்கிடையில் டாக்டர் எட்வர்ட் பாட்ச் (Dr Edward Batch) என்ற இங்கிலாந்து நாட்டை சேர்ந்த மருத்துவர் பற்றி கட்டுரை படிச்சேன். அதில் அவருக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதாகவும், சில மாதங்களில் அவர் இறந்துவிடுவார் என்றும் மருத்துவர்கள் கூறிவிட்டனர். மனமுடைந்த அவர் காட்டுவழியாக சென்றுகொண்டிருந்தபோது அங்குள்ள மலர்கள் அவரிடம் பேசியதாம்.

அப்போது, ஒவ்வொரு மனிதனின் நோய்க்கு உடல் மட்டுமல்லாமல் அவனுடைய ஆத்மாவுடனும் சம்பந்தம் உண்டு என்று அறிந்தார். பிரபஞ்சம் முழுவதும் அதிர்வுகளால் இணைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொருவரின் தனித்தன்மையையும் அறிந்து அதற்கேற்ப மருந்து கொடுத்தால் பலன்அளிக்கும் என்றும் அவர்  நம்பினார். அதன் பிறகு இயற்கை தந்துள்ள பல அரிய மலர்களை ஆய்வு செய்ய ஆரம்பித்தார்.

1930-ல் அவரது ஆராய்ச்சி ஒரு முடிவுக்கு வந்தது. அவரின் ஆய்வில் அவரை வைத்தே சோதனை செய்தார். முடிவு புற்றுநோயில் இருந்து முற்றிலும் விடுபட்டார். அதன் விளைவாக 38 விதமான மலர் மருந்துகளை கண்டுபிடித்து அவற்றை தயார் செய்தார். இவரின் முயற்சி என்னை மிகவும் பாதித்தது. அதனால் நான் மலர் சார்ந்த மருத்துவத்தை முழுமையாக படிச்சேன். தற்போது சிகிச்சையும் அளித்து வருகிறேன்.

மனதுக்கு இதம் கொடுக்கக்கூடியது. இந்த மருந்தினை ஒரு முறை எடுத்துக் கொண்டாலே 24 மணி நேரத்தில் நோயிலிருந்து குணம் கிடைக்கும்.

ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் போர் வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கும்போது மிகவும் இதமாகப் பேசி மருத்துவம் பார்ப்பார்கள். அவர்களைப் போன்று நானும் இருக்கவேண்டும் என்ற என் வாழ்வின் பெருங்கனவு இந்த மலர் மருத்துவ சிகிச்சை அளிப்பதன் மூலம் கிடைத்துள்ளது.

நோய்களுக்கு மனமே அடிப்படையாக இருக்கிறது. மனநிலையில் மாற்றம் ஏற்பட்டால் உடல்நிலை சீராகும் என்கிறார் டாக்டர் பாட்ச். குறிப்பாக கோபம், பொறாமை, அச்சம், பகை உணர்ச்சி போன்றவற்றால் ஏற்படும் பின்விளைவுகள் உடல்நலத்தை அதிகமாகவே பாதிக்கிறது. இதற்கு மலர் மருத்துவம் சிறப்பான தீர்வைத் தரும். மரபு நோய்கள், நாள்பட்ட நோய்களையும்  இதில் குணப்படுத்த முடியும்’’ என்றார் கவுரி தாமோதரன்.

தொகுப்பு: தோ.திருத்துவராஜ்

படங்கள்: ஸ்ரீதர்

Related Stories: